Published:Updated:

கொட்டும் மழையில் ஈழ முழக்கம்!

பாதியில் முடிந்த கோவை மாநாடு!

##~##
கொட்டும் மழையில் ஈழ முழக்கம்!

ழத்துக்கு எதிராக இலங்கைதான் கோரமுகம் காட்டுகிறது என்றால், இயற்கையுமா வஞ்சனை செய்ய வேண்டும்? கோவையில் எழுச்சியுடன் நடத்தப்பட்ட 'ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை மாநாடு’ அடித்து நொறுக்கிய மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது மாபெரும் சோகம்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இனப் படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் ஈழ ஆதரவு அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து கோவை வ.உ.சி. மைதானத்தில் கடந்த 6-ம் தேதி, 'ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு’ ஒன்றை நடத்தினர். தூக்குக் கயிற்றை நோக்கியிருக்கும் மூன்று பேரை மீட்டெடுப்பதற்கான முயற்சியும் இந்த மாநாட்டின் மற்றொரு நோக்கம். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்க, 'செங்கொடி அரங்க’ மேடையில் எழுச்சியுடன் ஆரம்பமானது மாநாடு. அது மழை வரும் மாலைப்பொழுது என்பதைப் பொருட்படுத்தாமல் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர்.

கொட்டும் மழையில் ஈழ முழக்கம்!

பழ.நெடுமாறன் தன் சாந்தமான குரலில், ''லட்சக்கணக்கானோர் இனப் படுகொலையில் மாண்டது, இன்னும் பல ஆயிரக்கணக்கான மக்கள் அடிப்படை வாழ்வுரிமைகூட இல்லாமல் முகாம்களில் துன்புற்று வருவது எல்லாம் மாபெரும் துயரம். நம் தமிழர்களை மீட்டெடுப்பது நமது கடமை. அதேபோல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து 'மரண தண்டனை’ என்ற ஒன்றே தூக்கி எறியப்பட வேண்டும்'' என்று அழுத்தமாக சொன்னார்.

கொட்டும் மழையில் ஈழ முழக்கம்!

மைக்கை இறுகப்பற்றிய புதுக்கோட்டை பாவாணன் முகத்தில் அத்தனை ரௌத்திரம். ''காங்கிரஸை வளர்த்தது மகாத்மா காந்தி. அந்த மனிதர் 'யாரையும் தூக்கில் போடக் கூடாது’ என்று மனிதநேயம் பேசினார். ஆனால், அவர் வளர்த்துக் கொடுத்த காங்கிரஸ் கட்சி மீது ஏறி அமர்ந்து சொகுசு சவாரி செய்யும் நீங்கள் ஏன் தூக்குத் தண்டனையை தூக்கிக்கொண்டு திரிகிறீர்கள்? யாரைப் பார்த்து 'கொலையாளி’ என்று கொக்கரிக்கிறீர்கள்? அன்று அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தவர்கள்  கொலையாளி அல்லவா? இன்று ஈழத்தில் யுத்தம் உச்சத்தில் இருந்தபோது வேடிக்கைப் பார்த்தபடி நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை அழித்தொழித்தவர்கள்  கொலையாளி அல்லவா? எங்கள் வீட்டுப் பிள்ளைகள் பேரறிவாளன், முருகன், சாந்தனின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட அதே தினத்தில்தான், அப்சல் குருவின் கருணை

கொட்டும் மழையில் ஈழ முழக்கம்!

மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால், அப்சலின் தூக்குத் தண்டனைக்கு நாள் குறிக்காதவர்கள் எங்கள் பிள்ளைகளை சாகடிக்க மட்டும் நாள் குறித்தது என்ன நியாயம்? 'அப்சல் குருவை தூக்கில் போட்டால் காஷ்மீர் பற்றி எரியும்.’ என்று குலாம்நபி ஆசாத் பூச்சாண்டி காட்டினால் நடுங்குகிறீர்கள். எங்கள் பிள்ளைகளை சாவுக்கு தாரைவார்க்க வேண்டிய சூழல் வந்தால் நாங்கள் கைகட்டி நிற்போம் என்று நினைத்தாயோ? பொங்கி எழும் தமிழ்நாடு'' என்று அவர் முடித்தபோது கொட்டிக் கொண்டு இருந்தது மழை.

அடைமழையில்,  நாற்காலிகளையே குடையாகப் பிடித்தபடி 'வானம் வெறிக்கும்’ என்ற நம்பிக்கையில் நின்றது மொத்த கூட்டமும். அடுத்தடுத்து தலைவர் களும் பேச முயற்சித்தார்கள். ஆனால், மழையின் சீற்றம் அதிகரிக்க... மாநாடு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தலைவர்கள் இறங்கி நடக்க ஆரம்பித்ததும் மேடையின் முன்புறம் கூடிய இன உணர்வுமிகு இளைஞர்கள், 'அணுவும் இல்லை, ஆயுதமும் இல்லை... ஆனாலும் சிறை தகர்ப்போம்! மூவரை காப்போம்! தம்பியே ஓடிவா இந்தத் தம்பிகளைக் காக்கவா!’ என்று மழை மறையும் வரை விண் ணதிர குரல் கொடுத்தது நெகிழ்வான காட்சி.

மறுநாள் 'இதே கோவையில் மீண்டும் மாநாட்டை நடத்துவோம். இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், 2013-ல் இலங்கையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டை கனடா போல் இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் புறக்கணிக்க வேண்டும், இலங்கையில் விரிவாக மேற்கொள்ளப்படும் ராணுவ மயமாக்கல், சிங்களமயமாக்கல் போன்ற இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உலக சமுதாயம்'' போன்ற அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரான அர்ஜுன் சம்பத், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருக்கும் இந்து அமைப்புகளின் தலைவர்களை இலங்கை தமிழர்களைக் காக்கும் நோக்கில் ஒருங்கிணைத்து 'இலங்கை இந்து மக்கள் பாதுகாப்புப் பேரவை’ என்ற ஒன்றை விரைவில் மதுரையில் துவக்குகிறார். அவரிடம் பேசியபோது... ''இலங்கையில் தமிழ் என்கிற  இனம், மொழிக்கு எதிரான அட்டூழியங்கள் மட்டும் நடக்கவில்லை 'இந்து’ என்கிற ஒரு மதத்துக்கு எதிராகவும் நடக்கிறது. இலங்கையை ஆளும் நபர்களை கடந்த 60 ஆண்டுகளாக ஆட்டிவைப்பது அங்கிருக்கும் புத்த குருமார்கள்தான். சுமார் 1,400 இந்து சமய கோயில்கள் அழிக்கப்பட்டு உள்ளன. எனவே, இலங்கை வாழ் தமிழர்களாகிய இந்துக்களை காக்கத்தான் இந்த முயற்சி. அதற்காக அங்கிருக்கும் தமிழர்களாகிய கிறிஸ்தவ மக்கள், இஸ்லாமியர்களின் நலனில் எங்களுக்கு அக்கறை இல்லை என்று தனிச் சாயம் பூச வேண்டாம்'' என்கிறார்.

- எஸ்.ஷக்தி

படங்கள்: வி.ராஜேஷ்,

மகா.தமிழ்பிரபாகரன்