Published:Updated:

மின் இணைப்பு துண்டிப்பு அபாயம்!

வாரியத்துடன் மல்லுக்கட்டும் விசைத்தறியாளர்கள்

##~##
மின் இணைப்பு துண்டிப்பு அபாயம்!

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை, சங்ககிரி, இளம்பிள்ளை, வேம்படிதாளம் ஆகிய ஏரியாக்களில் ஏராளமான சிறு விசைத் தறிகள் இயங்கி வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில், இந்தத் தறி உரிமையாளர்களுக்கு மின் விநியோகத்தில் சலுகை வழங்கப்பட்டது. அதாவது சிறு விசைத்தறி உரிமையாளர் ஒவ்வொருவருக்கும், ஒரு தறிக்கு மட்டும் மாதம் தோறும் முதல் 500 யூனிட் மின்சாரம் இலவசம். 500 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாயும், அதற்கு மேல் பயன்படுத்தினால், கூடுதல் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, அந்தத் தறி உரிமையாளர்களுக்கு மின் இணைப்பு தொடர்பாக புதிய பிரச்னை! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இளம்பிள்ளை பகுதி விசைத்தறி உரிமையாளரான பன்னீர்செல்வம், ''சிறு விசைத்தறி உரிமையாளர்களில் பெரும்பாலானவங்க ஏழைகள்தான். அதனால் விசைத்தறிக்கு அவங்க ளால தனிக்கூடம் அமைக்க முடியறதில்லை. அவங்க வசிக்கும் வீட்டின் ஒரு பகுதியிலேயே தறியை இயக்குறாங்க. ஆரம்பத்துல, விசைத்தறி இயக்குறதுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பிச்சபோது, 'ஏற்கெனவே உங்க வீட்டு பயன்பாட்டுக்குன்னு ஒரு மின் இணைப்பு வைச்சிருக்கீங்க. ஒரு வீட்டுக்கு இரண்டு மின் இணைப்பு தர முடியாது. அதனால, ஏற்கெனவே வீட்டுக்கு வாங்கின மின் இணைப்பைத் துண்டிச்சுட்டு, விசைத்தறிக்கான இணைப்பு வாங்கிக்குங்க’ என்று சொல்லித்தான் புது இணைப்பு கொடுத்தாங்க. 'அப்ப வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சாரத்துக்கு நாங்க என்ன பண்றது?’ன்னு கேட்டதுக்கு, 'அதை தறிக்கான இணைப்புல இருந்து எடுத்துக்கங்க’ன்னு சொன்னாங்க. அந்த சமயத்துல தறிகளுக்கு மானிய மின்சாரத் திட்டம் அமலுக்கு வரவில்லை. தொழில் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம், வீட்டு உபயோகத்துக்கான கட்டணத்தைவிட அதிகம். இருந்தாலும் வேற வழியில்லாம அதைத்தான் வீட்டுக்கும் பயன்படுத்த வேண்டிய சூழல். இரு இணைப்பு வைச்சுக்க அதிகாரிகள் அனுமதி மறுத்த நிலையில், வேறு வீடு கட்டவும் வசதி இல்லாததால், அதை சகிச்சுகிட்டோம்.

மின் இணைப்பு துண்டிப்பு அபாயம்!

கடந்த ஆட்சியின்போது, தறிகளுக்கு மாதம்தோறும் 500 யூனிட் பயன்பாடு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டது. அதைக் காரணமா வச்சு, தறி இணைப்பில் இருந்து வீட்டுக்கு மின்சாரம் எடுக்கக் கூடாது என்று இப்போது அதிகாரிகள் எங்களை நெருக்க ஆரம்பிச்சுட்டாங்க. அடிக்கடி ரெய்டு வர்ற அதிகாரிங்க, மின் இணைப்பையே துண்டிச்சிடுவோம்னு மிரட்டிட்டுப் போறாங்க. அதனால, பலரும் எப்போ என்ன நடக்குமோன்னு பயத்துல இருக்காங்க'' என்றார் விளக்கமாக.  

இளம்பிள்ளை வட்டார நுகர்வோர் கவுன்சில் தலைவர் சின்னசாமி, ''தொழில் இணைப்பில் இருந்து வீட்டு உபயோகத்துக்கு மின்சாரம் எடுப்பது தவறு என்று அதிகாரிங்க சொல்றது சரிதான். ஆனா, வீட்டு

மின் இணைப்பு துண்டிப்பு அபாயம்!

உபயோகத்துக்கு வாங்கியிருந்த இணைப்பைத் துண்டிக்க வச்சதே அவங்கதானே? இப்போ பிரச்னை கிளம்பின பிறகு, 'இப்பவாச்சும் வீட்டு உபயோகத்துக்கு தனி கனெக்ஷன் தாங்க’ன்னு கேட்டா... 'ஒரு கட்டடத்தில் ஒரு இணைப்பு மட்டும்தான் தர முடியும்’ன்னு பிடிவாதமா சொல்றாங்க. நடைமுறையில் உள்ள விதிகளை அதிகாரிங்க கெட்டியா பிடிச்சுக்கிட்டு, எங்களை அலைய விடாம... தறி உள்ள கட்ட டத்திலேயே, வீட்டு பயன்பாட்டுக்காக ஒரு துணை இணைப்பை வழங்க மின்வாரியம் முன்வரணும். இதன் மூலம் கிடைக்கும் டெபாசிட் பணம் மற்றும் மாத பயன்பாட்டு கட்டணம் எல்லாமே ஒரு வகையில மின் வாரியத்துக்கு கூடுதல் வருவாயைத்தானே உண்டாக்கும்'' என்று கேள்வி எழுப்பினார்.  

மின்வாரியத்தின் இந்த புதிய சவாலை எதிர்கொள்ள... சிறு விசைத்தறி உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து, தங்களது கோரிக்கையை  துண்டு பிரசுரங்களாக மக்கள் மத்தியில் விநியோகம் செய்து வருகின்றனர். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகின் றனர்.  

இந்த பிரச்னை குறித்து சேலம் அன்னதானப்பட்டி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் மணிவண்ணனிடம் பேசியபோது, ''மாநிலம் முழுக்க மின் பற்றாக்குறை நிலவும் சூழலில், எங்கெல்லாம் மின்விரயம் அல்லது திருட்டு நடக்கிறது என்று தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். மானியத் திட்டத்தில் விசைத்தறிக்குப் பெற்ற இணைப்பில், வீட்டுக்கு மின்சாரம் எடுத்தவர்களை அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கைச் செய்தனர். இதனால் தறி உரிமையாளர்கள் மின் வாரிய அதிகாரிகளை எதிரியாகப் பார்க்கிறார்கள். வாரிய விதிகளை நாங்கள் நடைமுறைப்படுத்தித்தான் ஆகவேண்டும். அதேநேரம், ஒரே வீட்டில் இரு இணைப்பு கள் தொடர்பான கோரிக்கைகள் எங்களிடமும் வந்துள்ளது. அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளோம். விதி மாற்றம் செய்யும் அதிகாரம் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம்தான் உள்ளது. கோரிக்கைகளை பரிசீலித்து மேலிடம் அனுமதி வழங்கினால் மட்டுமே ஒரு வீட்டுக்கு இரட்டை இணைப்பு வழங்க சாத்தியம் இருக்கிறது'' என்று விளக்கம் அளித்தார்.

இந்தப் பிரச்னையை மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கவனத்துக்கும் கொண்டு சென்று இருக்கிறோம். விரைவில் தீர்வு கிடைக்கும் என்றே நம்புவோம்!

- எஸ்.ராஜாசெல்லம்

படங்கள்: க.தனசேகரன்