Published:Updated:

பயமுறுத்தும் பாம்புகள்... ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்!

திருநின்றவூர் 'மழை' சோகம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
பயமுறுத்தும் பாம்புகள்... ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்!

ழைக் காலங்களில் சென்னை நகரச் சாலைகள் பல்லாங்குழி ஆகும்; போக்குவரத்து நொண்டி ஆடும்; கட்டுமரம், தெர்மக்கோல் என்று புற நகரில் தண்ணீர்வழிப் போக்குவரத்து தொடங்கும்.  இந்த வருடமும் மழைக்குப் பலியாகி நிற்கிறது திருநின்றவூர். மழை நின்று ஒரு வாரம் ஆகியும் பிரச்னை தீரவில்லை என்பதுதான் பெரும் சோகம். 

ஆவடியை அடுத்த திருநின்றவூரில் இருக்கும்  'பெரிய ஏரி’யைச் சுற்றி சுதேசி நகர், முத்தமிழ் நகர், பெரியார் நகர், கன்னிகாபுரம் போன்ற பகுதிகள் இருக்கின்றன. இந்த ஏரியாக்கள்தான் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கிறது.

தெருவழியே நீந்திச்(?) சென்றுகொண்டு இருந்த நிர்மலாதேவி நம்மிடம், ''நீச்சல் தெரியாதவங்க இந்த ஏரியாவுல குடியிருக்கவே முடியாது. பள்ளிக் கூடத்துக்குப் போற குழந்தைங்க யூனிஃபார்மை தலையில வைச்சுக்கிட்டு வெறும் உடம்போடு நீந்திப் போய், அந்தப் பக்கம் போய் மாட்டிக்கிறாங்க. அட்டைப் பூச்சி, மீன், பாம்புன்னு எல்லா ஜீவராசியும் எங்களோட வீட்டுக்குள்ளே குடி வந்துடுச்சு. கொஞ்ச நேரம் கை, காலை அசைக்காம வச்சாலே, அட்டைப் பூச்சி ரத்தத்தை எல்லாம் உறிஞ்சு எடுத்துடுது'' என்று வேதனைப்பட்டவர் நீச்சலைத் தொடர்ந்தார்.

பயமுறுத்தும் பாம்புகள்... ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்!

நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே கட்டு மரம், தெர்மக்கோல், காற்றடிக்கப்பட்ட டியூப் ஆகியவற்றில் சர்வ சாதாரணமாகப் பயணிக்கிறார்கள் ஏரியாவாசிகள். தெருவில், ஓடிக்கொண்டு இருக்கும் மார்பு அளவுத் தண்ணீரைக் கடக்க கம்புகளால் நடை மேம்பாலம் அமைத்து இருக்கின்றனர், ரீட்டா குடும்பத்தினர்.

பயமுறுத்தும் பாம்புகள்... ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்!

''20 வருஷமா இங்கே குடியிருக்கிறோம். ஒவ்வொரு வருஷமும் இதுதான் எங்க நிலைமை. இந்த நடை மேம்பாலம் கட்டுறதுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகுது. போன வருஷம் தண்ணிக்குப் பயந்து வீட்டுக்குள்ளே ஒண்டிக்கிட்ட பாம்பு ஒண்ணு 10 வயசுப் பையனைக் கடிச்சு, அவன் துடிதுடிச்சு செத்துப் போயிட்டான். அதுக்கப்புறமா அந்தக் குடும்பமே இந்த ஏரியாவைக் காலி பண்ணிட்டுப் போயிடுச்சு. ஏரியாவுல எங்கே திரும்பினாலும் தண்ணி தேங்கி நிற்கிறதால சின்னக் குழந்தைங்களை வெளியே அனுப்பவே முடியலை'' என்ற ரீட்டா வீட்டில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியைத் தொடர்ந்தார்.

பயமுறுத்தும் பாம்புகள்... ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்!

வீட்டைச் சூழ்ந்து நிற்கும் தண்ணீரை சோகமாகப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த அஞ்சலி, ''ஏரிக்குள்ளே வீட்டைக் கட்டிக்கிட்டு இப்ப தண்ணி வருது, பாம்பு வருதுன்னு ஏன் புலம்புறீங்க?ன்னு அதிகாரிங்க எகத்தாளமாப் பேசுறாங்க. நாங்க என்ன புறம்போக்கு இடத்துலயா குடியிருக்கோம்? அரசாங்கத்துக்கு மாசா மாசம் பணம் கட்டித்தானே குடியிருக்கோம்'' என்றார் ஆதங்கத் துடன்.

12-வது வார்டு கவுன்சிலர் அன்புச் செழியனோ, ''இந்தப் பகுதி முழுக்க குடிசை மாற்று வாரியத்தின் இடங்கள். வீட்டு மனைக்கான முழுத் தொகையையும் செலுத்தியவர்களுக்கு வாரியமே கிரையப் பத்திரம் கொடுத்துள்ளது. பணம் செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் வாரியம், மக்கள் பாதுகாப்பில் அக்கறை காட்ட வேண்டாமா? நாங்களும் இந்தப் பிரச்னைக்காக சாலை மறியல், உண்ணாவிரதம், வழக்கு... என்று தொடர்ந்து போராடி வருகிறோம். 'ஏரியைச் சுற்றித் தடுப்புச் சுவர் கட்டி மக்களைப் பாதுகாக்கவேண்டும்’ என்று நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி பொதுப்பணித் துறை டெண்டர் விட்டு 1.38 கோடி ரூபாய் செலவில், சுவர் கட்டப் போவதாக கடந்த மார்ச் மாதமே அறிவித்தார்கள். ஆனாலும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை'' என்றார் காட்டமாக.

பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, ''சுவர் கட்டுவதற்கான பணி வருகிற ஜனவரி மாதம் தொடங்கப்படும்'' என்கிறார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநின்றவூர் பகுதியைச் சுற்றிப் பார்த்த ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் ரஹீம், திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால் இருவரும், ''கட்டுமானப் பொருட்களின் திடீர் விலையேற்றம் காரணமாக சுவர் கட்டும் பணி தள்ளிப் போவதாக டெண்டர் எடுத்தவர்கள் சொல்கிறார்கள். எனவே, திருவள்ளூர் கலெக்டருடன் பேசி விரைவில் தடுப்புச் சுவர் கட்டும் பணிகளை முடுக்கி விடுவோம்'' என்றனர் உறுதியாக!

இனியாவது இவர்கள் கரை சேரட்டும்!

- த.கதிரவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு