Published:Updated:

''செத்துப் போனவரை கூட்டிட்டு வா..''

வேலூர் பா.ம.க. அடாவடி

பிரீமியம் ஸ்டோரி
##~##
''செத்துப் போனவரை கூட்டிட்டு வா..''

பா.ம.க-வின் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் நந்தகுமார் மீது, மாவட்ட ஆட்சியர் நாகராஜ னிடம் ஆற்காட்டைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியான கண்ணம்மாள் கொடுத்த புகார்தான் ஏரியாவின் பரபர டாக்!   

ஆற்காட்டில் இருக்கும் கண்ணம்மாளை சந்தித்தோம். ''எனக்கு ஐந்து மகள் களும், ஒரு மகனும் இருக்காங்க. என் கணவர் 10 வருஷத்துக்கு முன்னால இறந்துட்டார். என் மகன் பூபதியும் 2005-ம் ஆண்டு இறந்துட்டான். எங்களுக்குச் சொந்தமான 400 சதுர அடி வீடு ஆற்காடு அண்ணா சிலைக்குப் பக்கத்தில் இருக்குது. அதோட மதிப்பு இப்போ 10 லட்ச ரூபா. என் வீட்டுக்காரர் இறந்த நேரத்தில் பா.ம.க-வைச் சேர்ந்த சில பேர் என் மகன் பூபதிகிட்ட வந்து, கட்சி ஆபீஸ் நடத்த அந்த வீட்டை வாடகைக்கு கேட்டாங்க. 3000 ரூபா வாடகையும் ஆறு மாச அட்வான்ஸும் தர்றதாச் சொன்னாங்க. அவனும் சம்மதிச்சு வாடகைக்கு விட்டான். ஆனா, பா.ம.க-காரங்க சொன்ன வாக்கைக் காப்பாத்தலை. அதனால அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே என் பொண்ணு வள்ளி மூலமா, அவங்களை வீட்டைக் காலி பண்ணச் சொன்னேன். அதுக்கு நந்தகுமார், 'இப்ப தேர்தல் வேலையில இருக்கோம். அப்புறம் பாக்கலாம்’னு சொல்லி இருக்கார். இது மாதிரியே ஒவ்வொரு தடவையும் நாங்க போய்க் கேட்கும்போது, ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி எங்களை விரட்டுவார். அதனால 2007-ம் வருசம் பா.ம.க. தலைவர் ராமதாஸ் ஐயாவைப் பார்த்து விஷயத்தைச் சொன்னோம். அவரும், எங்க கட்டடத்துல இருந்து காலி செய்யுமாறு நந்தகுமாருக்கு கடுதாசி கொடுத்து அனுப்பினார். அதை நந்தகுமார்கிட்ட கொடுத்தப்ப, 'என்னை காலி பண்ணச் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. இனிமே யாராவது வந்து என்கிட்ட வாடகை கேட்டா... தொலைச்சுபுடுவேன்’னு மிரட்டி அனுப்பிட்டார்.

''செத்துப் போனவரை கூட்டிட்டு வா..''
''செத்துப் போனவரை கூட்டிட்டு வா..''

இப்போ அந்த இடத்தை குடும்ப கஷ்டம் காரணமா விற்கிறதுக்கு முடிவு செஞ்சிருக்கோம். நாங்க போய் கேட்டா, 'உங்க மகன் பூபதி வந்து கேட்டா மட்டும்தான் காலி செய்வோம். அதுவரைக்கும் என்னை ஒண்ணும் செய்ய முடியாது’னு எகத்தாளமா சொல்றார். ஆறு வருஷத்துக்கு முன்னால இறந்துபோன என் மகனை வரச் சொன்னா எப்படிங்க? என் பொண்ணு போய்க் கேட்டா.... 'பொட்டப் புள்ளைனு பார்க்குறேன். இல்லைனா... நடக்குறதே வேற!’னு மிரட்டுறார். அதனாலதான் கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தோம். அவராவது எங்களுக்கு நியாயம் கிடைக்க உதவணும்!'' என்றார் கண்ணீரோடு.  

புகாரில் சிக்கி இருக்கும் பா.ம.க-வின் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் நந்தகுமாரிடம் பேசினோம். ''சார், அந்த இடத்துக்கு மாசா மாசம் வாடகை கொடுத்துட்டுதான் இருக்கேன். அவங்க, மருத்துவர் ஐயாகிட்ட பொய்யான தகவலைச் சொல்லி லெட்டர் வாங்கிட்டு வந்திருக்காங்க. என்னோட வளர்ச்சியைப் பிடிக்காத யாரோதான் அவங்களை தூண்டி விடுறாங்க. நான் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிப்பேன்!'' என்றார் பதற்றத்துடன்.

ராமதாஸ் சொல்லியே கேட்கவில்லை என்றால், பா.ம.க-வில் என்னதான் நடக்கிறது?

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு