Published:Updated:

தூங்கவிடாத துர்நாற்றம்

நிவாரணம் தேடும் வாலாஜாபேட்டை

பிரீமியம் ஸ்டோரி
##~##
தூங்கவிடாத துர்நாற்றம்

'தமிழகத்தின் முதல் நகராட்சி என்ற பெருமைக்கு உரியது வாலாஜாபேட்டை. மழைநீர் ஏரிகளுக்குச் செல்லும் வகையில், ஆங்கிலேயர் காலத்திலேயே அகலமான கால்வாய்கள் இந்நகரில் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், இந்த நகரம் இன்று, ஆக்கிரமிப்புகளால் அடையாளம் மாறி குப்பை நகராகி விட்டது’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) குமுறி இருந்தார் ஒரு வாசகர்.‌ 

உடனே அங்கு ஆஜரானோம். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் வேலூர் மாவட்ட துணைச் செயலாளர் ஞானசேகரன், 'பஸ் ஸ்டாண்ட் தொடங்கி எங்கெங்கும் ஆக்கிரமிப்புகள். அதனால் தண்ணீரால் நிரம்பி இருக்க வேண்டிய ஏரியில், குப்பை நிரம்பி வழிகிறது. குடியிருப்புக்குப் பக்கத்திலேயே குப்பை மேடுகள் இருப்பதால், மக்களுக்கு ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன. அம்பேத்கர் நகர், இ.பி. காலனி மற்றும் சோளிங்கர் சாலை ஓரத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மழைக்காலத்தில் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. சிலருக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. கோழி இறைச்சிக் கழிவுகளை சாலை ஓரத்தில் கொட்டுவதால், துர்நாற்றத்தால் மக்கள் நிம்மதியாகத் தூங்க முடிய வில்லை. இதுபற்றி பல முறை நகராட்சியில் புகார் கொடுத் தும், எந்த அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை. கடந்த ஆண்டு, மெயின் ரோட்டின் ஓரத்திலேயே குப்பை கொட்ட வந்த நகராட்சி லாரியை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினோம். புதிய நகர மன்றத் தலைவராவது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவரும் மெத்தனம் காட்டினால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்!' என்று வெடித்தார் ஆவேசமாக.

தூங்கவிடாத துர்நாற்றம்

நகரமன்றத் தலைவர் டபுள்யு.எஸ்.வேதகிரியிடம் பேசினோம். '' அம்மா ஆட்சியில் வாலாஜாப்பேட்டை

தூங்கவிடாத துர்நாற்றம்

நகராட்சியை குப்பை இல்லாத சுகாதாரம் மிக்க பசுமை நகரமாக மாற்றுவதுதான் எங்கள் முதல் கடமை. தெருக்களை சுத்தப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகள் தொடங்கிவிட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர், இரண்டு வருடங்களில் பூத்துக் குலுங்கும் 'குல்மார்க்’ மரங்களை தெருவோரங்களில் எனது சொந்த செலவில் நட்டு, நகரின் பசுமைக்கு வழி வகுக்க இருக்கிறேன். தற்போது குப்பைகளை தரம் பிரிப்பதற்காக ஷெட் போடும் பணி நடைபெறுகிறது. வாலாஜாபேட்டை, ராணிப் பேட்டை, ஆற்காடு ஆகிய  நகராட்சிகளுக்கென ஒருங்கிணைந்த உரக்கிடங்கு அமைக்கப்பட்டதும், நகரத்தின் அனைத்து குப்பைகளும் லாரிகள் மூலமாக கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுவிடும். அங்கு, குப்பைகளைத் தரம் பிரித்து எரியூட்டி உரம் தயாரிக்கப்படும். இறைச்சிக் கடைகளையும், டாஸ்மாக் கடைகளையும் நகரத்துக்கு வெளியில் அமைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. நகரின் குடிநீர் பிரச்னைக்கும் போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு கிடைக்கும் வகையில் உரிய ஆய்வு நடைபெற்று வருகிறது' என்று சொன்னார்.

விரைவில் மக்களுக்கு குப்பையில் இருந்து விமோசனம் கிடைக்கட்டும்!

- ரியாஸ், படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு