Published:Updated:

சாராயத்தைக் குடிச்சிப் பாருங்க...

தள்ளாடிய சேலம் மாநகராட்சி

பிரீமியம் ஸ்டோரி
##~##
சாராயத்தைக் குடிச்சிப் பாருங்க...

புது மேயர் தலைமையில் நடந்த முதல் கூட்டத்திலேயே இப்படி ஒரு பரபரப்பு கிளம்பும் என்று சேலத்தில் யாருமே எதிர்பார்க்க வில்லை. தி.மு.க-வைச் சேர்ந்த மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் புவனேஸ்வரி கையில் ஒரு சாராய பாக்கெட் கொண்டுவந்து மாமன்றத்தையே கதிகலக்கி விட்டார். 

கடந்த 30-ம் தேதி, காலை 11 மணிக்கு கூட்டம் ஆரம்பம் ஆனது. அ.தி.மு.க. மேயரான சவுண்டப்பன், மேயர் நாற்காலியைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டு அமர்ந்தார். அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணியன் எழுந்து முதல் 20 நிமிடங்கள் அம்மா புகழ் பாடிக் கொண்டிருந்தார். ''இந்த மாமன்றக் கூட்டத்தில் பொதுமக்கள் பிரச்னைகளை பற்றித்தான் பேச வந்திருக்கிறோம். அ.தி.மு.க. சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தவில்லை. மக்கள் பிரச்னையை மட்டும் பேசுங்க...'' என்று தி.மு.க. கவுன்சிலர் சரளா காட்ட மாகச் சொல்ல, ஏராளமான எதிர்ப்புக் குரல்கள் பாய்ந்தன.

சாராயத்தைக் குடிச்சிப் பாருங்க...

அதுவரை அமைதியாக இருந்த மேயர், ''அமைதியா இருங்க... இங்கே என்ன தெருச் சண்டையா நடக்குது. ஆளாளுக்கு எழுந்து கத்திக்கிட்டு இருக்கீங்க. இது மாநகராட்சிக் கூட்டம் என்பதை மறந்துடாதீங்க. பத்திரிகைகாரங்க இருக்காங்க. அவங்களுக்கு நீங்களே நியூஸ் கொடுத்துடுவீங்க போல...'' என்று குரலை உயர்த்தினார். சற்றுநேர அமைதிக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவரான புவனேஸ்வரி எழுந்தார். ''எல்லோருக்கும் வணக்கம். நாங்க சொல்ல வந்ததை மட்டும் சொல்லிட்டு வெளியில போயிடுறோம். அதுக்குப்பிறகு நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. உங்களை நீங்களே புகழ்ந்துக்கோங்க. யாரு கேட்க போறாங்க... மாநகராட்சியில் திரும்பிய பக்கம் எல்லாம்  குடிநீர்ப் பிரச்னை தாண்டவமாடுது. அமைச்சர் வரிசையா ஆலோசனைக் கூட்டம் நடத்திக்கிட்டே இருக்கார். ஆனா எந்தப் பிரயோஜனமும் இல்லை. என்னோட வார்டுல நான் நுழையவே முடியலை. பொதுமக்கள் என்னை முற்றுகை இட்டு, தண்ணீர்ப் பிரச்னையை தீர்க்கச் சொல்றாங்க. குடிக்கத் தண்ணி இல்லை.. ஆனா கள்ளச் சாராயம் மட்டும் ஆறு போல ஓடுதுன்னு என்னை நடுத் தெருவுல நிற்கவைச்சி கேள்வி கேட்குறாங்க...'' என்று புகார் வாசித்தார். உடனே எழுந்த அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணியன், ''அம்மா ஆட்சியில் கள்ளச் சாராயமா..? அபாண்டமா இருக்கே! பொய் பேசுறதுக்கும் ஒரு அளவு இருக்கு. அம்மா ஆட்சியை குறை சொல்வதை நிறுத்திக்கோங்க..'' என்று அனல் கக்கினார்.

கொஞ்சமும் டென்ஷன் ஆகாத புவனேஸ்வரி, ''எனக்குத் தெரியும். நீங்க இப்படி எல்லாம் சொல்லி ஏமாத்துவீங்கன்னு. அதனாலதான் எங்க ஏரியாவில் விற்கும் கள்ளச்சாராயப் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்திருக்கேன்'' என்று சொன்னவர், தனது ஹேண்ட்பேக்கில் வைத்து இருந்த கள்ளச் சாராயப் பாக்கெட்டை எடுத்து எல்லோருக்கும் காட்ட, அத்தனை பேரும் ஆடிப்போனார்கள்.

கொஞ்சம் ஜெர்க்கான அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பின்னர் சுதாரித்துக்கொண்டு, ''அது சாராயம் இல்லை. தண்ணி... தண்ணி...'' என்று கத்தினார்கள்.

''இது சாராயம்தான். சந்தேகம் இருந்தால் அ.தி.மு.க. கவுன்சிலர்களும், மேயரும் குடிச்சிப் பார்த்து தெரிஞ்சுக்கட்டும். எங்க பகுதியில் கள்ளச் சாராயம் விற்கிறவங்க மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்'' என்று தில்லாகச் சொல்லி விட்டு அமர்ந்தார் புவனேஸ்வரி.

சாராயத்தைக் குடிச்சிப் பாருங்க...

இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்காத மேயர், ''மாநகராட்சிக்கு என்று ஒரு மரபு, கண்ணியம் இருக்கிறது. இங்கே பாருங்க எத்தனை அரசியல் மாமேதைகளின் படங்கள் இருக்கிறது. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், நீங்க எப்படி சாராயத்தை மாமன்றத்துக்குள் கொண்டு வரலாம். சேலம் மாநகராட்சி வரலாற்றிலேயே ஒரு இழிவான செயலைச் செய்து விட்டீர்கள். வரலாறு உங்களை மன்னிக்காது. சாராயம் விற்றால் போலீஸ்ல புகார் பண்ணுங்க. அதை எதுக்கு இங்கே வந்து பேசுறீங்க...'' என்று சமாளித்தார்.

மேயரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் ஒட்டு மொத்தமாக வெளிநடப்பு செய்தார்கள். வெளியே வந்த புவனேஸ்வரி, ''என்னோட கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளச் சாராயம் அமோகமா விற்பனை ஆகுது. போன வாரத்தில் சாராயம் குடிச்சிட்டு பைக்ல போன இரண்டு பேர் கிணற்றுல தடுமாறி விழுந்து இறந்துட்டாங்க. குடிச்சிட்டு சில கேடு கெட்டவனுங்க தெரு விளக்கை உடைக்கிறதும், பொண்ணுங்களை கேலி பண்றதுமா இருக்காங்க. இதை பல தடவை அழகாபுரம் போலீஸ்ல சொல்லிப் பார்த்துட்டோம். அவங்களுக்கு மாமூல் கரெக்டா போயிடுது. அதனால எதையும் கேட்க மாட்டேங்கிறாங்க. இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சி நடத்துறதா பீத்திக்கிட்டு இருக்கும் ஜெயலலிதாவுக்கு, சேலத்துல நடக்குற லட்சணம் தெரியணும்னுதான் சாராயப் பாக்கெட்டை ஆதாரத்தோடு கொண்டுவந்து காட்டினேன். மன்றத்தை அவமானப்படுத்துவது என் நோக்கம் இல்லை'' என்றார் தடாலடியாக.

ஆஹா... சேலம் அரசியல் கிர்ர்ன்னு இருக்கே!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு