Published:Updated:

கதவு திறக்குது... பாத்திரங்கள் உருளுது...

மணலூர் திக்திக்..

பிரீமியம் ஸ்டோரி
##~##
கதவு திறக்குது... பாத்திரங்கள் உருளுது...

'அமராவதி ஆற்றங்கரையோரம் நிம்மதியா விவசாயம் பாத்துட்டு இருந்தோம். சுனாமி வந்து சுருட்டிப் போட்ட மாதிரி இப்போ எங்க வாழ்க்கை நிம்மதி இல்லாமப் போயிடுச்சு. எல்லாத்துக்கும் காரணம் நிலநடுக்கம்தான். ஒரு தடவை எங்க ஊருக்கு வந்து பாருங்க.’ - ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044_42890005) பெண் ஒருவர் பரிதாபக் குரலில் பேசி இருந்தார். 

உடனடியாக கிளம்பினோம். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே இருக்கிறது மணலூர் கிராமம். ஆக்ஷன் செல்லில் பேசிய சரஸ்வதியை சந்தித்தோம். ''எங்க ஊரைச் சுத்தி ஏகப்பட்ட கல்குவாரிகள் அனுமதி இல்லாம நடக்குது. போன வாரம் ஒரு நாள் ராத்திரி 10 மணி இருக்கும். டமார்ன்னு ஒரு வேட்டுச்சத்தம். சாத்தி இருந்த வீட்டுக் கதவெல்லாம் தானா திறந்துடுச்சி. வீட்டுல இருந்த பாத்திரமெல்லாம் உருண்டு ஓடுது. நாங்க அலறி அடிச்சிட்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தோம்.

இப்போ வீட்டுல நிம்மதியாத் தூங்க முடியலைங்க. எப்போ, என்ன நடக்குமோன்னு ஒவ்வொரு நாளும் உசிரைக் கையில பிடிச்சிட்டு இருக்கோம். ஊருக்குள்ள குடி இருக்கவே பயமா இருக்குங்க'' என்றார் வேதனையோடு.

கதவு திறக்குது... பாத்திரங்கள் உருளுது...

அந்த சமயத்தில் அங்கே வந்த ஒருவர், ''என் பேர் ஈஸ்வரமூர்த்திங்க. கடந்த ஆறு மாசத்துக்கு

கதவு திறக்குது... பாத்திரங்கள் உருளுது...

முன்னால தொடர்ந்து மூணு நாள், இரவு இரண்டு மணிக்கு பயங்கர சத்தத்தோட அதிர்வு ஏற்பட்டுச்சுங்க. அடுத்த நாள் தாசில்தார் வந்து பார்த்தார். நில ஆராய்ச்சியாளர்களை அனுப்பி வைச்சாங்க. அவுங்களும் சோதனை பண்ணிட்டுப் போனாங்க. எங்க ஊருக்கு கீழ இருக்கிற பாறையோட தட்டும் கல்குவாரிக்கு கீழே இருக்கிற பாறைத் தட்டும் சேர்ந்து இருக்குதான்னு சோதனை செய்வதாகச் சொன்னாங்க. ஆனா அந்த ஆராய்ச்சி முடிவு என்ன ஆச்சுன்னே எங்களுக்குத் தெரியலை. உடனே இந்த விஷயத்துல நடவடிக்கை எடுக்கலைன்னா, எங்க ஊரே காணாமப் போயிடும்'' என்றார் உச்சகட்ட வேதனையில்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் கவனத்துக்கு இந்தப் பிரச்னையை கொண்டு சென்றோம். ''இயற்கையாகவே அந்தப் பகுதியில் ஒரு பிரச்னை இருக்கிறது. கொஞ்ச நாளைக்கு முன், பூமிக்குக் கீழே 6 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கு. ரிக்டர் ஸ்கேலில் 2.8 அளவுக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கு. இந்த நிலநடுக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய மெட்டிரியாஜிகல் துறைக்கு தகவல் சொல்லி இருக்கோம். கல்குவாரிகளால்தான் நிலநடுக்கம் வந்தது என்பது உறுதியாகத் தெரியவந்தால், அனைத்து கல்குவாரிகளுக்கும் சீல் வைக்கப்படும்'' என்றார்.

அப்படிச் செய்த பிறகாவது நிம்மதி கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

                                    - ச.ஆ.பாரதி

   படங்கள்: மு.கார்த்திகேயன், கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு