Published:Updated:

'எங்களுக்கு சலுகை வழங்கவில்லை!'

செஞ்சிலுவை சங்க விவகாரத்தில் பி.எஸ்.ஜி. மருத்துவமனை

பிரீமியம் ஸ்டோரி
##~##
'எங்களுக்கு சலுகை வழங்கவில்லை!'

டந்த 30.11.11 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், 'மாமியார், மருமகளுக்கு மட்டும்தான் பதவியா? செஞ்சிலுவை சங்க விவகாரத்தில் கொந்தளிக்கும் கோவை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். 

'கோவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் பி.எஸ்.ஜி. கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடத்தபடும் ரத்த தான முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம்களில் பி.எஸ்.ஜி. மருத்துவமனை நிறைய பலன் அடைந்துள்ளது’ என்று கிளம்பி இருக்கும் குற்றச்சாட்டை செய்தியாக்கி இருந்தோம்.

இது தொடர்பாக செஞ்சிலுவை சங்கத்தின் சேர்மனாக இருக்கும் பி.எஸ்.ஜி. குழுமத்தின் நந்தினி ரங்கசாமியிடம் விளக்கம் கேட்டோம். அப்போது அவர் சார்பாக பேசிய பூங்கோதை என்பவர், ''நந்தினி மேடம் இப்போ ரொம்பவும் பிஸியா இருக்காங்க. அதனால உங்ககிட்ட பேச முடியாது. நீங்க சொன்ன புகார்களுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு சொல்லிடச் சொன்னாங்க'' என்று பதில் சொன்னார்.

'எங்களுக்கு சலுகை வழங்கவில்லை!'

கட்டுரை வெளிவந்த பிறகு பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் விமல்குமார் கோவிந்தன் நமக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், 'எங்கள் மருத்துவமனையில் இயங்கும் ரத்த வங்கி மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றது. இத்தகைய அங்கீகாரம் பெற்ற மையங்கள் கோவை மாவட்டத்தில் வெகு சிலவே உள்ளன. எங்கள் மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடத்தப்படும் இடம், நேரம், கலந்துகொள்ளும் மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்களையும் உரிய அதிகாரிகளுக்குத் தெரிவித்து, அதன்படியே நடத்துகிறோம்.

முகாம்களில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் எங்கள் மருத்துவமனை சார்பில் உரிய வசதிகள் செய்து தரப்படுகிறது. சேகரிக்கப்படும் ரத்தம் மிக நவீன முறையில் பாதுகாப்பாக தகுந்த பைகளில் சேகரிக்கப்பட்டு, எங்கள் மருத்துவமனையின் செலவில் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது. அங்கு வழங்கப்பட்டது போக, மீதமிருக்கும் ரத்தமே எங்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. சிகிச்சைக்கு முழு செலவையும் ஏற்க முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு எங்கள் நிறுவனம் சலுகை கொடுத்து சிகிச்சை அளிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் 16 ரத்த தான முகாம்கள் கோவை செஞ்சிலுவை சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நடத்தப்பட்டது. இதே காலத்தில், வேறு சில தன்னார்வ நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 23 முகாம்கள் எங்கள் மருத்துவமனையால் நடத்தப்பட்டுள்ளன.

இதுபோன்றே கண் சிகிச்சை முகாம்களும் இதய நோய் கண்டறிதல் முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. கோவையில் செயல்பட்டு வரும் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் எந்த தனிப்பட்ட பலனையும் எங்கள் மருத்துவமனை அடையவில்லை. அந்தச் சங்கத்தின் தலைவியான நந்தினி ரங்கசாமி, அவரது பதவியின் மூலம் எங்கள் மருத்துவமனைக்கு எவ்வித சலுகையும் வழங்கவில்லை’ என்று தெரிவித்து இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு