Published:Updated:

இனி, கடலில் கால் நனைக்கவே முடியாது

ஹெராயின் வழக்கு... கொதிக்கும் மீனவர்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##
இனி, கடலில் கால் நனைக்கவே முடியாது

மீன் பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்​கள் மீது, ஹெராயின் கடத்தி வந்ததாக இலங்கை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது, ராமேஸ்வரம் மீனவர்​ களைக் கொந்தளிக்கச் செய்​துள்ளது!   

ராமேஸ்வரத்தில் இருந்து நவம்பர் 28-ம் தேதி வில்சன், ரசாத், லாங்லெட், எமர்சன், அகஸ்டஸ் ஆகிய 5 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். மறுநாள் காலை கரை திரும்ப வேண்டியவர்கள் வந்து சேராததால், படகின் உரிமையாளரான கிளாட்வின், மீன் துறை அலுவலகத்துக்குச் சென்று தகவல் சொல்லி இருக்கிறார். அப்போதுதான் இலங்கைக் கடற்படையினர், அவரது படகைப் பிடித்துச் சென்றது தெரிய வந்திருக்கிறது. அதோடு, படகில் இருந்த மீனவர்களை ஹெராயின் கடத்திய வழக்கில் கைது செய்திருக்கும் தகவலும் வரவே... ஏரியாவில் ஏக டென்ஷன். 'மீனவர்களை வழக்கில் இருந்து விடுவித்து தமிழகம் கொண்டுவரும் வரையில் மீன் பிடிக்கச் செல்ல மாட்டோம்’ என்ற காலவரையற்ற போராட்டத்தில் இறங்கியுள்ளனர் மீனவர்கள்.

இனி, கடலில் கால் நனைக்கவே முடியாது

இலங்கைச் சிறையில் தவிக்கும் மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தோம். மீனவர் லாங்லெட்டின் தாய் இன்பிரிண்டா, ''கூலிக்கு மீன் பிடிக்கப் போனாத்தான் எங்க வீட்டுல அடுப்பு எரியும். அதனாலதான் என்னோட ஒரே மகனையும் கடலுக்கு அனுப்பச் சம்மதிச்சேன். ஒவ்வொரு முறையும் அவனைக் கடலுக்கு அனுப்பிட்டு, அவன் திரும்பி வர்றவரைக்கும் உசுரு எங்ககிட்ட இருக்காது. அன்னைக்கு ராத்திரி வரைக்கும் போன்ல பேசிக்கிட்டு இருந்திருக்கான். அதுக்கப்புறம்தான் இலங்கை நேவிக்காரங்க பிடிச்சுட்டுப் போயிருக்காங்க. கடல்ல நம்ம கடலு எது, இலங்கை கடல் எதுன்னு கோடு போட்டா வச்சிருக்கு. அப்படியே எல்லையைத் தாண்டிருந்தாலும், அதுக்கு உரிய நடவடிக்கை எடுக்காம, போதைப் பொருள் கடத்தினதாவா பொய்க் கேசு போடுறது... இன்னொரு நாட்டுல போயி, நாங்க உண்மையானவங்கன்னு எப்படி நிரூபிக்கப் போறோம்னு தெரியலையே...'' என வயிற்றில் அடித்துக்கொண்டு கதறினார்.

இனி, கடலில் கால் நனைக்கவே முடியாது

எமர்சனின் தாயார் பாத்திமா, ''காத்து அடிச்சாலும் மழை அடிச்சாலும் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு கடலுக்குப் போய் மீன் பிடிச்சு உசுர் வாழறோம். குடி இருக்க நல்ல வீடு கூட இல்லாம, லட்சக்கணக்குல கடனுக்குப் படகு வாங்கி உசுரைப் பணயம் வைச்சு உழைக்கிறோம். அப்படி உழைக்குற எங்க மக்க மீது பொய்க்கேஸ் போட்டவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க. கர்த்தர்தான் இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டணும்'' என தனது இயலாமையை வெளிப்படுத்தினார்.

இனி, கடலில் கால் நனைக்கவே முடியாது

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் குறித்துப் பேசிய ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்

இனி, கடலில் கால் நனைக்கவே முடியாது

செயலாளர் கராத்தே பழனிச்சாமி, ''30 ஆண்டு காலமா விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டியே இலங்கைக் கடற்படை நமது மீனவர்களைத் தாக்கி வந்தது. அந்தக் கொடுமை இப்பவும் தொடர்வதுதான் வேதனை. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தோற்ற ஆத்திரத்தை ஐந்து மீனவர்களைக் கோரமாக கொன்றதன் மூலம் தீர்த்துக்கொண்டவர்கள், இலங்கை கடற்படையினர். துப்பாக்கிச் சூடு, கடத்திச் சென்று தாக்குதல் என, நம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பல்வேறு விதமான தாக்குதல்கள் நடத்தினார்கள். தற்போது போதைப் பொருள் கடத்தல் என்ற புதிய தாக்குதலையும் அரங்கேற்றி இருக்காங்க. இலங்கை அரசின் இந்தப் போக்கை அனுமதித்தால், நாம் கடலில் மீன் பிடிக்க மட்டுமல்ல... கால் நனைக்கவும் முடியாத நிலை ஏற்படும். எனவே, மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு பொய் வழக்கில் சிக்கித் தவிக்கும் ஐந்து மீனவர்களையும் மீட்க வேண்டும்'' என்றார் ஆக்ரோஷமாக.

நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்​பின் நிர்வாகி யு.அருளானந்தம், ''இலங்கைக் கடற்படையின் நெடுந்தீவுப் பிரிவு, நமது மீனவர்களை கைது செய்துள்ளது. வழக்கமாக, கைது செய்யப்பட்ட மீனவர்களை அன்றைய தினமே அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். ஆனால் இப்போது, மீனவர்களைக் கைது செய்த கடற்படையினரோ, அங்கிருந்து 350 கி.மீ தூரமுள்ள காங்கேசன்துறை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று, மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அருகில் இருக்கும் காவல் நிலையங்களைத் தவிர்த்து மீனவர்களை அங்கு அழைத்துச் செல்ல காரணம் இருக்கிறது. அதற்கு முந்தைய தினம்தான் காங்கேசன் பகுதியில் போதைப் பொருள் கடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த வழக்கில்தான் நம் மீனவர்கள் பெயரையும் சேர்த்து பொய் வழக்கு போட்டு இருக்கிறார்கள்'' என்றார். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கொழும்பில் குண்டு வைக்க வந்தார்கள்; ரூபவாஹிணியை சிதைக்க வந்தார்கள்; கட்டுநாயகே விமான தளத்தை தகர்க்க வந்தார்கள் என்று அடுக்கடுக்கான வழக்குகள் நம் மீனவர்கள் மீது பாயலாம்.

-இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு