Published:Updated:

'அம்மா சொன்னாலும் சும்மாதான்!'

ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் கலாட்டா

பிரீமியம் ஸ்டோரி
##~##
'அம்மா சொன்னாலும் சும்மாதான்!'

'தி.மு.க. ஆதரவோடு அ.தி.மு.க. ஜெயித்தது’ என்று சொன்னால் நம்புவீர்​களா..? 'ஸ்ரீவி. உள்குத்து' என்ற தலைப்பில் நாம் எழுதிய தகவலின் தொடர்ச்சிதான் இந்தக் கூத்து! 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் 10 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி வாகை சூட... மீதமுள்ள தில் தி.மு.க. மற்றும் புதிய தமிழகம் தலா இரண்டையும், தே.மு.தி.க. ஒன்றை​யும் கைப்பற்றியது. மெஜா ரிட்டி இடங்களை பிடித்ததால் யூனியன் சேர்மன் பதவிக்கு வேட் பாளராக தொகுதிச் செய​லாளர் 'சிந்து’ முருகனை அ.தி.மு.க. தலைமை அறிவித்தது. ஆனால், கிளைச் செயலாளர் நக்கமங்கலம் காளிமுத்து தனக்கே அந்தப் பதவி என்று வெறியோடு களமிறங்கியதில், கவுன்சிலர் கடத்தல் எல்லாம் நடந்து சேர்மன் தேர்தலே தள்ளிப் போனதை நாம் முந்தைய செய்தியில் சொல்லியிருந்தோம்.

தள்ளி வைக்கப்பட்ட தேதிப்படி நவம்பர் 30 அன்று தேர்தல்!

'அம்மா சொன்னாலும் சும்மாதான்!'

''அம்மா, உங்க விருப்பத்தையும் மீறி என்னைக் கவுக்க இங்கே உள்கட்சி சதி நடக்குது'' என்று போயஸ் தோட்டத்துக்குப் புகார் அனுப்பி விட்டு நம்பிக்கையோடு தேர் தலை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார் 'சிந்து' முருகன். ஆனாலும், ராஜபாளையம் எம்.எல்.ஏ-வான கோபால்சாமி உள்ளிட்ட சிலர் காளிமுத்தை சேர்மன் ஆக்கிவிடுவதில் ஏனோ ஆர்வம் காட்டினர்.

'சிந்து’ முருகன் புகாரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வமும் செங்கோட்டையனும் பேச்சுவார்த்தை நடத்தியும்கூட காளிமுத்து

'அம்மா சொன்னாலும் சும்மாதான்!'

பின்வாங்குவதாக இல்லை. 'என்னை ஜெயிக்க வைத் தால் கவுன்சிலர்களுக்கு டாடா சுமோ காரும் கைச்செலவுக்கு 10 லட்ச ரூபாயும் தருகிறேன்’ என்று நக்கமங்கலம் காளிமுத்து வாக்குறுதி கொடுத்ததாகவும், 'சிந்து’ முருகன் அனைவரையும் குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று குளுகுளு விருந்து கொடுத்ததாகவும் ஏரியாவெங்கும் டாக்!

'ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் சேர்மன் தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்’ என்று நக்கமங்கலம் காளிமுத்து  நீதிமன்றத்தை நாட... தகுந்த பாதுகாப்பு வழங்கி, தேர்தலை வீடியோ எடுக்கும்படி உத்தரவிட்டது நீதிமன்றம். நவம்பர் 30-ம் தேதி, சிவகாசி ஆர்.டி.ஓ-வான சுப்புலட்சுமி முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. இறுதியில், தி.மு.க. உள்ளிட்ட கவுன்சிலர்களின் ஆதரவோடு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் காளிமுத்து வென்று, கட்சித் தலைமையின் முகத்தில் கரி பூசினார்.

வெற்றி பெற்ற நக்கமங்கலம் காளிமுத்துவிடம் பேசினோம். ''சீனியரான என்னைப் புறக்​கணித்து​விட்டு, கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு அ.தி.மு.க-வுக்கு வந்த 'சிந்து’ ​முருகனிடம் சில நிர்வாகிகள் பணத்தை வாங்கிக்​கொண்டு அவரை போட்டியிட வைத்தார்கள். அவர்களுக்குப் பாடம் புகட்டத்தான் நான் களம் இறங்கினேன். அ.தி.மு.க. கவுன்சிலர்களும் ஆதரவு கொடுத்ததால்தான் ஜெயித்தேன். கவுன்சிலர்களுக்கு டாடா சுமோ மற்றும் லட்சக்​கணக்கில் பணம் கொடுக்குற அள​வுக்கு நான் வசதியானவன் இல்லை. அம்மாவின் ஆசியுடன் செயல்​படுவேன்'' என்று சொன்​னார்.

சிந்து முருகன் தரப்போ, ''தமிழகத்தில் அ.தி.மு.க. ஆளுங்​கட்சியாக இருந்தாலும், ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க-வை குழி தோண்டிப் புதைத்து விட்டனர். இவருடைய வளர்ச்சியைப் பிடிக்காத உள்கட்சி மற்றும் எதிர்க் கட்சியினர் கூட்டணி அமைத்து செய்த சதி இது'' என்று ஏகத்துக்கும் பொங்கித் தீர்த்தது.

அம்மா சொன்னதை சும்மா என்று ஆக்கிவிட்ட காளிமுத்துவை கட்சித் தலைமை எப்படித்தான் கண்டுகொள்ளாமல் இருக்கிறதோ?

- எம்.கார்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு