Published:Updated:

முகம் சுளிக்க வைக்கும் மதுரை வேளாண் வணிக வளாகம்.. நடவடிக்கை எடுப்பார்களா?

முகம் சுளிக்க வைக்கும் மதுரை வேளாண் வணிக வளாகம்.. நடவடிக்கை எடுப்பார்களா?
முகம் சுளிக்க வைக்கும் மதுரை வேளாண் வணிக வளாகம்.. நடவடிக்கை எடுப்பார்களா?

முகம் சுளிக்க வைக்கும் மதுரை வேளாண் வணிக வளாகம்.. நடவடிக்கை எடுப்பார்களா?

மாநிலத்தின் பல்வேறு உற்பத்தியகங்களிலிருந்து மலர்கள், உரங்கள், நெல்மணிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்து வியாபாரத்தைப் பெருக்குவதற்கான மிகப்பெரிய சந்தை முனையமாக மதுரையில் அமைந்துள்ளது, வேளாண் வணிக வளாகம். வெளிநாட்டினர் பலர் வந்து கண்டுசெல்லும் அளவுக்குப் புகழ்பெற்ற பிரமாண்டமான சந்தைக்கூடம், இந்த வேளாண் வணிக வளாகம். ஆனால், `அடிப்படை வசதிகள்கூட இல்லாத அவலநிலையே இங்குப் பல நாள்களாகத் தொடர்கிறது' எனக் குமுறுகின்றனர், வியாபாரிகள்.

இந்த வளாகத்தில் 104 பூக்கடைகள், 60 உரக்கடைகள், 100க்கும் அதிகமான நெல்கடைகள் என மொத்தம் 300க்கும் மேற்பட்ட கடைகள் இங்கு இயங்குகின்றன. ``விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், இங்கு டென்டர்கள் விட்டு, தனக்கான லாபத்தைச் சம்பாதித்துக்கொள்கிறது, வேளாண்துறை,” எனும் குற்றச்சாட்டுகளையும் கடைக்காரர்கள் முன்வைக்கின்றனர். 

`தன்னுடைய தொகுதி என்பதால், சில நாள்களுக்கு முன் இவ்வளாகத்துக்குள் வந்து பார்வையிட்ட எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, குப்பைகள் நிறைந்திருப்பதைப் பார்த்ததும் அவற்றை அகற்றுவதற்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவு, அன்றைய தினம் மட்டும்தான் உருப்படியாக நிறைவேற்றப்பட்டது. பிறகு, மீண்டும் பழைய நிலையே தொடர்கிறது' எனக் கொதித்துப் பேசுகின்றனர், சந்தை வியாபாரிகள்.

தினமும் சராசரியாக 10 ஆயிரம் நபர்கள், வியாபாரத்துக்காக இவ்வளாகத்துக்கு வந்துசெல்வதால், சில மணிநேரங்களில் அங்குக் குப்பைகள் சேர்ந்துவிடுகின்றன. அதை அள்ளிக்கொண்டுபோய் சந்தைப் பகுதியின் பின்புறத்தில் மொத்தமாகக் கொட்டுகின்றனர். கொட்டப்பட்ட குப்பைக் குவியல் அப்படியே கிடக்கிறது. `இதை மாநகராட்சி ஊழியர்கள் சுழற்சிமுறைகளில் வந்து சுத்தப்படுத்த வேண்டும்' என்கின்றனர், விவசாயிகள். 

``யாவாரி சங்கத்துக்காரவுக சேர்ந்து வழக்கு போட்டிருக்காக. இன்னும் அது நடந்துட்டே இருக்கு. பெட்டிசன், போராட்டம்னு எல்லாம் பண்ணியாச்சு. ஆனாலும், இதுக்கு முழுசா விடிவு கெடச்ச பாடில்ல” என்று தன் வியாபாரத்தை விட்டுவிட்டுத் தள்ளாத வயதில் வந்து புலம்பிவிட்டுச் சகதியை மிதித்துக் கடந்துபோகிறார், ஒரு பாட்டி.

``ஏற்கெனவே, போடப்பட்டிருந்த சாலையில், புதிதாகத் தளம் அமைக்க உள்ளதாகச் சொல்லி, இருக்கும் நடைபாதையையும் மாநகராட்சி ஊழியர்கள் தோண்டிப் பெயர்த்துச் சென்றுவிட்டனர். புதுத்தளம் அமைக்காமல் அப்படியே விட்டதனால், பாதைகள் பள்ளமாகி மழைநீர் தேங்கிச் சேறும் சகதியுமாக, சந்தையே துர்நாற்றம் வீசுகிறது. நாளுக்கு நாள் குப்பைகள் சேர்வதாலும், மழைநீர் தேங்கியிருப்பதாலும் இரவுகளில் கொசுக்கள் படையெடுக்கின்றன. இதனால், சுகாதாரச்சீர்கேடு அதிகரித்திருப்பதோடு, தொற்று நோய்கள் பரவுவதற்கும் இவை வழிவகுக்கின்றன. இங்கு, சுத்தமான குடிநீர் வசதிகூட கிடையாது. கேன்களில் தண்ணீரைக் கொண்டுவந்து வைத்துக்கொள்கின்றனர், வியாபாரிகள். குப்பைக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றுமாறும், சந்தையை முறையாகப் பராமரிக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அந்த உத்தரவுகளை மீறிச் செயல்பட்டு வருகின்றனர், மாநகராட்சி அதிகாரிகள்” என்று குற்றம்சாட்டுகின்றனர், சந்தை வியாபாரிகள் சங்கத்தினர். 

வளாகத்துக்குள் கட்டப்பட்டிருக்கும் கழிவறைகள் எதுவும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இல்லை. பெரும்பாலான கழிவறைகளுக்குப் பூட்டுப்போடப்பட்டுள்ளன. கழிவறைக் கதவுகளில் தாழ்ப்பாள் இல்லை. சில கழிவறைகளில் கதவுகளே இல்லை. இரவு முழுவதும் இயங்கும் இந்தச் சந்தையின் கழிவறைகளில் மின்விளக்குகள்கூட இல்லை. பராமரிப்புகள் ஏதுமின்றி இருப்பதால், சந்தைக்கு வருவோர் பொதுவெளியில் கழிக்கும் சூழல் நிலவுகிறது. இதில், பெண்களின் நிலை மிகவும் பரிதாபம். 

மாநகராட்சி ஆணையர் அனீஸ்சேகரிடம் மார்க்கெட் விவகாரம் பற்றிக் கேட்டதற்கு, ``அந்த வளாகம், வேளாண்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறது” எனச் சொல்லி முடித்துக்கொண்டார். சந்தையைச் சுற்றிப்பார்க்க வந்திருந்த வெளிநாட்டவர்களிடம் பேசியபோது, ``மதுரையில் மிகப்பெரிய சந்தை உள்ளது என்று அறிந்து இங்கு வந்தோம். மலர்கள், கட்டடங்கள், கட்டட அமைப்புகள் எல்லாம் அழகாக உள்ளன. ஆனால், எங்களால் சில நிமிடங்களுக்கு மேல் இங்கு நிற்க முடியாதபடி இந்த இடம் இருக்கிறது.” என்று முகஞ்சுளித்துக் கூறினர். 

``வேளாண் துறைத் தலைவர் காமராஜ், வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா ஆகியோர் தலையிட்டு இந்தப் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து, மேலும் நிரந்தரத் தீர்வுகளை எட்டுவதற்கு வழிவகை செய்துகொடுக்க வேண்டும்" என விவசாயிகள், வணிகர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது, ஆண்டுகள் கடந்த ஆதங்கத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினர்.

மார்க்கெட் பகுதியைப் பார்வையிட்டுச் சென்ற எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவிடம் இதுகுறித்துப் பேசினோம், ``விரைவில் அங்கு ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட இருக்கிறார். பணிகளுக்கான திட்டமும் அப்ரூவ் ஆகிவிட்டது. இரண்டு வாரங்களில் சாலை போடுவதற்கான டெண்டரும் வந்துவிடும். வேளாண் துறைச் செயலாளரும் நேரில் வந்து பார்வையிட்டு வசதிகளைச் செய்துதருவதாகக் கூறியிருக்கிறார்." என்றார். மேலும், ``குப்பைகள் ஏதும் அகற்றப்படாமல் பின்புறத்திலேயே கொட்டப்பட்டிருக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் யாரும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவில்லையே?" எனக் கேட்டதற்கு, ``நாளைக்குள் அனைத்தையும் சுத்தம் செய்யக் கூறிவிடுகிறேன்" என முடித்துக்கொண்டார்.  

அடுத்த கட்டுரைக்கு