பிரீமியம் ஸ்டோரி
##~##
மொக்கை காலேஜ்!

'தரமணியில் இருக்கும் எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் திரும்பிய திசை எல்லாம் பிரச்னைகள்’ என்று அந்தக் கல்லூரி மாணவர்களிடம் இருந்து நமது ஆக்ஷன் செல்லுக்குக் (044-42890005) குமுறல்கள். 

பெயர் சொல்லாமல் பேசிய மாணவர்கள், 'சினிமா மீது இருக்கும் ஆர்வம் காரணமாகத்தான் நாங்கள் படிக்க வந்தோம். ஆனா, இங்கே அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அடங்கிய ஒரு நூலகம் இருக்குது. ஆனா, எப்பவும் அது மூடியேகிடக்குது. தங்கும் விடுதியில், கழிப்பறை வசதி, குளியல் அறை வசதி உருப்படியாக் கிடையாது. அதனால், நாங்க திறந்தவெளியைத் தேடித்தான் போகவேண்டி இருக்கு. கேன்டீன் வசதியும் இல்லை.  

எங்களுக்கு எடிட்டிங் பயிற்சி அளிக்கணும். அதுக்கான உபகரணங்கள் இருந்தும், எங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறதே இல்லை. புதிய ஃபிலிம்களை வாங்கி வித்துட்டு, பழைய ஸ்டாக்கு களைத்தான் எங்ககிட்ட தர்றாங்க. ஒளிப்பதிவுக்குப் பயன்படும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உபகரணங்களை வாங்கினதாச் சொல்றாங்களே தவிர, இது வரைக்கும் எங்க கண்ணுல காட்டினதே இல்லை. இறுதி ஆண்டு புராஜெக்ட் படம் எடுக் கிறதுக்குத் தேவையான வசதி எதுவும் செஞ்சு தரலை. இதைவிடக் கொடுமை, இங்கே இருக்கிற தொழில்நுட்ப உபகரணங்கள் ஒவ்வொண்ணாக் காணாமப்போய்ட்டே இருக்குது, ஆனா, அதை யாரும் கண்டுக்கலை.

மொக்கை காலேஜ்!

சமீபத்தில் காலேஜ் வளாகத்தில், மாணவர்களோட பயன்பாட்டுக்காக ஏ.சி. ஃப்ளோர் கட்டினாங்க. ஆனா, அதை நாங்க பயன்படுத்த முடியலை. சினிமா கம்பெனிகளின்  ஷூட்டிங் நடத்தத்தான் தர்றாங்க. அதனால், சரியான லைட் வசதிகூட இல்லாத பழைய ஃப்ளோரைத்தான் நாங்க பயன்படுத்துறோம். எல்லாத்துக்கும் மேலா, இந்த இடம் 'ப‌லான’ இட‌மா மாறிடுச்சு. ராத்திரி நேரத்தில் ரவுடிகள் நிறையப் பேர் இங்க வர்றாங்க; போறாங்க. இந்தக்‌ கொடுமையை யாரும் தடுக்கிறது இல்லை. கல்லூரி முதல்வர் பாதி நாட்கள் கல்லூரிக்கே வர்றதில்லை. வந்தாலும், எந்த விஷயத்தையும் கண்டுக்குறதில்லை. நாங்க ப‌ல ‌முறை போராட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்திட்டோம். இருந்தும் எந்த மாற்ற‌மும்‌ ந‌ட‌க்கவே இல்லை'' என்று வெடித்தார்கள்.

மொக்கை காலேஜ்!

இது குறித்து க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ஸ்ரீத‌ரிட‌ம் பேசினோம். 'இவங்க‌ எப்ப‌வும் இப்ப‌டித்தான் ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க‌. கேன்டீன் இல்லைன்னு சொல்றாங்க. விடுதியில‌ இருக்கும்‌ 40 பேருக்காக கேன்டீன் வை‌க்க‌ யாரும் வ‌ர ‌மாட்டேங்கிறாங்க‌. ஆசிரிய‌ர்க‌ள், லைப்ர‌ரி, நிர்வாக‌ம் எல்லாம் சரியாத்தான் இருக்குது. மாணவர்கள்தான் தப்பான தகவல்களைத் தர்றாங்க'' என்றார்.

சினிமாவை மாய உலகம் என்பார்கள், சினிமா கல்லூரியும் அப்படித்தானா?

- பா.பற்குண‌ன், ப‌ட‌ங்க‌ள்: கா.கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு