Published:Updated:

வருகிறது இருண்ட காலம்!

அதிர்ச்சி தரும் நெய்வேலி

பிரீமியம் ஸ்டோரி
##~##
வருகிறது இருண்ட காலம்!

'நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் பலவித மான சிக்கல்களில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. அதனால், தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) வந்த தகவலை அடுத்து விசாரணையில் இறங்கினோம். 

என்.எல்.சி. நிறுவன அதிகாரி ஒருவர் பெயரைச் சொல்லாமல் பேசினார். ''தெர்மல் 1, தெர்மல் 1 விரிவாக்கம், தெர்மல் 2 ஆகியவற்றில் இருந்து மொத்தம் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழகத்துக்கு 1,000 மெகா வாட் மின்சாரம் கொடுக்கவேண்டும். ஆனால் இப்போது பல்வேறு காரணங்களால், 600 மெகா வாட் மின்சாரம்தான் கொடுக்கப்படுகிறது. கூடுதல் மின்சாரம் தயாரிக்க, தெர்மல் 2 விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டு, அதற்கான வேலைகள் நடக்கின்றன. அந்தத் தெர்மல் 2 விரிவாக்கம், கடந்த 2008-ல் 4,200 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு மூன்று வருடங்களில் முடிந்திருக்க வேண்டும். அதாவது கடந்த 2011 ஏப்ரல் மாதமே கட்டுமானப் பணியை முடித்து, இந்நேரம் மின் உற்பத்தியைத் தொடங்கி இருக்க வேண்டும். அதன் மூலம் கூடுதலாக 500 மெகா வாட் மின்சாரம் கிடைத்திருக்கும். ஆனால் தெர்மல் 2 விரிவாக்கத்தின் கட்டுமானப் பணி முடிப்பதற்கே, இன்னும் சில வருடங்கள் ஆகும் நிலைதான் இருக்கிறது.

வருகிறது இருண்ட காலம்!

தெர்மல் 1-ன் ஆயுட்காலம் முடிந்துவிட்டதால், அதனைப் படிப்படியாக அகற்றவேண்டும். அதில் இருந்து உற்பத்தியாகும் 600 மெகா வாட் மின்சாரமும் இனி தடைபடும். மின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக தமிழக அரசும் என்.எல்.சி. நிறுவனமும் இணைந்து தொடங்கிய ராஜஸ்தான் பிளான்ட்டும் செயல்படும் நிலையில் இல்லை. மேலும் ஏராளமான உதிரிப் பாகங்கள் வரவழைக்கப்பட்டு, பல வருடங்கள் ஆகியும் பொருத்தவில்லை என்பதால், அவை வீணாகிவிட்டன. இதுதவிர தமிழக அரசு செலுத்தவேண்டிய 800 கோடி ரூபாயும் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அதனால் தமிழகத்தில் மின் வெட்டு இன்னும் அதிகமாகும் அபாயம்தான் இருக்கிறது'' என்று சொன்னார்.

இதற்கு விளக்கம் கேட்டபோது, என்.எல்.சி நிர்வாகத்தின் சார்பில் பேசியவர்கள்,  ''தெர்மல் 2 விரிவாக்கத்திற்கான கான்ட்ராக்ட் எடுத்திருந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்காத காரணத்தால், அபராதம் விதித்து இருக்கிறோம். தெர்மல் 2 விரிவாக்கத்தில் மின் உற்பத்தியைத் தொடங்காமல், தெர்மல் 1-ஐ குளோஸ் பண்ண மாட்டோம். தமிழக அரசிடம் இருந்து வரவேண்டிய பாக்கித் தொகை, இன்னும் வரவில்லை என்பது உண்மைதான். ராஜஸ்தான் பிளான்ட்டைப் படிப்படியாக சீரமைத்துவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று மேம்போக்காகச் சொன்னார்கள்.

அப்படி என்றால் இப்போதைக்கு மின் வெட்டுக்கு முடிவே கிடையாதா?

   - க.பூபாலன்

படம்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு