Published:Updated:

"டீசல் செலவு அதிகமாக உள்ளதால் மின்சார ரயில் நிறுத்தம்!" - பாதிக்கப்படும் 10 கிராம மக்கள்

"டீசல் செலவு அதிகமாக உள்ளதால் மின்சார ரயில் நிறுத்தம்!" - பாதிக்கப்படும் 10 கிராம மக்கள்
"டீசல் செலவு அதிகமாக உள்ளதால் மின்சார ரயில் நிறுத்தம்!" - பாதிக்கப்படும் 10 கிராம மக்கள்

துரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது கருப்பட்டி எனும் கிராமம். அங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ரயில் நிலையம், 'சிறந்த கிராமப்புற ரயில் நிலையம்' என்ற விருதையும் பெற்றிருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் மதுரை - திண்டுக்கல் (வண்டி எண்: 56707) மற்றும் திண்டுக்கல் - மதுரை (வண்டி எண்: 56708) செல்லும் பயணிகள் ரயில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு நின்று செல்லும். இதன்மூலம் மதுரை, திண்டுக்கல் போன்ற நகரங்களுக்குச் செல்லும் கிராமப்புற மக்களும், படிக்கும் மாணவ மாணவிகளும் பயன்பட்டு வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ரயில் நிலையத்தை மூட உத்தரவு வந்ததையடுத்து, அங்குள்ள கிராம மக்கள் 'ஹால்ட் ஏஜென்ட்' மூலமாக டிக்கெட்களை பெற்று கருப்பட்டியிலிருந்து ரயிலில் பயணிக்கத் தொடங்கினர். ரயில் நிற்கும் சில நொடிகளில் ஏறி, இறங்கி தங்கள் பயணங்களைத் தொடர்ந்தனர்.

ஆனால், கடந்த 2016ல் இருந்து, பயணிகள் ரயில் கருப்பட்டி கிராமத்தில் நின்று செல்வது முழுவதுமாக தடை செய்யப்பட்டது. இதனால், கருப்பட்டியைச் சுற்றியுள்ள நாச்சிக்குளம், பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பத்து கிராமத்து மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர், பொதுமேலாளர், கோட்ட மேலாளர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

வழக்கு விசாரணையில் பொது மேலாளர் மற்றும் ரயில்வே கோட்ட மேலாளர் தரப்பிலிருந்து, "கருப்பட்டியில் 1 நிமிடம் ரயிலை நிறுத்தி மீண்டும் இயக்குவதால் ஆகும் டீசல் செலவு, ஆண்டுக்கு சுமார் 8 லட்சத்து 45 ஆயிரம் வரை ஆகிறது. ஆனால், இந்த ரயில் நிலையம் மூலமாக வரும் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. இதனால் ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் வரை அரசாங்கத்திற்கு நஷ்டமாகிறது. மேலும், 50க்கும் குறைவான பயணிகளே இங்கு பயணிக்கின்றனர். ஆதலால்தான் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளனர்.

இந்த தரப்பு வாதத்தால் அதிர்ச்சியடைந்த கிராமத்து மக்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக உண்மை நிலவரத்தைத் தெரிவிக்கின்றனர். "2016ல் ரயில் சேவை நிறுத்தம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளனர். நீதிமன்ற வழக்கில் ரயில்வே நிர்வாகம் டீசல் செலவைக் காரணம் காட்டியிருப்பது முற்றிலும் முரண்பாடாக உள்ளது. ஏனென்றால், 2014ம் ஆண்டிலேயே இந்த ரயில் சேவை மின்சாரமயமாக்கப் பட்டுவிட்டது. அதற்கான அனைத்து சான்றுகளும் எங்களிடம் உள்ளது. இதுதவிர 50க்கும் குறைவான பயணிகள் பயணம் செய்வதால் கருப்பட்டியில் ரயில் நிறுத்தம் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். நிச்சயமாக எங்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் ஊரிலிருந்து மட்டும் 47 பயணிகள் 'சீசனல் பாஸ்' பெற்று வெளியூர்களுக்குப் பயணிக்கிறோம். இதுதவிர நாளொன்றுக்கு 'ஹால்ட் ஏஜென்ட்' மூலமாக மட்டுமே சராசரியாக 23 பேர் ரயிலில் பயணிப்பதற்கான விவரங்களும் எங்களிடம் உள்ளது. கிராம மக்கள் முன்னேற வேண்டும் என்று பேசும் அதிகாரிகளும், அரசாங்கமும்தான் இப்படி எங்கள் நியாயமான கோரிக்கைகளைகூட ஏற்காமல் தட்டி கழிக்கின்றனர்." என்று வேதனைகளைக் கொட்டி தீர்த்தனர் கருப்பட்டி கிராம மக்கள்.

மேலும், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 2014 ல் தான் சுமார் 56 லட்ச ரூபாய் செலவில் நடைமேடையை அரசாங்கம் அமைத்து கொடுத்திருக்கிறது. நடை மேடை முழு பயன்பாட்டுக்கு வரும் முன்னரே ரயில் போக்குவரத்து முழுவதுமாக அங்கு தடை செய்யப்பட்டுவிட்டது. இப்போது அந்த நடைமேடையும் பயன்படாமல் கேட்பாரற்று கிடக்கிறது. 

மின்சார ரயில்களிலும், எரிபொருள் செலவு வரும்தான் என்றாலும், டீசல் என்ஜின்களை எலக்ட்ரிக் என்ஜின்களாக மாற்றுவதற்கான முக்கிய நோக்கமே, அதனால் ஏற்படும் செலவீனத்தை குறைப்பதற்காகத்தான். அப்படி இருக்கையில் டீசல் என்ஜினாக இருந்தபோது கணக்கு காட்டப்பட்ட அதே செலவுகளை, மின்சார ரயிலாக மாற்றியப்பிறகும் கணக்கு காட்டியிருப்பது கிராம மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கான முழுமையான ஆவணங்களுடன் ரயில்வே கோட்ட மேலாளர், நீனு இட்டியேராவைச் சந்திக்க ரயில்வே நிர்வாகத்தில் தொடர்புகொண்டோம். முதலில் மிக இயல்பாகப் பேசி, நாம் சந்திக்க வேண்டிய  காரணத்தை மெயில் வாயிலாக அனுப்பக் கேட்டிருந்த ரயில்வே கோட்ட மேலாளரின் செயலாளர் ராதா, மெயில் படித்துவிட்டு, "இதெல்லாம் முடிந்து போன கதை, இதெல்லாம் எதுக்கு தோண்டிட்டு இருக்கீங்க! மேடம் வெளியூர்ல இருந்து வந்த பிறகு சொல்றேன்" எனக் கூறிவிட்டார். ஒரு வாரம் முயற்சி செய்தும், சரியான பதில் பெறமுடியாததால் நேரிலேயே சந்திக்கச் சென்ற போது, "மெயில் வரவே இல்லையே?" என்று மிக உறுதியாகச் சொன்னார்கள். பின் நாம் மெயில் அனுப்பியதை ஆதாரமாக காட்டிய பிறகும் கோட்ட மேலாளர், ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி(PRO) வீராசாமியை சந்திக்கச் சொல்லிவிட்டதாகக் கூறினார்கள். 

மக்கள் தொடர்பு அதிகாரி வீராசாமியிடம் பேசியபோது ஏதேதோ பேசி மழுப்பிவிட்டார். இதில் முக்கியமாக, "மேடத்திற்கு தமிழ் தெரியாதே..! எப்படி பேசுவீங்க?" என்று கேட்டதெல்லாம் உச்சக்கட்டம்.

ஜப்பானில் ஒரே ஒரு பெண் குழந்தைக்காக, அச்சிறுமி படிப்பை முடிக்கும் வரை ஜப்பான் அரசாங்கம் ரயில் அனுப்பி சிறுமியின் படிப்பு தடைப்படாமல் இருக்க துணை நின்றது. ஆனால், இங்கு பொது போக்குவரத்தானது மக்களுக்காக இயக்கப்படாமல் லாப நோக்கத்தோடு மட்டுமே செயல்படுவது வேதனையளிக்கிறது.