Published:Updated:

ஆரம்பிக்கப்படுமா அம்பேத்கர் ஆராய்ச்சி மையம்?

திகுதிகு திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
ஆரம்பிக்கப்படுமா அம்பேத்கர் ஆராய்ச்சி மையம்?

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது, வேலூரில் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மீதான ஒரு குற்றச்சாட்டு, இப்போது போராட்டமாக வெடித்து வீதிக்கு வந்து விட்டது. 

குடியாத்தம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லதா, பேராசிரியர் இளங்கோவன், எழுத்தாளர் யாழன்ஆதி ஆகியோர் கடந்த 9-ம் தேதி பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார் கள்.

லதாவிடம் பேசினோம்...

''வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தப் பல்கலைக்கழகம். அதன்படியே, தலித் கலை இலக்கியம் தொடர்பான ஆய்வு மையங்களைத் தொடங்குவது, பயிற்சிக் கல்லூரியைத் தொடங்குவது, ஆய்வாளர்கள் எழுதிய பருவ இதழ்கள், நூல்களைச் சேகரிப்பது, நூலகம் ஏற்படுத்துவது, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களின் படைப்புகளை வெளியிடுவது, படைப்புகளைப் பாதுகாக்க மையம் உருவாக்குவது போன்ற தீர்மானங்கள் கடந்த 2006-ம் ஆண்டு, பல்கலைக்கழகத்தில் நடந்த ஆட்சிமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போதே, டாக்டர் அம்பேத்கர் படிப்புத் துறை உருவாக்குவதற்கான முடிவும் எடுக்கப்பட்டது.

ஆரம்பிக்கப்படுமா அம்பேத்கர் ஆராய்ச்சி மையம்?

ஆனால், தீர்மானம் நிறைவேற்றியதோடு எல்லாமே நின்றுபோனது. கடந்த வருடம் மத்திய அரசிடம் இருந்து, அம்பேத்கர் ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக பல்கலைக்கழகத்துக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி அனுப்பினார்கள். ஆனால், துணைவேந்தர் ஜோதிமுருகன், ஏதோ சில காரணங்களைச் சொல்லி அந்த நிதியைத் திருப்பி அனுப்பி விட்டார். கடந்த ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலாவிடம் உடனே தகவலைத் தெரிவித்து, அம்பேத்கர் மையம் தொடங்க அனுமதி கேட்டோம். உடனே அம்பேத்கர் மையம் தொடங்க வேண்டும் என்ற கவர்னரின் வேண்டுகோளையும் ஜோதிமுருகன் ஏற்கவில்லை. டாக்டர் அம்பேத்கருக்கு அவர் அளிக்கும் மதிப்பு இதுதானா? இதற்கு மேலும் அம்பேத்கர் அவமரியாதை செய்யப்படுவதைப் பார்த்து எங்களால் பொறுமையாக இருக்க முடியாது. நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார் ஆக்ரோஷத்தோடு.

ஆரம்பிக்கப்படுமா அம்பேத்கர் ஆராய்ச்சி மையம்?

இந்த குற்றச்சாட்டுக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜோதிமுருகன் என்ன சொல்கிறார்?  

''அம்பேத்கர் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கு வதற்கான பூர்வாங்க வேலைகள் நடக்கின்றன. அதிக பட்சம் இன்னும் இரண்டு மாதங்களில் அம்பேத்கர் மையம் தொடங்கப்பட்டுவிடும். எல்லோரும் குற்றம் சாட்டுவதைப் போல நாங்கள் மெத்தனமாக இல்லை. சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமாகிவிட்டது. எந்த நோக்கத்துக்காக பல்கலைக்கழகம் தொடங்கப் பட்டதோ, அந்த இலக்கை நோக்கி சீரிய முறையில் செயல்பட்டு வருகிறோம். மத்திய அரசிடம் இருந்து பணம் வருவதாக இருந்தது, ஆனால் இதுவரை வரவில்லை என்பதுதான் உண்மை'' என்றார் நிதானமாக.

இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் ஜோதிமுருகன்.

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு