Published:Updated:

எம்.ஜி.ஆர். கனவை நிறைவேற்றுவாரா ஜெயலலிதா?

துணைத் தலைநகர ஆசையில் திருச்சி

பிரீமியம் ஸ்டோரி
##~##
எம்.ஜி.ஆர். கனவை நிறைவேற்றுவாரா ஜெயலலிதா?

து 1983-ம் ஆண்டு. தமிழ கத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த காலம். சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு, திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்கும், அதாவது... துணைத் தலைநகரம் ஆக்கும் தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அப்போ தைய எதிர்க் கட்சித் தலைவ ரான கருணாநிதி, எவ்விதக் காரணமும் இன்றி கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், 'இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது’ என்று தன் முடிவில் உறுதியாக இருந்தார் எம்.ஜி.ஆர்! 

அதற்கான வேலைகளும் மளமளவெனத் தொடங்கின. திருச்சி - நவல்பட்டில் தலை மைச் செயலகத்தின் ஒரு பகுதி அமைக்க முடிவு செய்யப் பட்டது. திருச்சிக்கு எம்.ஜி.ஆர். வரும்போது தங்குவதற்கு ஏதுவாக உறையூர் கோணக் கரையில் ஒரு பங்களாவும் விலைக்கு வாங்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக திடீரென எம்.ஜி.ஆரின் உடல்நிலை மோசமானது. தொடர்ந்து

எம்.ஜி.ஆர். கனவை நிறைவேற்றுவாரா ஜெயலலிதா?

இந்திராகாந்தியின் துர்மரணம், உடனடித் தேர்தல் போன்ற மாற்றங்கள் நிகழவே, திருச்சியை துணைத் தலைநகராக்கும் திட்டம் நிறை வேறாமலே போனது.

இப்போது திருச்சியின் ஒரு பகுதியான ஸ்ரீரங்கம் முதல்வரின் தொகுதியாகி இருப்பதால்,  திருச்சிக்கு அதிகார அந்தஸ்து கிடைத்துள்ளது. சென்டிமென்ட் காரணமாக, அரசின் பல திட்டங்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்து தொடங்கப்படுகின்றன. இந்த சூழலில், திருச்சியை துணைத் தலைநகரமாக்கும் திட்டத் தைச் செயல்படுத்த வேண்டி கோரிக்கைகள் பலமாக எழுந்துள்ளன.

கோரிக்கைக் குரல் எழுப்பும் திருச்சி மாவட்ட சிறுகுறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதரனிடம் பேசினோம். ''திருச்சியை இரண்டாவது தலைநகரம் ஆக்குவதுதான் தமிழக நலனுக்கு நல்லது. முதலில் பரீட்சார்த்த முயற்சியாக, தலைமைச் செயலகத்தில் இருக்கும் அலுவலகங்களின் கிளைகளை திருச்சியில் அமைக்கலாம். இதன் மூலம் சென்னையில் மட்டுமே கிடைத்துவரும் வசதிகள் பரவலாக்கப்படும். சென்னையை நோக்கியே எல்லோரும் ஓடும் நிலை மாறும். மகாராஷ்டிராவுக்கு மும்பைதான் தலை நகரம் என்றாலும், புனே தொழில் தலைநகரமாக விளங்குகிறது. அது போல் திருச்சியின் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தி, பெரிய தொழிற்சாலைகள் பலவற்றையும் இங்கு கொண்டுவரலாம். துணைத் தலை நகரத்துக்குத் தேவை யான இடம், நீர், போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளும் உள்ள ஒரே இடம் திருச்சி மட்டும்தான். காலங்காலமாகப் பேர் சொல்லப் போகும் இந்தத் திட்டத்தை அம்மா அவர்கள் நிறை வேற்றினால், வரலாற்றில் இடம் பிடிப்பார்!' என்றார் ஸ்ரீதரன்.

எம்.ஜி.ஆர். கனவை நிறைவேற்றுவாரா ஜெயலலிதா?

திருச்சியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரான விஜயலெக்ஷ்மி சண்முகவேலு, 'திருச்சி, தமிழ் நாட்டின் மத்தியில் இருப்பதால், அனைத்துப் பகுதி களில் இருந்தும் இங்கு வருவது எளிது. மேலும் தூய்மையான தண்ணீர் வசதிக்கு காவிரி இருக்கிறது. ஜெட் வேகத் தில் பெருகும் மக்கள் நெருக்கத்தைச் சமாளிக்க, துணைத் தலைநகரம் ஒன்று தான் வழி. இதன் மூலம் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும். நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வரும். நிர்வாகரீதியாக அதிகாரம் பரவல் ஆக்கப்படுவதால், அரசு உதவிகள் அனைத்து மக்களுக்கும் விரைவில் சென்று சேரும். இன்னமும் வறட்சியாகவே உள்ள ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் வளர்ச்சியடையவும் இந்தத் துணைத் தலைநகரத் திட்டம் பெரிதும் கை கொடுக்கும்'' என்றார்.

எம்.ஜி.ஆர். கனவை நிறைவேற்றுவாரா ஜெயலலிதா?

ஆசிய வியாபாரக் காப்பகத்தின் தலை வரான ஜவஹர், 'சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களை முன்னேற்ற இந்தத் திட்டம் வழிவகுக்கும். தலைநகரான சென்னை வட தமிழ்நாட்டின் மூலையில் அமைந்திருப்பது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. வளர்ந்த நாடுகள் மட்டும் அல்ல... வளர்ந்த மாநிலங்களை எடுத்துக்கொண்டால்கூட, துணைத் தலைநகரத்தின் அவசியம் புரியும். சென்னையைத் தொழில் தலைநகரமாகவும், திருச்சியை நிர்வாகத் தலைநகரமாகவும் அறிவித்தாலும் நல்லதுதான். இவ்வாறு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டால், தனி மாநிலக் கோரிக்கை எழாமலும் இருக்கும்.' என்றார்.

மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஜெயலலிதாவிடம், திருச்சியை துணைத் தலைநகரமாக்கும் திட்டம் குறித்து நிருபர்கள் கேட்டபோது, ''அது மிகப் பெரிய திட்டம்'' என்று மட்டும் பதில் அளித்தார். ஆக, அவர் மனதிலும் அப்படி ஒரு திட்டம் இருப்பது தெரிகிறது. எந்த நேரமும் ஜெயலலிதாவிடம் இருந்து துணைத் தலை நகர அறிவிப்பு வரலாம் என்று திருச்சி வாழ் மக்கள் காத்திருக்கின்றனர்.

இப்போது சட்டசபையில் பெரும்பான்மை பலத்துடன் அ.தி.மு.க. இருப்பதால், எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்தத் திட்டத்தை ஜெய லலிதாவால் நிறைவேற்றிவிட முடியும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுப்பாரா ஜெயலலிதா?

- க.ராஜீவ்காந்தி

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு