Published:Updated:

''காலில் விழு, அபராதம் கட்டு, ஊரைவிட்டு ஓடு!''

புதுக்கோட்டை கட்டப் பஞ்சாயத்து...

பிரீமியம் ஸ்டோரி
##~##
''காலில் விழு, அபராதம் கட்டு, ஊரைவிட்டு ஓடு!''

'உள்ளாட்சித் தேர்தலில் நின்றதற்காக 15 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி விட்டார்கள். காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதோடு, அபராதமும் கட்ட வேண்டும் என்று அவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்’ என்று ஒரு வேதனைக் குரல் நமது ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) பதிவாகி இருந்தது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் வைத்தூர். இந்தக் கிராமத்தில்தான் மேற்சொன்ன விபரீதம். ஆக்ஷன் செல்லில் புகாரைப் பதிவு செய்திருந்த சந்திரன் நம்மிடம் பேசினார்.

''நாலு கிராமங்கள் சேர்ந்த எங்கள் பஞ்சாயத்தில், எங்களுடைய கவரா செட்டியார் சமூகத்தினருக்கு மெஜாரிட்டி ஓட்டுகள் இருக்குது. அதனால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ஆசைப்பட்டேன். எத்துரால்  மற்றும் அழகிரிசாமி ரெண்டு பேரும் எனக்கு எதிரா நின்னாங்க. வேட்பு மனுத் தாக்கல் செய்ய ஒரு வாரம் இருக்கும்போது ஊர்க் கூட்டம் போட்டு, 'யாரெல்லாம் போட்டி போடப்போறது?’னு கேட் டாங்க. நிறையப் பேர் ஆசைப்பட்டாங்க, நானும் கையைத் தூக்கினேன்.

''காலில் விழு, அபராதம் கட்டு, ஊரைவிட்டு ஓடு!''

'இந்தத் தேர்தல்ல நம்ம சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தர்தான் ஜெயிக்கணும். அதனால, நம்ம ஆட்கள்ல

''காலில் விழு, அபராதம் கட்டு, ஊரைவிட்டு ஓடு!''

யாராச்சும் ஒருத்தர்தான் நிக்கணும்’னு சொன்னாங்க. அந்தக் கருத்தை நான் ஏத்துக்கலை. ஆனா என் பேச்சைக் கேட்காம, போட்டியிட விரும்பினவங்க பேரை எல்லாம் எழுதிக் குலுக்கிப் போட்டாங்க. அதுல அழகிரிசாமி பேர் வந்திச்சு. இந்தக் குலுக்கலை ஏத்துக்காத நானும் எத்துராலும், போட்டியில் இருந்து வாபஸ் வாங்க முடியாதுனு அப்பவே சொல்லிட்டோம். போன தடவை தலைவரா இருந்த சின்னப்பா ராங்கியரும் போட்டியிட்டார். ஆனா, நாங்க மூணு பேருமே தோத்துட்டோம். ஊர் சார்பா நின்ன அழகிரிசாமி ஜெயிச்சுட்டார்.

அதுக்கு அப்புறம் யாரும் எங்களோட பேச்சு வார்த்தையே வெச்சுக்கலை. அவங்க 15 நாளைக்கு முன்னாடி ஊர்க் கூட்டம் போட்டு, 'ஊரை எதிர்த்து நின்னவங்களை, இந்த ஊரைவிட்டே ஒதுக்கிவைக்கணும்’னு பேசினாங்க. அதன்படி, 'எங்களுக்கு ஆதரவா தேர்தல் வேலை பார்த்தவங்க குடும்பங்களையும் ஒதுக்கிவெச்சிட்டாங்க. 'எங்களோட யாரும் ஒட்டு உறவு வெச்சுக்கக் கூடாது; மீறினா, அவங்களையும் இந்த ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கிறது’னு சொன்னாங்க. எங்களை ஊருக்குள்ள சேர்த்துக் கணும்னா, ஆளுக்கு 15,000 ரூபாய் அபராதம் கொடுக்கணும்னு சொன்னாங்க. ரூபாய் கொடுக்க முடியாதவங்க, கிராம நிர்வாகிகளா இருக்குற கஸ்தூரி, கிருஷ்ணன், பிச்சை, கணபதி ஆகிய நாலு பேர் கால்லேயும் விழுந்து மன்னிப்புக் கேட்டா... அபராதத் தொகையில 5,000 ரூபாய் குறைக்கப்படும்னு சொன் னாங்க. எங்களுக்கு ஆதரவா தேர்தல் வேலை பார்த்தவங்களுக்கும் இதே தண்டனை. இதுல குமார், ரவி, முருகேசன் மூணு பேரும் கால்ல

''காலில் விழு, அபராதம் கட்டு, ஊரைவிட்டு ஓடு!''

விழுந்து மன்னிப்பு கேட்க முடியாதுன்னு 15,000 அபராதம் கட்டிட்டு ஊரோட சேர்ந்துட்டாங்க. முத்துகிருஷ்ணன், சன்னாசி, எத்துரால், ராமநாதன் நாலு பேரும் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு, 10,000 ரூபாயை அபராதமாக் கட்டி இருக்காங்க. என்னோட சேர்த்து அபராதம் கட்ட முடியாதுன்னு சொன்ன எட்டு குடும்பங்கள் இப்போ வெளியூர்ல போய் இருக்கோம்.

இதுக்கெல்லாம் காரணம்... புதுசாத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் அழகிரிசாமிதான். அவர்தான் எல்லாரை யும் இயக்குறார். நாங்க உள்ளூர்க் காவல் நிலையத்துல இருந்து மாவட்ட எஸ்.பி. வரை புகார் கொடுத்திருக்கோம். விசாரிக்க வந்த போலீஸ்காரங்ககிட்ட, 'அப்படி எதுவும் நடக் கலை’னு அவங்களே சொல்லி அனுப்பிட் டாங்க. கடைசி முயற்சியா கலெக்டர்கிட்ட மனு கொடுத்து இருக்கோம்'' என்று குமுறினார்.

அபராதம் கட்டாமல் இருக்கும் எட்டுப் பேரில் ஒருவரான லெட்சுமணனின் கதை இன்னும் சோகம். ''என்னோட நெருங்கின சொந்தத்தில் ஒருத்தர் ஊருக்குள்ள செத்துட்டார். நானும் என்னோட மனைவியும் துக்கத்துக்குப் போனோம். எங்களை உள்ளே வரக் கூடாதுனு அடிக்காத குறையா விரட்டி அடிச்சுட்டாங்க. இப்ப ஒதுக்கிவெச்சிருக்கவங்க யாரையும் கூலி வேலைக்கும் கூப்பிட மாட்டாங்களாம். யார் வீட்டு நல்லது கெட்டதுலயும் கலந்துக்க விட மாட்டாங்களாம். கோயில்ல சாமி கும்பிடக் கூடா தாம். மன்னிப்புக் கேட்கவும் மனசில்லாம, அபராதம் கட்டவும் காசில்லாம அல்லாடிக்கிட்டு இருக்கேன்'' என்றார்.

இந்தப் புகார் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் அழகிரிசாமியிடம் பேசினோம். ''நாங்கள் யாரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கவில்லை. யாரிடமும் அபராதமும் வாங்கவில்லை. தேர்தலில் கிராம நிர்வாகிகள் எடுத்த முடிவை அவர்கள் ஏற்கவில்லை. தேர்தலில் தோற்ற பின்பு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த யாரிடமும் அவர்களாகவே பேசுவதில்லை. மற்றபடி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கச் சொன்னார்கள் என்பதெல்லாம் சுத்தப் பொய்...'' என்றார்.

அனைத்து விவரங்களையும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரான மகேஸ்வரியிடம் தெரிவித்தோம். ''இப்போதுதான் இந்த விபரம் எனது கவனத்திற்கு வந்திருக்கிறது. உடனே அதிகாரிகளை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கிறேன்'' என உறுதி அளித்தார்.

இது ஜனநாயக நாடுதானா?

- வீ.மாணிக்கவாசகம்,  பெ.தேவராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு