Published:Updated:

அலட்சிய அதிகாரிகள்... அலறும் விவசாயிகள்!

தென்கரைக்கோட்டை சோகம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
அலட்சிய அதிகாரிகள்... அலறும் விவசாயிகள்!

'நடக்க இருந்த விபரீதத்தை தடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் முன்கூட்டியே முறையிட்டும்கூட, அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்தேவிட்டது அந்த விபரீதம். அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களை பறிகொடுத்துவிட்டு, பெத்த பிள்ளைகளை இழந்த வேதனையில் தவிக்கிறோம்...’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) ஒரு புகார் பதிவாகி இருந்தது. 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக் காவில் இருக்கும் தென்கரைக் கோட்டைப் பகுதி விவசாய மக்களைச் சந்திக்கக் கிளம்பினோம். வளமிக்க ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம்கொண்ட பகுதி இது. விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமாக நிற்கும் தென்கரைக் கோட்டை ஏரியின் கரை கடந்த 11-ம் தேதி அதிகாலையில் உடைந்துபோகவே, ஏரியின் அடிகரையில் சுமார் 1,000 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. ஓரிரு வாரங்களில் அறுவடை செய்யலாம் என்ற நிலையில் இருந்த மஞ்சள், நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் அடியோடு அழிந்துபோகவே, வேதனையில் துடிக்கிறார்கள் விவசாயிகள்.

அலட்சிய அதிகாரிகள்... அலறும் விவசாயிகள்!

இது குறித்து தென்கரைக் கோட்டை விவசாயி யும், பி.ஜே.பி-யின் தர்மபுரி மாவட்டத் துணைத் தலைவருமான வேடியப்பன், ''எங்க வட்டாரத்தில் இருக்கும் மிகப் பெரிய ஏரி இது. 1814-ல் அமைக்கப் பட்ட இந்த ஏரியை கிட்டத்தட்ட 200 வருஷமா பராமரிப்பு செய்யாமல் வைச்சிருந்தாங்க. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டப்போ, 'கடந்த நிதி ஆண்டு தூர் வாரும் பணி செய்யப்பட்டது. ஏரி அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை வேறு எந்த பராமரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை’னு கடிதம் கொடுத்தாங்க. இத்தனை வருஷம் கேட்பாரற்றுக் கிடந்த ஏரிக் கரை ரொம்பவே பலவீனமா இருந்தது. அதனால், 'பராமரிப்புப் பணிகள் மேற் கொண்டு கரையைப் பலமாக்கிக் கொடுங்க’னு அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆனா, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஏரி யார் கட்டுப்பாட்டில் வருதுன்னு ஊரக வளர்ச்சித் துறையும், பொதுப் பணித் துறையும் முட்டிக்கிட்டாங்க. அவங்க சண்டை முடிவுக்கு வர்றதுக்குள்ளே, நாங்க பயந்த மாதிரியே கரை உடைஞ்சு பெருத்த சேதமாகிப்போச்சு.

அலட்சிய அதிகாரிகள்... அலறும் விவசாயிகள்!

பவுனு மாதிரி வெளஞ்சு நின்ன நெல்லு, மஞ்சள், கரும்புப் பயிர்களைப் பறிகொடுத்துட்டு, விவசாயிகள் நிலைகுலைஞ்சு நிக்கிறாங்க. ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் வாணியாறு அணை திறந்தாங்க. அங்க இருந்து தண்ணீர் வந்ததுமே, ஏரி 90 சதவிகிதம் நிறைஞ்சு, கடல் போல இருந்துச்சு. அடுத்த ஆண்டு அணை திறக்கும் வரை எங்க விவசாயத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லைன்னு சந்தோஷப்பட்டோம். ஆனா, கரை உடைப்பு எடுத்ததால், யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல், மொத்த நீரும் வெளியேறி வீணாப்போச்சு.

நாங்க சொன்னப்பவே ஏரிக்கரையைப் பலப்படுத்தி இருந்தா, செலவும் குறைவு; நீரும் வீணாகி

அலட்சிய அதிகாரிகள்... அலறும் விவசாயிகள்!

இருக்காது. மக்களின் வரிப் பணம் பல லட்சம் ரூபாயை இப்போ தேவை இல்லாம செலவிட வேண்டிய சூழல். இதுக்குக் காரணம் அலட்சியமா இருந்த அதிகாரிகள்தான். அதனால் எங்க கட்சி சார்பா, இந்த சம்பவத்துக்குக் காரணமான அதிகாரிகள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றத்துக்குப் போகப்போறோம். வெள்ளத்தால் அழிஞ்சு போன பயிர்களுக்கு உடனே இழப்பீடு கொடுக்கணும். அரசு தாமதப்படுத்தவோ, தட்டிக்கழிக்கவோ நினைத்தால் விட மாட்டோம். இறுதி வரை போராடுவோம்'' என்றார் கொதிப்பாக.

பொதுப் பணித் துறைக்கும் ஊரக வளர்ச்சித் துறைக்கும் இடையில் தென்கரைக் கோட்டை ஏரி தொடர்பாக நடந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, ''உடைப்பெடுத்த தென் கரைக் கோட்டை ஏரி 113 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 100 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் இருக்கும் அனைத்து ஏரிகளையும் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் அளிக்க வேண்டும் என்பது விதி. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலராக அசோக் வர்தன் ஷெட்டி இருந்தப்போ, அந்தத் துறையின் சொத்துக்களைப் பராமரிப்பது தொடர்பா சில கடுமையான விதிகளை ஏற்படுத்தினார். அதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களால்தான் 100 ஏக்கரைவிட அதிகப் பரப்பளவுகொண்ட இந்த ஏரியை பொதுப் பணித் துறை வசம் அளிப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. இதற்கிடையில், ரெண்டு துறையுமே, 'அந்த ஏரி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை’னு மெத்தனமா இருந்திருக்காங்க. இப்போ விவசாயிகளுக்குத்தான் பிரச்னை'' என்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ-வும், உயர் கல்வித் துறை அமைச்சருமான பழனி யப்பன், உடைந்த ஏரிக் கரையையும், சேதமடைந்த நிலங்களையும் பார்வையிட்ட பின், ''விவசாயிகள் யாரும் கலங்க வேண்டாம். பயிர்ச் சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு, முதல்வர் கவனத்துக்குக் கொண்டுசென்று அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும். மேலும், ஏரியை யார் நிர்வாகம் செய்வது என்பதற்கான முடிவையும் முதல்வர் வழிகாட்டுதல் படி முடிவுசெய்து அதற்கான நிரந்தரத் தீர்வு காணப்படும். எதிர்காலத்தில் இது போன்ற வருத்த மான சம்பவங்கள் நடக்காது'' என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

வந்த பின் நோவதைவிட வரும் முன் காப்பது நல்லது என்பதை, அரசு அதிகாரிகள் எப்போதுதான் உணர்வார்களோ?

- எஸ்.ராஜாசெல்லம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு