Published:Updated:

'யாருக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை'

சுரத்தில்லாத சேலம் மாநாடு

பிரீமியம் ஸ்டோரி
##~##
'யாருக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை'

முல்லைப் பெரியாறு விவகாரம் பற்றி எரியும் நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட 20-வது மாநாடு கடந்த வாரம் நடந்தது.

 நிறைவு நாள் பொதுக் கூட்டத்தில் முதலில் மைக் பிடித்த சட்டமன்றக் குழு தலைவர் சௌந்தர்ராஜன், ''மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்றும்தான் தி.மு.க-வை ஆட்டிப் படைத்தது. அதற்கு இந்த சேலமே கண் முன் இருக்கும் உதாரணம். நான் யாரைச் சொல்கிறேன்னு உங்களுக்கே புரியும்.

நூல் விலை உயர்வு காரணமா ஜவுளித் தொழில் நசிந்துகொண்டே வருகிறது. கோடிக் கணக்கான மக்கள் வேலை இழந்து உள்ளனர். ஆனால், இது குறித்துச் சிந்திக்காத மத்திய அரசு, கொள்ளை அடிக்கிற அரசாக இருக்கிறது. எப்போது எந்த வெளிநாட்டுக்குச் செல்லலாம் என்பதிலேயே பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசனையில் உள்ளார். இதைக் கவனிக்க வேண்டிய சிதம்பரம், 2ஜி வழக்கைக் கவனிப்பதில்தான் இருக்கிறார். ஆக, யாருக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை.

'யாருக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை'

கொள்ளை அடிச்சிட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வருபவர்களை, 'தியாகமே வா...’ என்று ஃப்ளெக்ஸ்

'யாருக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை'

பேனர் வைத்து வரவேற்கிறார்கள். என்ன கொடுமை பாருங்கள். முதல் அமைச்சரைத் தைரிய லட்சுமி என்று பாராட்டுகிறார்கள். நான் கேட்கிறேன்... நிஜமான தைரிய லட்சுமியாக இருந்திருந்தால், 'பால் விலையையும், பஸ் கட்டணத்தையும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உயர்த்துவோம்’ எனத் தேர்தலுக்கு முன்பே அறிவித்திருக்க வேண்டியதுதானே. மக்களுக்கு உபத்திரம் கொடுத்த யாரும் நிலையான ஆட்சி நடத்த முடியாது'' என்று அனல் கக்கினார்.

அடுத்துப் பேசிய ராமகிருஷ்ணன், ''கேரளாவில் தமிழர் களும், தமிழகத்தில் மலையாளிகளும் தாக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. சில நாட்களுக்கு முன் கொல்கத்தா மருத்துவனையில் நடந்த தீ விபத்தில் ஒரு வார்டில் ஒன்பது நோயாளிகள் மாட்டிக்கொண்டனர். அவர்களைக் காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட வினிதா, ரம்யா என்ற இரு செவிலியர்களும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மனிதநேயத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும். இரண்டு மாநில மக்கள் அடித்துக்கொள்வதால் எந்தப் பிரச்னையும் தீராது. மத்திய அரசு உரம், பெட்ரோல் விலையை உயர்த்துகிறது. மாநில அரசு பால், பஸ் கட்டணத்தை உயர்த்துகிறது. எல்லோரும் சேர்ந்து மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள். அவர்களின் வயிறு எரிந்தால், யாரும் தாங்க மாட்டீர்கள்...'' என்றார்.

'முல்லைப் பெரியாறு விவகாரத்துல என்ன செய்யப்போறாங்கன்னு சொல்லவே இல்லையே...’ என்று சலசலத்துக் கலைந்தது கூட்டம்.

- ம.சபரி,  ம.கா.தமிழ்ப்பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு