Published:Updated:

''வசிய மருந்து.. கருவாட்டுக் குழம்பு!''

கொலைகார மந்திரவாதி

பிரீமியம் ஸ்டோரி
##~##
''வசிய மருந்து.. கருவாட்டுக் குழம்பு!''

தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசலைச் சேர்ந்தவர் முனியாண்டி. விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்தியபிரபா. கடந்த 8-ம் தேதி 'ஆட்டுக்காகப் புல் அறுத்து வருகிறேன்’ என்று வயல்வெளிக்குச் சென்ற சத்தியபிரபா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உடனே தூரத்து உறவினரான தங்கராஜ் என்கிற மந்திரவாதியிடம் (?) குறி கேட்டார்கள். சத்தியபிரபா கொலை செய்யப்பட்டு இருப்பதாகச் சொன்ன மந்திரவாதி, அவள் பிணம் இருக்கும் திசையையும் மிகச் சரியாக சொல்லி இருக்கிறார். அங்கே சென்று பார்த்தபோது, நிஜமாகவே சத்தியபிரபா கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். 

''வசிய மருந்து.. கருவாட்டுக் குழம்பு!''

எல்லோரும் தங்கராஜின் மகிமையை சிலா​கித்துக்​கொண்டிருக்க, 'இந்தக் கொலையை செய்ததே, திசை காட்டிய மந்திரவாதிதான்’ என்று போலீஸார் தங்கராஜைக் கைது செய்து, ஏரியாவை அதிரவைத்திருக்கிறார்கள்.

விசாரணை அதிகாரியான சாயர்புரம் எஸ்.ஐ. பாஸ்கரன் நம்மிடம், ''இறந்துபோன சத்தியபிரபாவும் கொலை செய்த தங்கராஜும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவங்க. சத்தியபிரபாவின் உறவினர் வீட்டில் தங்கராஜ் பெண் எடுத்திருப்பதால், ரெண்டு குடும்பமும் பட்டும் படாமலும் நெருக்கத்தில் இருந்திருக்காங்க. தூத்துக்குடியில் மனைவி குழந்தைகளோடு இருந்த தங்கராஜ், அவ்வப்போது மந்திரவாத செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கான். இதுக்கிடையில் ஒரு நாள் 'ஒரு ஆம்பளையை வசியம் பண்ணணும். மருந்து கொடு’னு தங்கராஜ்கிட்ட சத்தியபிரபா கேட்டிருக்கிறார். அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளிச்சிருக்கான்.

தூத்துக்குடியில் வேறு ஒரு பெண்ணோடு தங்கராஜுக்குத் தொடர்பு இருக்கிறது. அந்தப் பெண்ணுடன் குஜராத்துக்குப் போய் துணி வியாபாரம் செய்ய தங்கராஜ் திட்டம் போட்டிருக்கான். அதுக்குப் பணம் வேண்டுமே என்று யோசித்த நேரத்தில்தான், சத்தியபிரபாவும் அவள் போட்டிருந்த தங்க செயினும் நினைவுக்கு வந்திருக்​கிறது.  உடனே அவளுக்கு போன் அடிச்ச தங்கராஜ், 'திரவி​யபுரம் சுடுகாட்டுப் பகுதிக்கு வந்திடுங்க. நீங்க கேட்ட வசிய மருந்தைத் தர்றேன்’னு கூப்பிட்டு இருக்கான்.

''வசிய மருந்து.. கருவாட்டுக் குழம்பு!''

சத்தியபிரபாவும், புல் அறுக்கப் போறது போல் அரிவாளைக் கையில எடுத்துக்கிட்டு, அவன் கூப்பிட்ட இடத்துக்குப் போயிருக்கா. அங்கே தூக்க மாத்திரைகள் கலந்த திருநீறை வெத்தலையில வைச்சு சாப்பிடக் கொடுத்திருக்கான். 'கசப்பாக இருந்தாத்தான் வசியம் நல்லா வேலை செய்யும்’னு சொல்லி இருக்கான். அவளும் அதை நம்பி முழுக்க சாப்பிட்டா. அடுத்து, 'உங்க உடம்புல இருந்து அழுக்கை எடுத்து, நான் வைச்சிருக்குற மந்திரப் பொடியில் கலந்து மந்திரிச்சுத் தர்றேன். அதை நீங்க விரும்புறவங்களுக்கு கருவாட்டுக் குழம்புல கலக்கிக் குடுங்க. அப்புறம் அவங்க நீங்க சொன்னபடி எல்லாம் ஆடுவாங்க’ன்னு ஆசை வார்த்தை காட்டி இருக்கான். மாத்திரை மயக்கமும், அவன் சொன்ன வார்த்தையில இருந்த நம்பிக்கையிலேயும் சத்தியயபிரபா அமைதியாப் படுத்திட்டா, அப்படியே மயக்கமாயிட்டா.

சத்தியபிரபா கொண்டுபோன அரிவாளை வைச்சே, அவ கழுத்தை அறுத்துட்டு, நகைகளை எடுத்துக்கிட்டு எஸ்கேப் ஆயிட்டான். தன்னோட கள்ளக் காதலிகிட்ட எல்லா நகைகளையும் கொடுத்து பேங்க்ல அடகுவைச்சு, பணம் வாங்கி இருக்கான்.

இதுக்கிடையில வீடு திரும்பாத சத்தியபிரபாவைப் பற்றி மந்திரவாதியான தங்கராஜிடமே குறி கேட்டு இருக்காங்க. அப்போ அவன், 'ஊர்ல இருந்து தென் கிழக்குல இருக்குற சுடுகாட்டுல கொலைச் செய்யப்பட்டு கிடக்குறா’னு தெளிவா சொல்லி இருக்கான். 'கொலை செஞ்சது யார்?’னு அவங்க கேட்க... 'என்னை மாதிரி கட்டையா, திடகாத்திரமா கையில மோதிரம் போட்டு இருப்பான்’னு தன்னோட அடையாளத்தையே சொல்லி இருக்கான். அவன் சொன்ன திசை நோக்கித் தேடினவங்களுக்கு சத்தியபிரபாவோட பிணம் கிடைச்சிருக்கு.

கொலை பற்றி எங்களுக்குத் தகவல் கிடைச்சது. 'காட்டுக்குள்ள இந்த உடலை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?’னு தகவல் கேட்டப்ப, 'தங்கராஜ்தான் தன்னோட மந்திர சக்தியால் காட்டிக்கொடுத்தார்’னு அப்பாவியா சொன்னாங்க. அதே சமயம், 'சத்தியபிரபாவோட கடைசியா செல்போன்ல பேசினது யாரு’ன்னு தனிப் பிரிவு மூலமா விசாரிச்சோம். தங்கராஜ் கூப்பிட்டது தெரிஞ்சது. அதனால, 'அவன்தான் கொலையாளி’ன்னு முடிவு செஞ்சு பிடிச்சு விசாரிச்சோம். எல்லா உண்மையையும் கக்கிட்டான்'' என்றார் விலாவரியாக.

சத்தியபிரபாவின் கணவர் முனியாண்டியிடம் பேசினோம். ''என் மனைவி ரொம்ப நல்லவ. கொஞ்ச நாளா எங்க குடும்பத்துக்குள்ள புகுந்த இந்த மந்திரவாதி, தன்னோட மந்திர சக்தியை வைச்சு என் மனைவி மனசைக் கெடுத்துட்டான். எல்லாம் அவளோட தாலி செயினைப் பறிக்கிறதுக்காக செஞ்ச வேலை. இப்போ அவன் தப்பிக்கிறதுக்காக, 'அவ வசியம் செய்ய மருந்து கேட்டா’னு தப்புத் தப்பா சொல்லி நாடகம் ஆடுறான். எம் பொண்டாட்டியை இவன் ஒருத்தனால் கொன்னிருக்க முடியாது. கூட்டாளிங்க சேர்ந்துதான் இந்தக் காரியத்தை செஞ்சிருக்கணும். அதனால், முழுமையா விசாரிக்கணும்'' என்றார்.

இன்னும் எத்தனை காலம்தான் போலி மந்திரவாதிகளிடம் மக்கள் ஏமாறப்போகிறார்களோ?

- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு