Published:Updated:

''ஓஹோனு வாழலாம் வாங்க...!''

கமுதி மக்களை கவிழ்த்த போலி நிறுவனம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
''ஓஹோனு வாழலாம் வாங்க...!''

திக வட்டி தருவதாகச் சொல்லி மக்களை ஏமாற்றும் நிறுவனங்கள் பற்றி எத்தனை செய்திகள் வந்தாலும், 'ஏமாந்தே தீருவோம்’ என்று மக்கள் அந்த மாய வலையில் சிக்கினால் என்ன செய்வது? சமீபத்தில் மக்களை மொட்டை போட்டது, ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த குளோபல் பிசினஸ் கார்ப்பரேசன் என்ற நிறுவனம். 

அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த கண்ணாயிரமூர்த்தி நம்மிடம், ''அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் மூலம் வெங்கடாசலம் எங்களுக்கு அறிமுகம் ஆனார். அவர் எங்களிடம் 'நான் சென்னையில் குளோபல் டிரேடிங் கம்பெனி, குளோபல் பிசினஸ் கார்ப்பரேசன், குளோபல் அசோசியேட்ஸ் போன்ற நிறுவனங்களை நடத்துகிறேன். எங்களிடம் 10,000 ரூபாய் முதலீடு செய்தால், மாதம் தலா 2,000 ரூபாய் வீதம் 12 மாதங்கள் திருப்பித் தருவோம்’ என்று சொன்னார்.

''ஓஹோனு வாழலாம் வாங்க...!''

வெங்கடாசலம், அவரது மனைவி மீனாட்சி, மகன் மகேஷ், பங்குதாரர்கள் மோகனன், அமல்ராஜ் ஆகியோர் எங்கள் ஊரில் இருந்த திருமண மண்டபத்தில் கூட்டம் போட்டுப் பேசி கவர்ச்சிகரமான

''ஓஹோனு வாழலாம் வாங்க...!''

மேலும் சில திட்டங்களை அறிவித்தார்கள். இதை நம்பி, கமுதி, மண்டலமாணிக்கம், அம்மன்பட்டி, மூலக்கரைபட்டி, பெருமாள்தேவன்பட்டி உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நிறையப் பேர் பணத்தைக் கட்டினார்கள்.

நான் முதலில் 10,000 ரூபாயை வெங்கடாசலத்தின் கணக்கில் போட்டேன். எனக்கு இரண்டு மாதங்களுக்கு தலா 2,000 ரூபாய்க்கு செக் வந்தது. இதனால் அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து, மறுபடியும் 50,000 கட்டினேன். அதற்கும் இரண்டு மாதங்களுக்கு செக் வந்தது. இதனால் சொந்தக்காரர்கள், அக்கம் பக்கம் குடியிருந்தவர்களிடம் பணம் வசூல் செய்து 19 லட்சம் கட்டினேன். மூன்றாவது மாதத்தில் இருந்து பணமே வரவில்லை.

வெங்கடாசலத்தை போனில் தொடர்புகொண்டால், அவர் போனை எடுக்கவே இல்லை. பங்குதாரர் மோகன னிடம் போனில் பேசினேன். அவரும் சரியான பதில் தரவில்லை. நேரிலும் சந்திக்க முடியவில்லை. அதனால் அவர்களின் சென்னை முகவரிக்குப் போனால், அங்கு அப்படி ஒரு

''ஓஹோனு வாழலாம் வாங்க...!''

நிறுவனமே இல்லை. எப்படியோ விசாரித்து, வெங்கடாசலத்தின் வீட்டுக்குப் போனேன். வீட்டில் இருந்த அவரது மனைவி, 'என் புருஷன் காணாமப்போயிட்டார். போலீஸில் புகார் கொடுத்து இருக்கேன்’ என்று சொன்னார். என்னை நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை...'' என்றார் பரிதாபமாக!

மண்டலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப.ராணி

''ஓஹோனு வாழலாம் வாங்க...!''

15 லட்சம் பணத்தை இழந்துள்ளார். அவர் நம்மிடம், ''நான் எங்க ஊர் மகளிர் மன்றத்தில் நிர்வாகியாக இருக்கிறேன். மகளிர் மன்றத்தைச் சேர்ந்த பெண்களை வைச்சுக் கூட்டம் போட்ட வெங்கடாசலம், 'ஒரு முறை மட்டும் பணத்தைக் கட்டுங்க. ஓஹோன்னு வாழலாம். கூடவே, உங்களுக்குக் கீழே ரெண்டு பேரைச் சேர்த்துவிட்டா, பணம் பல மடங்காப் பெருகி ஒவ்வொரு மாசமும் வீடு தேடி வரும்’னு சொன்னார். அவர் பேச்சை நம்பி நகையை எல்லாம் அடகுவைச்சு பணத்தைக் கட்டினேன். மகளிர் மன்றத்தில் இருக்கிற பலரையும் இந்தத் திட்டத்தில் சேர்த்துவிட்டேன். ஆனா, அவங்க சொன்னபடி ரெண்டு மாசம்தான் கொடுத்தாங்க. இப்போ அத்தனை பணத்தையும் இழந்துட்டு நிக்கிறேன்...'' என்றார் அழாத குறையாக!

இது குறித்து விளக்கம் கேட்க வெங்கடா​சலத்தைத் தொடர்புகொள்ள முடியாத காரணத்​தால், அவரது மகன் மகேஷிடம் விளக்கம் கேட்டோம். ''எங்க அப்பா பணம் வசூல் செய்தது உண்மைதான். ஜூலை மாதம் வரை முதலீட்டாளர்களுக்கு பணத்தை அவர் செலுத்தினார். அதன் பின் நாங்கள் முதலீடு செய்த நிறுவனங்களில் இருந்து எங்களுக்குப் பணம் வரவில்லை. அதனால்தான் தொடர்ந்து எங்களால் பணம் அனுப்ப முடியவில்லை. இந்த அதிர்ச்சியால் என் அப்பாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவரை மருத்துவமனையில் சேர்த்தோம்.

அவர் பணத்துக்காக எங்கெங்கோ அலைந்துகொண்டு இருந்தார். கடந்த மாதம் பணம் வாங்க வெளியூர் செல்வதாகக் கூறிச் சென்றவர், இது வரை திரும்பி வரவே இல்லை. இது குறித்து போலீஸிலும் புகார் செய்து உள்ளோம். நாங்கள் டெபாசிட் செய்த நிறுவனங்களிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் பணத்தை உரியவர்களிடம் கொடுத்துவிடுவோம்...'' என்றார்.

நிதி மோசடி குறித்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.-யான காளிராஜ் மகேஷ்குமாரிடம் பேசினோம். ''குளோபல் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்ததாக ஒருவர் மட்டுமே புகார் அளித்துள்ளார். அதில், 'தங்கள் ஊரைச் சேர்ந்த 350 நபர்கள் சுமார் 2 கோடி ரூபாய் வரை கட்டி ஏமாந்து இருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளார். விரிவான விசாரணை நடக்கிறது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

பேராசை பெருநஷ்டம்தான்!

- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு