Published:Updated:

டெங்குவைவிட அமைச்சர் ஆடியோதானே அரசாங்கத்துக்கு பேரிடர் பிரச்னை?!

டெங்குவைவிட அமைச்சர் ஆடியோதானே அரசாங்கத்துக்கு பேரிடர் பிரச்னை?!
டெங்குவைவிட அமைச்சர் ஆடியோதானே அரசாங்கத்துக்கு பேரிடர் பிரச்னை?!

மிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் கடந்த 22-ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தக்‌ஷன், தீக்‌ஷா என்ற இரட்டைக் குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகிய சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று கோவையில் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதுதவிர, மாவட்டந்தோறும் ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி, பன்றிக் காய்ச்சலும் டெங்கு காய்ச்சலும் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசாங்க தரப்பிலிருந்து டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு 11 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், 'கடந்த ஒருவருடத்தில் மட்டும் 5 பேர் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகி இருக்கின்றனர்' என்று  குறிப்பிட்டுள்ளார். இப்படி அறிவித்திருக்கும் அரசாங்க அறிவிப்பில் உண்மையில்லை எனக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்துப் பேசிய சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், "மழைக்காலம் என்பதால் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக ஏ.டி.எஸ் எனப்படும் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நல்ல நீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்துவந்த இந்தக் கொசுக்கள், தற்போது கெட்ட தண்னீரிலும் இனப்பெருக்கதைத் தொடங்கியுள்ள அபாயம் எற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 4,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெங்கு பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்தது. 

அதேபோன்ற அபாயகர சூழல் தற்போதும் நிலவி வருகிறது. மேலும் காய்ச்சல் காரணமாக ஏற்படும் உயிரிழப்பின் உண்மையான விவரங்களை வெளியிடாமல் அரசாங்கம் மறைத்து வருகிறது. குறிப்பாக, 'ஒருவருக்கு ரத்த பரிசோதனை செய்து 'பாசிடிவ்' என ரிப்போர்ட் வந்தால், அதை அப்படியே கொடுக்கக் கூடாது என எங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன' என்கின்றனர், தனியார் பரிசோதனை நிலைய ஊழியர்கள். கொசு ஒழிப்பு பணிக்காக இதுவரை தமிழக அரசு எந்தவொரு சரியான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இந்தப் பணியில் இருப்பவர்கள் ஒப்பந்த அடிப்படையில் உள்ளனர். அதுவும் வருடம் முழுவதுமான ஒப்பந்தப் பணியாளர்கள் இல்லை. இத்தனை நாள் சுகாதாரத்துறை பிரதிநிதிகள் தூங்கி இருந்துவிட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியவுடன் ஆய்வு மேற்கொள்கிறார்கள். சிறப்புக் குழுக்கள் அமைப்பதாகப் போலியான நாடகத்தை அரங்கேற்றம் செய்கிறார்கள்" என்றார் சற்றே கோபமாக.

இதுகுறித்துப் பேசிய சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆறுமுகம், ``டெங்கு காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும் மாறி மாறி மக்களின் உயிரைக் குடிப்பதற்கு முக்கியக் காரணம், உள்ளாட்சி  நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போனதே ஆகும். அரசாங்க அதிகாரிகள் அவரவர் பணிகளை யாரும் ஒழுங்காகச் செய்வதில்லை. குறிப்பாக, தனிப்பட்ட முறையில் என்னுடைய மனைவி பன்றிக் காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்டார். அரசுத் தரப்பிலிருந்து அதுகுறித்து கேட்டறிந்தார்கள். நானும், மருந்து கொடுக்கத்தான் விசாரிக்கிறார்கள் என்று எண்ணி இருந்தேன். அடுத்த நாள் மாநகராட்சியிலிருந்து எந்த அலுவலர்களும் தொடர்புகொள்ளவில்லை; மருந்தும் கொடுக்கவில்லை. இறுதியாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தேன். மேலும், அரசுத் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் மருந்துக்காக அரசு அலுவலர்களைத்

தொடர்புகொண்டு கேட்டபோது, 'நாங்கள், இதை அரசுக் கோப்புகளில் பதிவுசெய்யும்படி கேட்டோம். ஆனால் அவர்களோ, 'மருந்து  மாத்திரைகள் குறித்து வெறொரு பிரிவில் உள்ள அலுவலர்கள் உங்களிடம் சொல்வார்கள்' என்று போனை வைத்துவிட்டார்கள். இதுதொடர்பாகப் பலரைத் தொடர்புகொண்டும் என் மனைவிக்கு மாநகராட்சி தரப்பிலிருந்து சிகிச்சை பெற முடியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, நமக்கு டெங்கு வந்தால் file. நம்மை பொறுத்தவரை அது life.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அடிப்படைப் பிரச்னைகளுக்காக... மக்கள் ஓரளவுக்காவது அதிகாரிகளை நெருங்கியிருக்க முடியும். ஆனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இந்த அ.தி.மு.க அரசு தவிர்த்துவருகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் தற்போது உள்ள அ.தி.மு.க பிரதிநிதிகள் எவரும் ஒரு வார்டில்கூட உறுப்பினராக வர முடியாது என்று அவர்களுக்கே தெரியும். அதன் காரணமாகத்தான் அவர்கள் தேர்தலை நடத்தத் தயக்கம் காட்டுகின்றனர். இப்படியான அவர்களுடைய சுய லாபத்துக்காகத்தான் மக்களைப் பலிகொடுத்து வருகின்றனர். எப்போது எந்த ஆடியோ, எந்த வீடியோ வெளியாகுமோ என்ற பயத்திலும், அதனால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற நிலையிலும் இருப்பவர்களுக்கு மக்களைப் பற்றிய கவலை எங்கே இருக்கப்போகிறது" என்றார் சற்றே ஆதங்கத்துடன்.

"இந்திய ஜனநாயகம் என்பது மத்தியில் அமர்ந்திருக்கும் 20 பேரால் கட்டமைக்கப்படுவது அல்ல; கிராமப் பஞ்சாயத்துகளைக் கட்டமைப்பதிலிருந்தே தொடங்குகிறது" என்றார் மகாத்மா காந்தி. அப்படிப்பட்ட ஜனநாயகத்தின் வேர்களாக இருக்கக்கூடிய உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளைப் பலப்படுத்தாமல் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாது என்பதே சமூக ஆர்வலர்களின் வாதமாக உள்ளது.