Published:Updated:

``நான் ஏன் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டேன்?’’ விளக்குகிறார் கேரளா ரெஹானா பாத்திமா

எல்லா வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற தீர்ப்பை அடுத்து, சபரிமலைக்குச் சென்ற பெண்களில் ரெஹானாவும் ஒருவர். அதைத் தொடர்ந்து நடந்த சர்ச்சைகள், அவரது பணியிட மாற்றம் எல்லாம் பரபரப்பானது.

``நான் ஏன் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டேன்?’’ விளக்குகிறார் கேரளா ரெஹானா பாத்திமா
``நான் ஏன் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டேன்?’’ விளக்குகிறார் கேரளா ரெஹானா பாத்திமா

``சபரிமலைக்குப் போகணும் என்பது என்னோட லட்சியம். கடந்த 13 வருடங்களாக இந்து மதத்தைத்தான் பின்பற்றுகிறேன். அப்பவே இஸ்லாம் மதத்திலிருந்து என்னை நீக்கிட்டதாக எனக்குத் தகவல் கிடைச்சது. இப்போது சபரிமலைப் போன சர்ச்சையைத் தொடர்ந்து, என்னை இஸ்லாம் மதத்திலிருந்து நீக்கறதா ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்காங்க. என் பெயரை மாத்திக்க வற்புறுத்தறாங்க. ஒரு மதத்துக்கு இவங்கதான் தலைமை என எப்படி இவங்களே முடிவுபண்றாங்க எனத் தெரியலை'' என்கிறார் ரெஹானா பாத்திமா.

எல்லா வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற தீர்ப்பை அடுத்து, சபரிமலைக்குச் சென்ற பெண்களில் ரெஹானாவும் ஒருவர். அதைத் தொடர்ந்து நடந்த சர்ச்சைகள், அவரது பணியிட மாற்றம் எல்லாம் பரபரப்பானது. இவரின் வீட்டை மர்ம நபர்கள் தாக்கினர். பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கேரள முஸ்லிம் ஜமாத் மன்றம், இவரை இஸ்லாம் மதத்திலிருந்து விளக்கிவைப்பதாக அறிவித்தது. சபரிமலை சம்ரக்‌ஷனா சமிதி, தங்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தியதாக இவர்மீது, பதனம்திட்டா காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து அவரிடம் பேசினேன்.

``உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட ஒரு தீர்ப்பை பின்பற்றித்தானே நான் சபரிமலைக்குப் போனேன். மற்றபடி நான் எந்தத்

தவறான விஷயங்களிலும் ஈடுபடலையே? என் மேலே வழக்கு இருக்கு என்பதைச் செய்திகளில் பார்த்துத்தான் நானே தெரிஞ்சுக்கிட்டேன். அதனால், நானும் சட்டப்படி இந்த விவகாரத்தை அணுக முடிவுசெய்துட்டேன்” என அழுத்தமான குரலில் சொன்னாலும், சற்றே தயக்கத்துடனும் நிதானத்துடனுமே பேசுகிறார் ச.ரெஹானா பாத்திமா.

கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கும் ரெஹானா, “சபரிமலைக்குப் போயிட்டு வந்து இவ்வளவு நாள் ஆச்சு. ஆனால், அதன் தாக்கம் இன்னும் இருந்துட்டே இருக்கு இல்லையா. இதுவே ஒரு வெற்றியாக நான் நினைக்கிறேன். முறைப்படி 21 நாள் விரதமிருந்து, இருமுடி கட்டித்தான் சபரிமலைக்குப் போனேன். ஆனால், ஏதோ செய்யக்கூடாத குற்றம் செஞ்ச மாதிரி இப்பவும் மிரட்டல்கள் வந்துட்டே இருக்கு. எனக்கும் குடும்பம் இருக்கு. குழந்தைகள் இருக்கு. என் ஆறு வயசு மகளைப் பாலியல் வன்முறை செய்வோம்னு மிரட்டறாங்க. இன்னிக்கும் பாதுகாப்புக்குக் காவல்துறை வீட்டைச் சுற்றி இருக்காங்க. 

இதில், இன்னொரு வதந்தியும் போயிட்டிருக்கு. எனக்குத் தண்டனையாகவே, நான் பணியாற்றும் பி.எஸ்.என்.எல், என்னை பலரிவொட்டம் என்ற இடத்துக்கு இடமாற்றம் செய்தாங்கனு பலரும் சொல்லிட்டிருக்காங்க. அது உண்மையில்லை. சபரிமலைக்குப் போயிட்டு வந்ததுக்கு அப்புறம், வழக்கம்போல ஆபீஸ் போனேன். அங்கும் எனக்கு எதிரா கோஷம் போட நிறைய பேர் வந்தாங்க. என் பாதுகாப்பு கருதியே டிரான்ஸ்ஃபர் கொடுத்தாங்க” என விளக்குகிறார் ரெஹானா பாத்திமா.

சபரிமலை சர்ச்சையில், பெண்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று ராகுல் ஈஸ்வர் தொடர்ந்து குரல் கொடுத்துவருவது குறித்து பேசியபோது, “இது ராகுல் ஈஸ்வர் என்ற ஒரு தனிப்பட்ட நபர் மட்டும் செய்யும் செயல் அல்ல. இந்து சமூகமும், பா.ஜ.க அரசும் செய்யும் ஒட்டுமொத்த எதிர்ப்பு. உச்ச நீதிமன்றம் கூறிய ஒரு தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாத ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பது எவ்வளவு ஆபத்தமான ஒரு விஷயம்” என்றார். 

மீண்டும் சபரிமலை செல்லும் எண்ணம் உண்டா என்று கேட்டால், ``சபரிமலைக்கு மீண்டும் செல்வது குறித்து இன்னும் யோசிக்கவில்லை. ஆனால், என்னைப்போன்று இன்னும் நிறைய பெண்கள் இனி சபரிமலைக்குச் செல்வார்கள். தெய்வ வழிபாட்டில் ஆண்-பெண் பேதத்தை என்னால் ஏற்க முடியாது. இதில் சம உரிமை கிடைக்க வேண்டும் அவ்வளவுதான் என் கோரிக்கை” என்கிறார் ரெஹானா பாத்திமா.