Published:Updated:

``எமர்ஜென்ஸி காலத்தின் நிழல் படரத் தொடங்கியுள்ளது" - ரெய்டு குறித்து சீறும் அம்னெஸ்டி இந்தியா!

"`நெருக்கடி நிலை போன்ற அடக்குமுறையான காலகட்டங்கள் புனிதமான இந்திய வரலாற்றில் கறையை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது' என பிரதமர் கூறுகிறபோது எங்களால் ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அந்தக் கொடூரமான ஒடுக்குமுறை காலகட்டத்தின் நிழல் தற்போது மீண்டும் இந்தியாவின்மீது படரத் தொடங்கியுள்ளது."

``எமர்ஜென்ஸி காலத்தின் நிழல் படரத் தொடங்கியுள்ளது" - ரெய்டு குறித்து சீறும் அம்னெஸ்டி இந்தியா!
``எமர்ஜென்ஸி காலத்தின் நிழல் படரத் தொடங்கியுள்ளது" - ரெய்டு குறித்து சீறும் அம்னெஸ்டி இந்தியா!

பெங்களுரூவில் உள்ள `அம்னெஸ்டி இந்தியா'-வின் அலுவலகத்தில் கடந்த 25-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மதியம் 2 மணிக்குத் தொடங்கிய சோதனை 10 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. ``அதிகாரிகளின் சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். எங்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெற்று வந்துள்ளது” என அம்னெஸ்டி ட்விட்டர் பதிவில் அப்போது தெரிவித்தது.

இந்தச் சோதனை பற்றி அமலாக்கத் துறை தன்னுடைய அறிக்கையில், ``அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் இந்திய அறக்கட்டளைக்கு  வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் (எப்.சி.ஆர்.ஏ.) வெளிநாட்டு நிதி பெறுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்தது. இந்தக் காரணத்தால், `அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா' என்ற வர்த்தக நிறுவனத்தைப் பதிவுசெய்து அதன் பெயரில் வெளிநாட்டு நிதியை அம்னெஸ்டி பெற்றுள்ளது. இதுநாள் வரையில் அந்நிய நேரடி முதலீடாக (எஃப்.டி.ஐ.) ரூ.36 கோடி வரை அம்னெஸ்டி பெற்றுள்ளது. அது, எஃப்.டி.ஐ. விதிமுறைகளை மீறுவதாக உள்ளது. இதன் அடிப்படையில்தான் சோதனை நடத்தப்பட்டு அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அதில் தெரிவித்துள்ளது.

அம்னெஸ்டி இந்தியாவின் வங்கிக் கணக்குகளையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ``இந்த நாட்டில் சிவில் சமூகத்தின்மீது அரசாங்கம் நடத்திவருகிற தாக்குதலின் அடுத்தகுறியாக அம்னெஸ்டி ஆகியுள்ளது” என இந்த ரெய்டு பற்றி அம்னெஸ்டி குறிப்பிட்டிருந்தது. ஏற்கெனவே, இந்த அக்டோபர் மாத தொடக்கத்தில், `க்ரீன் பீஸ் இந்தியா'-வின் நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன.

அமலாக்கத் துறையின் சோதனையைக் கண்டித்து அம்னெஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``விசாரணையின்போது கேட்கப்பட்ட பெரும்பாலான ஆவணங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு பொதுவெளியிலும் கிடைப்பவைதாம். விசாரணையில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்திய அம்னெஸ்டி அமைப்பைப் பற்றிய தகவல்களும் 2014-ம் ஆண்டு முதல் எங்களுடைய இணையதளத்திலே கிடைக்கின்றன" என்றது.

அம்னெஸ்டி இந்தியாவின் ஆகர் பட்டேல் பேசியபோது, ``இந்தியாவில் அரசு அதிகாரிகள், தொடர்ச்சியாக மனித உரிமை அமைப்புகளைக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் போன்று நடத்தி வருகிறார்கள். நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டுச் செயல்படும் அமைப்பான அம்னெஸ்டி, இந்தியாவின் தேசிய ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டே செயல்பட்டு வந்துள்ளது. நம்பகத்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் எங்களுடைய பணிகளில் எப்போதும் கடைப்பிடித்து வந்திருக்கிறோம். மற்ற நாடுகளைப்போலவே இந்தியாவிலும் எங்களுடைய பணி என்பது மனித உரிமைகளை நிலைநாட்டுவதே ஆகும். மனித உரிமை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்டு இந்தியாவின் நீண்ட பன்மைத்துவ, சகிப்புத்தன்மை கொண்ட மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்கக்கூடிய பாரம்பர்யத்தின் நீட்சியாக இருந்து வருகிறது. 

`நெருக்கடி நிலை போன்ற அடக்குமுறையான காலகட்டங்கள் புனிதமான இந்திய வரலாற்றில் கறையை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது' என பிரதமர் கூறுகிறபோது எங்களால் ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அந்தக் கொடூரமான ஒடுக்குமுறை காலகட்டத்தின் நிழல் தற்போது மீண்டும் இந்தியாவின்மீது படரத் தொடங்கியுள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் தற்போது மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்களை குறிவைத்து ஒடுக்கிவருகிறது” என்றார்.

இந்தத் திடீர் சோதனைகளைப் பற்றி அமலாக்கத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஏ.கே.ராவல் நம்மிடம் கூறுகையில், ``அம்னெஸ்டி ரெய்டில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் பற்றி விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில்தான் தெளிவாக என்ன இருக்கிறது எனக் கூற முடியும். விசாரணையின் முடிவுகளைப் பொறுத்துதான் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைப் பற்றி முடிவெடுக்க முடியும். தற்போது, ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. திடீர் சோதனைக்கான காரணங்கள் ஏற்கெனவே ஊடகங்களிலும் பொது வெளியிலும் இருக்கின்றன. அதைப் பற்றி மேலும் எதுவும் கூற முடியாது. மேலும், சில விஷயங்களைத் தொடர்புப்படுத்தி விசாரிக்க வேண்டியிருக்கிறது” என்றார்.

மேலும், இந்தத் திடீர் சோதனைகளின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பற்றி இருதரப்புச் செய்தித் தொடர்பாளர்களிடம் விசாரித்தோம். அப்போது அம்னெஸ்டி தரப்பில், ``இன்று வரை எங்களுக்கு அமலாக்கத் துறையிலிருந்து எந்தவொரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வரவில்லை. அதைப் பொறுத்துதான் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கையானது இருக்கும்” என்றனர். அமலாக்கத் துறை தரப்பில், ``விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வரும் நவம்பர் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை இந்த ரெய்டு தொடர்பாக ஒரு கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதன்பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றித் தெரிவிக்க முடியும்” என்றனர்.