Published:Updated:

பழங்குடியின பட்டதாரிகளின் குற்றச்சாட்டும் அரசுத் தரப்பின் விளக்கமும்!

பழங்குடியின பட்டதாரிகளின் குற்றச்சாட்டும் அரசுத் தரப்பின் விளக்கமும்!
பழங்குடியின பட்டதாரிகளின் குற்றச்சாட்டும் அரசுத் தரப்பின் விளக்கமும்!

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் குளறுபடிகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. `களப்பணி குறித்த விவரங்களை முறையாகச் சமர்ப்பிக்காதவர்களே புகார் சொல்கின்றனர்' என்கின்றனர் திட்டத்தின் பொறுப்பாளர்கள்.

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் தொடர்பான கணக்கெடுப்புப் பணிக்காக, பழங்குடி துணைத்திட்டத்தின் மூலம் 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப்படிப்பு முடித்த மாணவர்களைப் பணியில் அமர்த்தினார் பழங்குடியின ஆய்வு மைய இயக்குநர் சுப்பிரமணியம். மாணவர்கள் சிலரைத் தற்காலிகப் பணியாளர்களாக நியமித்து, கணக்கெடுப்புப் பணிகள் நடந்து வந்தன. இந்தநிலையில், ` கடந்த காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் நடந்த பழங்குடியினர் கணக்கெடுப்புப் பணிகளில் சரியான தகவல்கள் சேகரிக்கப்படவில்லை, எனவே இந்தக் கணக்கெடுப்புப் பணியில் பழங்குடியினரை ஈடுபடுத்தினால்தான் சரியான விவரங்களைச் சேமிக்க முடியும்' என நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பினர் வலியுறுத்தியதை அடுத்து, பழங்குடியின இளைஞர்களைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, பனியர் பழங்குடியின பாெறியியல் பட்டதாரி அமிர்தானந்தன், தாேடர் பழங்குடியின பட்டதாரி அசோக் குமார், தர்ம்தே குட்டன், காட்டுநாயக்கர் பழங்குடியின பாெறியியல் பட்டதாரி லாவண்யா, முள்ளுக்குரும்பர் பழங்குடியின பட்டதாரி விஜீஷ், பெட்டகுரும்பர் பழங்குடியின பட்டதாரி குட்டன் ஆகிய ஆறு பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான பணி நியமன ஆணை தற்பாேது வரை வழங்கப்படாமல் உள்ளது. முதல் மாதச் சம்பளமான ஆறாயிரம் ரூபாயானது, பணியில் சேர்ந்து ஒன்றரை மாதத்துக்குப் பிறகே கிடைத்துள்ளது. அதேபோல், இரண்டாவது மாதச் சம்பளமும் கடந்த வாரம்தான் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில், முறையாகப் பணி நியமன ஆணை மற்றும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கக்காேரி பழங்குடியின இளைஞர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். 

நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியின கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சோபா மதனிடம் பேசினோம். `` பழங்குடியின ஆய்வு மையம் சார்பில், கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட குறைந்தபட்ச தகுதி பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பட்டப்படிப்பு முடித்த பழங்குடியின இளைஞர்கள் 6 பேர் பணியில் சேர்ந்தனர். நேர்காணலின்போது, பணி நியமன ஆணை மற்றும் ஐ.டி. கார்டு வழங்கப்படும் என பழங்குடியின ஆய்வு மைய இயக்குநர் சுப்ரமணியம் உறுதியளித்தார். அடையாள அட்டைக்காக நான்கு முறை சுமார் 60 கிலோ மீட்டர் பயணித்து பாலடாவில் உள்ள பழங்குடியின ஆய்வு மையத்துக்கு வந்து சென்றும் உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே, இது தாெடர்பாக கலெக்டரிடம் புகார் அளித்த பிறகுதான் ஐ.டி., கார்டு கிடைத்தது. இருப்பினும், பணி நியமன ஆணை இதுவரை வழங்கப்படவில்லை. இரண்டு மாதங்கள் வேலை செய்த பழங்குடியின இளைஞர்களுக்கு, மாதச் சம்பளமாக ரூ.6,000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பணி நியமன ஆணை மற்றும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பழங்குடியின குடியிருப்புகள் உள்ள பகுதிகளுக்குச் செல்ல நாள் ஒன்றுக்கு சுமார் 60 முதல் 70 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கின்றனர். அதில் சுமார் 15 கிலாே மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது’’ என்றார் ஆதங்கத்துடன்.

இதுகுறித்து, பழங்குடியின ஆய்வு மைய இயக்குநர் சுப்பிரமணியம் கூறுகையில், `` பழங்குடியினர் குறித்த கணக்கெடுப்ப் பணியில் மானுடவியல், சமூகவியல், வரலாறு, நிலவியல் உள்ளிட்ட பாடங்களில் பட்டம் பெற்ற மாணவர்களை வைத்துக் கணக்கெடுப்பு பணிகளை நடத்தினால்தான் சரியாக இருக்கும். இந்நிலையில், பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் செயல்பட்டு வருகிறோம். அதற்காகத்தான் பழங்குடி இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தி உள்ளோம். பழங்குடியின கணக்கெடுப்பு பணி என்பது நிரந்தரமானதல்ல. இது  தற்காலிகப் பணிதான். எனவே, இதற்காக அரசு ஆணை எதுவும் வழங்க முடியாது. இப்பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வைத்துச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். எங்கள் மீது குறை சொல்பவர்கள், ஊதியத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். 

ஆனால், அவர்கள் களப்பணிக்குச் செல்லும் நாட்களில், அவர்களுக்கான உணவு மற்றும் போக்குவரத்துச் செலவுகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளோம். இதற்கான பில்களை அவர்கள் முறையாகச் சமர்ப்பிக்கவில்லை. கடந்த 2 மாதங்களாக நடத்திய களப்பணியில் (form) பதிவு செய்யப்பட்ட தகவல்களை, அலுவலகத்தில் சமர்ப்பிக்கச் சொன்னபோது, இருவர் மட்டுமே அலுவலகத்துக்கு வந்தனர். இவர்களுடன் பணியாற்றும் மற்ற இளைஞர்கள் யாரும் அலுவலகத்துக்கு வரவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பியதால்தான், பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என மனு அளித்துள்ளனர். பழங்குடியின கணக்கெடுப்பு பணி என்பது தற்காலிகமானது. இந்தப் பணி முடிந்ததும் இவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். பணியில் ஈடுபட்டுள்ள பழங்குடியின இளைஞர்கள் இன்னும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.