Published:Updated:

காணாமல் போன 2000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள்..! நடவடிக்கை எடுக்கப்படுமா?

காணாமல் போன 2000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள்..! நடவடிக்கை எடுக்கப்படுமா?
காணாமல் போன 2000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள்..! நடவடிக்கை எடுக்கப்படுமா?

யர் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு, `கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை அறநிலையத்துறை உடனடியாக மீட்க வேண்டும்' எனத் தீர்ப்பை வழங்கியது. ஆனால், பல நேரங்களில் அந்த ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுபவர்கள் அறநிலையத்துறையின் அதிகாரிகளாகவும், கோயில் தர்மகர்த்தாக்களாகவுமே உள்ளனர். சமீபத்தில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் சிலை காணாமல்போன வழக்கில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் உள்ள மிகப் பழைமையான கோயில்களில் ஒன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோயில். தமிழகத்தில் உள்ள  பல பகுதிகளிலும் இந்தக் கோயிலுக்குச் சொத்துகள் உள்ளன.

``அகத்தீஸ்வரர் கோயில் தமிழக அரசு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கோயில் சொத்துகள் பலவும் முறைகேடான வகையில் விற்கப்பட்டு, தனி மனிதர்களின் சுயநலத்துக்காக, பல கோடி ரூபாய் அவர்கள் ஆதாயமடைந்துள்ளனர்" எனப் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தக் கோயில் முறைகேடுகள் தொடர்பாக, பொது நல வழக்கைத் தொடுத்த ஓய்வு பெற்ற சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ் பேசுகையில், ``கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அறநிலையத்துறை ஆணையரின் அனுமதியில்லாமல் வாங்கவோ, விற்கவோ முடியாது. இந்தக் கோயிலுக்குக் கிட்டத்தட்ட 1953-ம் ஆண்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான், தர்மகர்த்தாவக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு இதற்கு முன்னால் இருந்த அதிகாரிகள், உடந்தையாக இருந்துள்ளனர். தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி, 452 என்ற ஒரே சர்வே எண்ணில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட இடங்கள் விற்கப்பட்டுள்ளன. இதனால் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் இழப்பைச் சந்தித்துள்ளது. 

கோயிலுக்கு  நிலங்களை `வையம் உள்ள வரை வாங்கவோ விற்கவோ முடியாது’ என்று சொல்லித்தான் தானமாக வழங்குகின்றனர். ஆகையால், அந்தச் சொத்துகளை விற்க, சட்டப்படி அனுமதி கிடையாது. சட்ட நடைமுறைக்குப் புறம்பாகத்தான் நிலங்கள் விற்கப்பட்டுள்ளன என்ற தீர்ப்பை நீதிமன்றமும் வழங்கியுள்ளது. சட்ட விரோதமான முறையில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை என்ன செய்வது என்பதற்கான வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை எல்லாம் விற்றுவிட்ட நிலையில், புதிதாக 75 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தேரை, நிறுத்தக்கூட இடம்  இல்லாத நிலையில், கோயில் மதில் சுவர்களை இடித்துத் தேர் நிறுத்த இடத்தை ஒதுக்கியுள்ளனர்" என்றார்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றவர்களில் ஒருவரான அமல்ராஜ் பேசுகையில் ``கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தக் கோயிலின் தர்மகர்த்தாவாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் உள்ளனர். 1953-ல் ராஜபாஹர் என்பவர் முதலில் பதவி ஏற்றார். அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவருடைய மனைவியைப் பதவியில் அமர்த்தினார். அவருக்குப் பிறகு இப்போது அவர்களுடைய மகன் கல்யாண ராகவன் தர்மகர்த்தாவாக உள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை இந்தப் பதவியில் தொடர்வதால்தான், இதுபோன்ற சொத்துகளை விற்கும் பிரச்னை நீடிக்கிறது. அவர்கள் யாருக்கு விற்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களுக்கு யாருடைய அனுமதியும் பெறாமல் நிலத்தை விற்று வந்துள்ளனர். கோயில் குளங்களின் உள்ளேயும் கற்களை நிரப்பி, கோயில் சொத்தைச் சேதப்படுத்தியுள்ளனர்” என்றார்.

அறநிலையத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியபோது, ``நீதிமன்றத் தீர்ப்பு உண்மையானதுதான். அந்த ஆக்கிரமிப்புகள், 1996-ம் ஆண்டுக்கு முன்பு நிகழ்த்தப்பட்டவை. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது பற்றிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றுக்கான தீர்ப்புகள் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

``கோயில் தர்மகர்த்தா மீது  மக்கள் புகார் சொல்கிறார்களே?" என்று கேட்ட போது, ``அது லோக்கல் அரசியல்" என்று பதிலளித்து நழுவிக் கொண்டனர்.

கோயில் சொத்துகளும், அதன் வருமானங்களும் தனி நபர்களின் கட்டுப்பாட்டிலிருந்து, அவர்கள் அனுபவிப்பதை அகற்றி, மக்களின் நலனுக்காக அவை பயன்படுத்தப்பட வேண்டும் என்பது அவசியம் …!