Published:Updated:

காலில் பட்ட அடி... பறிபோன உயிர்... சிறுநீரகக் கோளாறால் சிதைந்த குடும்பம்!

காலில் பட்ட அடி... பறிபோன உயிர்...  சிறுநீரகக் கோளாறால் சிதைந்த குடும்பம்!
காலில் பட்ட அடி... பறிபோன உயிர்... சிறுநீரகக் கோளாறால் சிதைந்த குடும்பம்!

சிறுநீரகம் செயலிழந்ததால் கணவர் இறந்துபோக, தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளையும் காப்பாற்ற அரசு உதவிசெய்ய வேண்டும்’ என கண்ணீரோடு பெண் ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த சம்பவம், ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.  

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. விசைத்தறி தொழிலாளியான இவர், கடந்த ஜூன் மாதம், மதிய உணவு சாப்பிட வீட்டுக்கு வந்துவிட்டு, வேலைக்குத் திரும்பியிருக்கிறார். அப்போது,  எதிரே அதிவேகமாக வந்த வாகனத்தின்மீது மோதாமலிருக்க, தன்னுடைய பைக்கை நிறுத்த முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அதில் காலில் கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. மனைவியிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்திருக்கின்றனர். ‘காலில் எலும்பு உடைந்துவிட்டது. உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமென’ மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். மருத்துவர்களின் ஆலோசனைப்படி அறுவைசிகிச்சையும் செய்திருக்கின்றனர். கடைசியில், அதுதான் அய்யாச்சாமியின் உயிரை எடுத்திருக்கிறது என கண்ணீர் வடிக்கிறார் அவருடைய மனைவி செல்வி.

இதுகுறித்து புகார் கொடுக்க வந்த செல்வியிடம் பேசினோம். “சாதாரணமாக, கால்ல அடிபட்டதுக்காக ஆஸ்பத்திரிக்கு போனோம். எலும்பு உடைஞ்சிடுச்சி ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாங்க. வசதியில்லாததால, காப்பீட்டு திட்டத்துலதான் ஆபரேஷன் பண்ணினோம். ஆபரேஷன் பண்ணுன மூனு நாள் கழிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. வீட்டுக்கு போனதுல இருந்து வாந்தியா எடுத்துக்கிட்டிருந்தார். டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனப்ப, ‘எல்லாம் செரிமானக் கோளாறுதான் வேற ஒன்னுமில்லைனு’ சொல்லி மாத்திரை எழுதிக்கொடுத்தார். அதுக்கப்புறமும் தினமும் வாந்தி, மயக்கமுன்னு எங்க வீட்டுக்காரர் படுத்த படுக்கையா கிடந்தார். வேற ஒரு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய் காண்பிச்சோம். ‘உங்க வீட்டுக்காரருக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்துடுச்சு. அதிகபட்சம் இன்னும் ஒருவருஷம்தான் உயிரோடு இருக்க வாய்ப்புனு’ சொன்னாங்க. எனக்கு தலையில் இடி இறங்குன மாதிரி ஆகிடுச்சி. உடனே சென்னை கவர்மென்ட் ஆஸ்பத்திரியில கொண்டு போய் சேர்த்தோம். இருந்தும் அவரை காப்பாத்த முடியலைன்னு” அழ ஆரம்பித்தார்.

தொடர்ந்து பேசியவர், “எங்க வீட்டுக்காரருக்கு ஆபரேஷன் செஞ்சதுல இருந்து உடம்புக்கு ஒத்துக்கலை. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் காண்பிச்சதுக்கு, ‘செரிமானக் கோளாறு தான்னு’ ஒவ்வொரு தடவையும் ஏதேதோ மாத்திரைங்க எழுதிக் கொடுத்தாங்க. அதுலதான் என் வீட்டுக்காரருக்கு ஏதோ ஆகிடுச்சி. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செஞ்சா காப்பாத்திடலாம்; இல்லைனா ஆறு மாசத்துக்கு மேல தாக்குப் பிடிக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. ஆனா, ஆறு மாசத்துக்குள்ளயே என் வீட்டுக்காரர் எங்களைத் தவிக்க விட்டுட்டு போய்ட்டார். காலில் ஒரு சாதாரண அடிதான் பட்டது. கடைசியில் அது என் வீட்டுக்காரர் உசுரயே எடுத்துடுச்சி. எனக்கு ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க. சொல்லிக்கிற அளவுக்கு வசதியெல்லாம் இல்லை. ஏற்கெனவே ஆஸ்பத்திரி செலவுன்னு நிறைய கடன் வாங்கியிருக்கேன். என் வீட்டுக்காரை எப்படியாவது காப்பாற்றி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவேன்னு நெனச்சேன். அது நடக்காம போயிடுச்சி. என்னோட ரெண்டாவது குழந்தை, தினமும் அப்பா எப்பம்மா வீட்டுக்கு வருவாருன்னு கேட்டுக்கிட்டு இருக்கு. ஆஸ்பத்திரியில இருக்காரும்மா... வந்துடுவாருன்னு சொல்லி சமாளிச்சிக்கிட்டு இருக்கேன். எப்படித்தான் என்னோட ரெண்டு பொம்பளைப் புள்ளைங்களையும் நான் கரை சேர்க்கப் போறேன்னு தெரியலை. அரசாங்கம் பார்த்து எனக்கு ஏதாவது உதவி செஞ்சு கொடுத்தா புண்ணியமாப் போகும்” என்று அழுதார்.