Published:Updated:

''தேம்பித் தேம்பி அழுகிறான்..''

தீராத பழவேற்காடு சோகம்

''தேம்பித் தேம்பி அழுகிறான்..''

தீராத பழவேற்காடு சோகம்

Published:Updated:
##~##
''தேம்பித் தேம்பி அழுகிறான்..''

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்போன சுந்தரபாண்டியன் குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் ஒட்டுமொத்தமாகப் பலியான சம்பவத்தை 'பலிவேற்காடு’ என்ற தலைப்பில் வெளியிட்டு இருந் தோம். கரை ஒதுங்கிய பிணங்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்தபோது தோன்றிய அதிர்ச்சியும் அலறலும் இன்னும் நீங்காத நிலையில், 'இனி ஒருமுறை இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க என்ன பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?’ என்ற கேள்வியோடு சிலரைச் சந்தித்தோம். 

'சென்னை சமூக சேவை’ சங்கத்தைச் சேர்ந்த கெவின் தாமஸ், ''சுற்றுலாத் துறையால் பழவேற்காடு பகுதி முறைப் படுத்தப்பட வேண்டும். கோட்டைக்குப்பம் பஞ்சாயத்தில் 'தோணிரேவு’ பகுதியில் அழகான போட் ஹவுஸ் ஏற்கெனவே இருக்கிறது. அங்கு ரெஸ்ட் ஹவுஸ், ஷாப்பிங் காம்ஃப்ளெக்ஸ், படகுத்துறை, கழிவறை என்று சகல வசதிகளும் இருக்கின்றன. ஐந்து வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இதை ஏனோ பயன்பாட் டுக்கு கொண்டுவரவே இல்லை. இதனை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு களுடன் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால், இது பெரிய சுற்றுலா தலமாக அமையும்'' என்றார்.  

''தேம்பித் தேம்பி அழுகிறான்..''

அதே அமைப்பைச் சேர்ந்த ஆஜா மொய்தீன் பேசுகையில், ''சுனாமிக்குப் பிறகு அரசின் இயற்கைப் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் இணைந்து ஆபத்துக் காலங்களில் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வது, பிறரைக் காப்பாற்றுவது, முதலுதவி செய்வது என்று 300 பேருக்குப் பயிற்சி தந்தோம். அதனை அடுத்து, பேரிடர் லட்சியக் குழு ஒன்றை உருவாக்கி கிராம மக்களுக்கு விழிப்புணர்வை

''தேம்பித் தேம்பி அழுகிறான்..''

ஏற்படுத்த வேண்டும். பயிற்சி பெற்றவர்களுக்கு அடையாள அட்டை தந்து அவர்களையே பழவேற்காடு ஏரியில் படகோட்ட அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். அரசு நிதி ஒதுக்கினால், மேலும் நிறைய பேருக்குப் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம். அரசு முழு கவனம் செலுத்தினால் மீனவர்களுக்கு மிகப்பெரிய வேலை வாய்ப்பாக இது உருவாகும்'' என்றார்உறுதியாக.

லைட் ஹவுஸ்  ஊராட்சித் தலைவர் கருணாகரன், ''அரங்கங்குப்பம், கூனங்குப்பம், வைரங்குப்பம், லைட் ஹவுஸ் என இங்குள்ள 15 மீனவ குப்பங்களில் 15 ஆயிரம் மக்கள் வாழ்கிறார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலை, வடக்குக் கடற்கரை சாலை என்று 15 மீனவக் குப்பங்களுக்கும் இணைப்புச் சாலைகள் அமைத்து பூங்கா, பார்க்கிங் வசதிகள் செய்யவேண்டும். மீனவர்கள் மட்டும்தான் சுற்றுலாப் பயணிகளை படகில் ஏற்றவேண்டும். அதுவும் 10 பேருக்கு மேல் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. படகில் லைஃப் ஜாக்கெட், கயிறு உள்ளிட்ட பாதுகாப்புக் கருவிகள் இருக்க வேண்டும். முகத்துவாரம் பக்கம் போகக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கவேண்டும்.

முகத்துவாரம் அருகில் இருந்த எச்சரிக்கை போர்டு, மண் அரிப்பில் நகர்ந்து போய்விட்டது. புதிதாக ஒரு எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும். அங்கு கடலோரக் காவல் படை இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அப்படி யாரும் ரோந்து வருவதை நாங்கள் இதுவரை பார்த்தது இல்லை. படித்தவர்களாகப் பார்த்து கடலோரக் காவல் படையில் வேலை தருவதைவிட... நீச்சல் பற்றியும் கடல் பற்றியும் தெரிந்த மீனவர்களுக்கு வேலை தந்தால், ஆபத்து சமயங்களில் தைரியமாகச் செயல்படுவார்கள். இறந்து போன பிறகு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் தருவதைவிட, மீனவர்களுக்குப் போதிய வேலை வாய்ப்பை தந்தால், அநியாயமாக உயிர்கள் பலியாவதை தடுப்பார்கள்'' என்றார்.

இது ஒருபுறம் இருக்க... விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பவுல்ராஜ், ஜனோகர் சாமுவேல்,

''தேம்பித் தேம்பி அழுகிறான்..''

பால் தினகரன் ஆகிய மூன்று சிறுவர்களின் கதி என்ன என்பதை அறிய ஆர்.டி.ஓ. கந்தசாமியிடம் பேசினோம். ''மூவரையும், குழந்தைகள் பாதுகாப்பு சட்டப்படி அவர்களது உறவினர்கள் தத்தெடுத்துக் கொண்டார்கள். பவுல்ராஜ், அவரது அத்தை கிருஷ்ணவேணியின் பாதுகாப்பில் நெசப்பாக்கத்தில் இருக்கிறார். ஜனோகர் சாமுவேலுவும், பால் தினகரனும் அவர்களது மாமா ஞானசுந்தரம் காமராஜ் பாதுகாப்பில் திருவொற்றியூரில் இருக்கிறார்கள். குழந்தைகள் மூவரும் 'இவர்களோடு இருக்கிறோம்’ என்று சொன்ன பிறகுதான் சட்டப்படி தத்தெடுக்கும் முறைகள் மேற்கொள்ளப்பட்டது'' என்றார்.

வட்டாட்சியர் ராம பிரான், ''உறவினர்கள், போலீஸ், பொதுமக்கள் முன்னிலையில் சுந்தர பாண்டியனின் வீட்டைத் திறந்து குழந்தைகளின் சான்றிதழ்கள், ஷூ, ஆடைகள் போன்றவற்றை எடுத்தோம். நகை, பணம் என்று எதையும் எடுக்க வில்லை. உறவினர்களிடம் பேசி இதுகுறித்து முடிவெடுக்க உள்ளோம்'' என்றார்.

அத்தை வீட்டில் இருக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் பவுல்ராஜிடம் பேசினோம். ''சுனாமி மாதிரி ஒரு அலை வந்ததும், படகு ஆடிச்சு. எல்லோரும் ஒரே பக்கமா போனோம். படகு சாய்ஞ்சிடுச்சி'' சொல்லி முடிக்கும்முன் கண்ணீர் வழிகிறது. பவுல்ராஜ் அத்தை கிருஷ்ணவேணி, ''சர்ச்ல பார்த்துப் பழகினவங்க யாராவது வந்தாலோ... இந்தச் சம்பவத்தைப் பத்தி பேசினாலோ அழ ஆரம்பிச்சிடுறான். ராத்திரியில், 'அம்மா... அம்மா’ன்னு தேம்பித் தேம்பி அழுகிறான். அழுது அழுது ரெண்டு நாளா சளி, இருமல்னு உடம்பு சரியில்லை. இன்னும் அந்தப் பாதிப்புல இருந்து விடுபடாததால், அவன் எதிரில் யாரையும் அழ வேண்டாம்னு சொல்லிட்டேன். ஆனா, எங்களாலேயே அழுகையை நிறுத்த முடியலை...''  என்று பெருங்குரலெடுத்து அழுகிறார்.

துடைக்க முடியாத துயரத்தைக் கண்ணீரால் தானே கழுவ முடியும்?

- க.நாகப்பன்

படங்கள்: அ.ரஞ்சித்