Published:Updated:

''தலைமுறைக்கு இந்தப் புயல் போதும் சாமி..''

வேதனையில் நாகை விவசாயிகள்

''தலைமுறைக்கு இந்தப் புயல் போதும் சாமி..''

வேதனையில் நாகை விவசாயிகள்

Published:Updated:
##~##
''தலைமுறைக்கு இந்தப் புயல் போதும் சாமி..''

ன்னதான் சாபமோ... நாகை மாவட்ட விவசாயிகள் தங்கள் விளைச்சலை ஒரு தடவை கூட முழுமையாக அறுவடை செய்ய முடிவதில்லை. 'தானே’ புயல் கடலூருக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையேறினாலும், நாகை மாவட்டத்தையும் சிதைத்து விட்டுத்தான் போயிருக்கிறது. நாகை துறைமுகத்தில், 8-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டதில் இருந்தே பாதிப்பை உணரமுடியும்.

 நாகை மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு இருந்தாலும் நல்லவேளையாக சீர்காழி தாலுக்கா தவிர மற்ற இடங்களில் பெரிய பாதிப்புக்கள் இல்லை. சீர்காழி ஒன்றியம், கொள்ளிடம் ஒன்றியம் ஆகிய இரண்டும்தான் புயலால் மிகக் கடுமையாக நிலைகுலைந்தன.

''தலைமுறைக்கு இந்தப் புயல் போதும் சாமி..''

''இதுவரைக்கும் எத்தனையோ புயல் அடிச் சிருக்கு, சில புயல்கள் இந்த மாவட்டத்திலேயே கூட கரையேறி இருக்கு. அப்பல்லாம் கூட  இப்படி ஒரு வேகத்தைப் பார்த்ததில்லை. ஓடுபறக்குது, ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் பறக்குது, கீத்துக் கூரையெல்லாம் எங்கேயோ போய்க் கிடக்குது. உயரமான மரம் எல்லாம் பேயாட் டம் போட்டது. வலிமையான தேக்கு மரம்கூட, படார் படாருன்னு முறிச்சுக்கிட்டு விழுது. தென்னை மரங்கள் வீட்டு மேலயும், வீதியி லேயும் சிதறிக் கிடக்குது. வாகனங்கள் தலை குப்புறக் கிடக்குது, பண்டம் பாத்திர மெல்லாம் பறந்துபோய் விழுது. இப்படி ஒரு  கோரத்தாண்டவத்தை வார்த்தையால சொல்லவே முடியாது. இந்தத் தலைமுறைக்கு இந்தப் புயல் ஒண்ணு போதும் சாமி...'' என்று பெருமூச்சு விடுகிறார் ஆச்சாள்புரத்தைச் சேர்ந்த மோகன்.

''தலைமுறைக்கு இந்தப் புயல் போதும் சாமி..''

தெருவெங்கும் மரங்கள், வீதியெங்கும் மின்கம்பங்கள் விழுந்து கிடக்க... மின்சாரம் முறையாகக் கிடைக்க பலநாட்கள் ஆகுமாம். குடிசை இழந்த சுமார் 1700 பேர், அரசின் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். பொதுவான பாதிப்பு இப்படி இருக்க, விவசாயிகளின் நிலைமையோ பெரும் துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

''இந்த வருஷம் தண்ணீர் முன்னாடியே வந்துட்டதால, ஆடியில சரியான பட்டத்துக்கு விதை

''தலைமுறைக்கு இந்தப் புயல் போதும் சாமி..''

போட்டோம். அது வளரும்போது பருவ மழை பெய்ய ஆரம்பிச்சது. அது பயிருக்கு டானிக் மாதிரி உதவியா இருந்துச்சு. அதனால எந்த வருஷமும் இல்லாம இந்த வருஷம் பயிரெல்லாம் நல்லா விளைஞ்சு கதிர் நல்லா பால் பிடிச்சிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அறுத்துடலாம்னு ஆளெல்லாம் சொல்லி வச்சிருந்தேன். ஆனா பாழாப்போன புயல், 'இந்த வருஷம் மட்டும் உனக்கு என்னடா விளைச்சல்?’னு எல்லாத்தையும் புடுங்கிட்டுப் போயிடுச்சு'' என்று புலம்புகிறார் நல்லூர் விவசாயி வீரமணி.

மேட்டூர் அணை தாமதமாக திறந்தால் தை மாதம் மத்தியில்தான் நெல் அறுவடைக்கு வரும். ஐப்பசி, கார்த்திகை மாதத்துக்குள் மழையோ புயலோ வந்து பயிரை அழிக்கும். ஆனாலும் மிச்சம் இருக்கும் பயிருக்கு உரம் போட்டு வளர்த்து, ஒன்றுக்குப் பாதியாக நெல் அறுப்பார்கள் விவசாயிகள். ஆனால் இந்த ஆண்டு மார்கழியில் வந்த புயல் விளைந்து நின்ற வெள்ளாமையை வீணாக்கிவிட்டது. முற்றிய நெல்மணி களோடு பயிர் அப்படியே வயலுக்குள் விழுந்து தண்ணீருக்குள் முழ்கிக் கிடக்கிறது.

''இப்படி நன்கு முற்றிய கதிர் வயலுக்குள் பாய் விரித்தது போல் மடிந்து கிடப்பதைப் பார்க்க இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது. ஒருவார காலத்துக்குள் அறுத்தால் ஒரு முப்பது சதவிகிதமாவது கைக்கு வருமென்றாலும் கூட அதை காலத்தில் அறுப்பதற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். அதனால் அதையும் கை சேர்க்க முடியாது. மொத்தத்தில் கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல் செய்துவிட்டது இந்தப் புயல்'' என்று தன் வயலில் சரிந்து கிடந்த பயிரை கையில் அள்ளி எடுத்து கன்ணீர் சிந்துகிறார், ராமன்.

அடித்த காற்றின் வேகத்தில் பாதிக்கும் மேல் நெல்மணிகள் பிய்த்துக் கொண்டு போய்விட்டன. மீத முள்ளவைதான் வயலுக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அதனால் ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு நஷ்டம். கடந்த ஆண்டு பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்த இந்தப் பகுதி விவசாயிகள், அதில் இருந்து இழப்பீடு கிடைக்கவில்லை என்றதும் ஏமாந்து  போனார்கள். அதனால், இந்த ஆண்டு பிரிமியம் கட்டவில்லை. பயிரும் நன்றாக இருந்ததால் இன்சூரன்ஸ் தேவையை நினைத்தும் பார்க்கவில்லை. ஆனால் இப்போது மொத்தமாகப் போனதும், இன்சூரன்ஸ் செய்திருக்கலாமே என்று புலம்புகிறார்கள்.

''ஏக்கருக்கு 15,000 ரூபாய் இழப்பீடும், பயிர் இன்சூரன்ஸ் தேதியை இன்னும் பதினைந்து நாட்களுக்கு அதிகரிப்பதும் மட்டுமே இந்த நிலையில் அரசாங்கம் எங்களுக்குச் செய்ய வேண்டிய உதவி'' என்று வேதனையான மனநிலையில் சொல்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகளின் இந்த சோகம் குறித்தும் அவர்களின் வேண்டுகோள் குறித்தும் நாகை மாவட்ட ஆட்சியர் முனுசாமியிடம் பேசினோம். ''பாதிப்பின் முழு அளவையும் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை. உடனடியாக கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு, அந்த வேலைகள் நடந்து வருகிறது. மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர், மயிலாடுதுறை எம்.பி-யான ஓ.எஸ்.மணியன் ஆகியோர் சேதப்பகுதிகளை பார்த்திருக்கிறார்கள். அதனால் பாதிப்புக்களின் முழு விவரங்களையும் அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று அரசின் வழிகாட்டல்படி நடப்போம். பயிர் இன்சூரன்ஸ் தேதி நீட்டிப்பு குறித்தும் அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இயற்கை அழித்து விட்டது, அரசாவது கருணை காட்டட்டும்!

- கரு.முத்து