Published:Updated:

''பகவானைப் பட்டினி போடுகிறார்கள்..!''

சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்

''பகவானைப் பட்டினி போடுகிறார்கள்..!''

சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்

Published:Updated:
##~##
''பகவானைப் பட்டினி போடுகிறார்கள்..!''

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் இணை ஆணையர் ஆகம விதி களுக்கு எதிராக செயல்படுவதாக சமீப காலமாக அடுக்கடுக்காக புகார்கள். கடந்த 19-ம் தேதி அன்று சசி குரூப்புக்கு கல்தா கொடுக்கப்பட்ட நிலையில், 21-ம் தேதி சனிப் பெயர்ச்சி அன்று மகாதேவன் தலைமையில் கோயிலின் வேணுகோபால் சன்னதியில் யாகம் நடந்ததாகவும், அதற்கு கோயிலின் இணை ஆணையர் ஜெயராமன் அனுமதி அளித்ததோடு, யாகத்திலும் பங்கு பெற்றார் என்பது முதல் பரபரப்பு. அடுத்து, கடந்த 29-ம் தேதி அன்று இரவோடு இரவாக பாரம்பரியம் மிக்க தன்வந்திரி சன்னதியில் உள்ள மண்டபம் இடிக்கப்படவே, இணை ஆணையருக்கு எதிரான குரல்கள் வலுத்து ஒலிக்கின்றன. 

அகில பாரத இந்து மகா சபாவின் மண்ட லத் தலைவர் ராஜசேகர், 'பெருமை வாய்ந்த ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஒரு நாத்திகரை இணை ஆணையராக நியமித்து, அதன் பொலிவையே கெடுத்துவிட்டது அறநிலையத் துறை. நிர்வாகத்தை மட்டும் கவனிக்க வேண்டிய இணை ஆணையர் ஆகம விதிகளையும் பாரம்பரிய விதிகளையும் மாற்றியதோடு, சமீப காலங்களில் பழமையான சன்னதிகளையும் இடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

''பகவானைப் பட்டினி போடுகிறார்கள்..!''

ராமானுஜர் காலத்துக்கு முந்தையதான தன்வந்திரி சன்னதி, முற்காலத்தில் பக்தர்களுக்கான

''பகவானைப் பட்டினி போடுகிறார்கள்..!''

மருத்துவமனையாக செயல் பட்டது. அதன் தனித்தன்மையே அதன் உயரம்தான். பேரிடர் காலங்களில் நோயாளிகளை மழை, வெள்ளம் பாதிக்காத வகையில் உயரமாக கட்டி இருந்தார்கள், நம் மன்னர்கள். இணை ஆணையரால் அந்த சின்னமே அழிக்கப்பட்டுவிட்டது. கேட்டால்... அந்த முன்புறம் செங்கல்லால் கட்டப்பட்டது என்கிறார். இதை இவர் எந்த ஆய்வாளர்களை வைத்து ஆராய்ந்தார்? 'காவல்துறை ஆணைப்படி இடிக்கிறேன்’ என்கிறார். கோயிலுக்கும் காவல் துறைக்கும் என்ன சம்பந்தம்? ஆகம விதிகளின்படி பெருமாள் கோயில்களில் யாகங்களே நடத்தக்கூடாது. ஆனால் இவரோ பணம் வாங்கிக்கொண்டு தனி நபர் யாகங்கள் மட்டுமல்ல... திதி கொடுக்கக்கூட அனுமதி வழங்குகிறார். கேட்டால், 'யாகங்கள் நடத்தப்படும் சன்னதிகள் தனி நபர்களுக்குச் சொந்தமானது. அறநிலையத் துறைக்கு சொந்தமானது அல்ல’ என்கிறார். அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒரு கோயிலின் உள்ளே அமைந்துள்ள சன்னதிகள் மட்டும் எப்படி தனி நபர்களுக்குச் சொந்தமாகும்? அது மட்டுமல்ல... நிர்வாகத்திலும் எக்கச்சக்க ஊழல்களும் முறைகேடுகளும்

''பகவானைப் பட்டினி போடுகிறார்கள்..!''

நடைபெற்று வருகின்றன. நாங்களும் எவ்வளவோ மனு போட்டுப் பார்த்துவிட்டோம். ஆனால் இன்னமும் விடிவு இல்லை. முறைகேடுகளுக்குக் காரணமான இணை ஆணையர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகளை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்'' என்று ஆதங்கப்பட்டார்.

கோயில் ஆராய்ச்சியாளரும் மூத்த பக்தருமான கிருஷ்ண மாச்சாரி, 'இடிக்கப்பட்ட தன்வந்திரி சன்னதிக்கு கோபுரமே கிடையாது. நோயாளிகளின் சத்தத்தை கோபுர தேவதைகள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால்தான், கோபுரமே இல்லாமல் கட்டப்பட்ட சன்னதி அது. அதனை இடித்து கோயிலின் பெருமையை பாழ்படுத்தி விட்டனர். நவக்கிரக பெயர்ச்சிகளுக்கும் பெருமாள் கோயில்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் வசூல் நோக்கத்தில் நவக்கிரக யாகங்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு யாகங்கள் நடத்தும்போது, அந்த புகை படிந்து பாரம்பரியம் மிக்க 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வண்ண ஓவியங்கள் அழிந்துவிடும். 1991-ம் ஆண்டு தொல்லியல் துறை சட்டப்படி பழைமை வாய்ந்த கட்டடங்களை இடிக்கக்கூடாது. ஆனால் இவர் பொறுப்பேற்றது முதலே சக்கரத்தாழ்வார் சன்னதி, வெள்ளைக்கோபுர ராமர் சன்னதி, தொண்டரடிப்பொடி ஆழ்வார் சன்னதி, தற்போது தன்வந்திரி சன்னதி என வரிசையாக இடித்துக்கொண்டே வருகிறார். இது சட்டத்துக்கே புறம்பானது. வேளை தப்பிய வேளையில் பெருமாளுக்கு நைவேத்தியம் நடக்கிறது. இன்னும் கொடுமையாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு காலை 5 மணிக்கு நைவேத்தியம் செய்து விட்டு, பகல் முழுவதும் பகவானை பட்டினி போடுகிறார்கள். பக்தர்கள் கூட்டத்துக்காக விதிகளை மாற்றலாமா? பாரம்பரிய முறையான பஞ்சாங்கம் படிப்பதிலும் தலையிடுகிறார். புறப்பாட்டு நேரங்களை சரிவரக் கடைப்பிடிப்பது இல்லை. தகவல் உரிமை சட்டப்படி கேட்டால் ஆவணங்கள் இல்லை என்ற பதில்தான் வருகிறது. இவ்வாறு ஆகம விதிகள் மாற்றுவது மக்களுக்கு மட்டுமல்ல... ஆட்சியில் இருப்பவர்களுக்கே ஆபத்தாக முடியும்'' என்று எச்சரித்தார்.

இணை ஆணையர் ஜெயராமனிடம் புகார்கள் குறித்து கேட்டபோது, 'தன்வந்திரி சன்னதி இடிக்கப்பட்டதாக சொல்வது தவறு. அங்கு இருந்த செங்கல் தடுப்பைத்தான் எடுத்து இருக்கிறோம். வேணுகோபால் சன்னதியில் 21-ம் தேதி யாகம் நடந்தது, பத்திரிகைகள் மூலம்தான் எனக்கே தெரியும். பெருமாள் கோவில்களில் யாகம் செய்யக்கூடாது என்று எந்த ஆகம விதியிலும் இல்லை. இந்த கோவில் 21 ஏக்கர் பரப்பில் 54 உப சன்னதிகளுடன் அமைந்துள்ளது. என்னால் எல்லா இடத்துக்கும், எல்லா சன்னதிக்கும் சென்று கண்காணிப்பது இயலாத காரியம். ஆனால் தீங்கு செய்வதற்கோ, ஒருவரை அழிப்பதற்கோ இது போன்ற புனிதமான பெருமாள் கோயில்களைத் தேடி வர வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்தால், அவர்கள்தான் அழிந்துபோவார்கள்''  என்று விளக்கம் தந்தார்.

தனது சொந்த தொகுதியின் பெருமையான ஸ்ரீரங்கநாதர் கோயில் விவகாரங்களைத் தீர்த்துவைக்க முன்வருவாரா ஜெயலலிதா?

- அ.சாதிக்பாட்சா, க.ராஜூவ்காந்தி

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், என்.ஜி.மணிகண்டன்