Published:Updated:

''மலையைச் சுரண்டுறாங்க!''

ஈரோடு எக்குத்தப்பு

''மலையைச் சுரண்டுறாங்க!''

ஈரோடு எக்குத்தப்பு

Published:Updated:
##~##
''மலையைச் சுரண்டுறாங்க!''

'எங்க ஊர் பக்கத்தில் இருக்கும் மலையை, கொஞ்சம் கொஞ்சமா சுரண்டிக்கிட்டு இருக்காங்க. கலெக்டர், எம்.எல்.ஏ-ன்னு பலருக்கும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்​கையும் இல்லை. நீங்கள் தான் உதவ வேண்டும்’ என்று ஒரு  குரல் நமது ஆக்ஷன் செல்லில் (044-24890005) பதிவாகி இருந்தது.   

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இயங்கி வரும் மக்கள் மன்றத்தின் தலைவர் செல்லப்பன்தான் தகவல் தந்தவர். அவரிடம் பேசினோம். ''சென்னி​மலைக்கும் அரச்சலூருக்கும் நடுவில் முருங்கத்தொழுவு என்ற கிராமத்தை ஒட்டி மேற்குத்தலவு மலை இருக்கிறது. மரங்களும் செடிகளும் அடர்த்தியா இருக்கும் இந்த மலை, மணற்பாங்கானது. இங்கே மண் குவாரி அமைச்சு கடந்த ஆறு மாசமா சிலர் சுரண்டிக்கிட்டு இருக்காங்க. இப்படி மலையைச் சுரண்டறதுக்கு லைசென்ஸ் வச்சு இருக்காங்களான்னு தெரியலை. கேட்டா... 'இது பட்டா நிலம்’னு சொல்றாங்க. அந்தக் காலத்தில் ஆடு, மாடு மேய்க்குறதுக்காக

''மலையைச் சுரண்டுறாங்க!''

மேய்ச்சல் நிலமாத்தான் இந்த மலையை குறிப்பிட்ட சிலருக்கு கொடுத்து இருக்காங்க. இப்படி ஒட்டுமொத்தமா மலையைச் சுரண்டுவதற்காக பட்டா யாருக்கும் தரவில்லை.

இதுபத்தி, குறை தீர்க்கும் கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் சார்பா கலெக்டரிடம் மனு கொடுத்தோம். அதுக்குப் பிறகு ரெண்டு மாசம் மண் எடுக்காம நிறுத்தி வச்சிருந்தாங்க. இப்போ திரும்பவும் வேலையை ஆரம்பிச்சுட்டாங்க. இதைக் கண்டிச்சு ஈரோட்டில், மக்கள் மன்றம் சார்பில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் சென்னிமலை குமரன் சிலை

''மலையைச் சுரண்டுறாங்க!''

முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கப் போறோம்'' என்று அடுத்தக்கட்ட திட்டங்களை எடுத்து வைத்தார்.

அவர் குறிப்பிட்ட மேற்குத்தலவு மலைக்குச் சென்று பார்த்தோம். சிலர் குவாரி அமைத்து மணல் எடுத்துக் கொண்டு இருந்ததைக் காண முடிந்தது. குவாரி நடத்துபவர்களிடம் லைசென்ஸ் குறித்து விசாரித்தபோது, முறைப்பையே பதிலாகத் தந்தார்கள்.

காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ-வான நடராஜிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டோம். ''கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் இப்படி மலையைச் சுரண்ட ஆரம்பிச்சாங்க. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் அதை தடுத்து நிறுத்தினோம். 'நாங்கள் மலையைச் சுரண்ட மாட்டோம். பட்டா பூமியில் மட்டும் மண் எடுத்துக்கொள்கிறோம்’ என்று அனுமதி கேட்டாங்க. இப்போ, திரும்பவும் மலையைச் சுரண்டுவதாகப் புகார் வருது. நானும் இது பத்தி கலெக்டர்கிட்ட பேசிட்டேன். கூடிய சீக்கிரமே உரிய நடவடிக்கை எடுத்து, மலை சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்துவோம்'' என்று உறுதி அளித்தார்.

'மலையைக் காணோம்!’ என்று முருங்கத்தொழுவு மக்கள் புகார் தரும் நிலை வருவதற்குள், நடவடிக்கை எடுங்க சார்!

- கி.ச.திலீபன்