Published:Updated:

`ரூ.30 கொடுத்து வாங்கணும்; ரூ.10 திரும்பத் தருவோம்' - குடிமகன்களுக்காக உருவான பெட்டிக்கடைகள் 

`ரூ.30 கொடுத்து வாங்கணும்; ரூ.10 திரும்பத் தருவோம்' - குடிமகன்களுக்காக உருவான பெட்டிக்கடைகள் 
`ரூ.30 கொடுத்து வாங்கணும்; ரூ.10 திரும்பத் தருவோம்' - குடிமகன்களுக்காக உருவான பெட்டிக்கடைகள் 

டாஸ்மாக் கடைகளின் அருகில் உருவாகியுள்ள பெட்டிக்கடைகளில், 30 ரூபாய் கொடுத்து டம்ளர், தண்ணீர் பாட்டில்களைக் குடிமகன்கள் வாங்க வேண்டும். மீண்டும் இந்த பொருள்களைக் கொடுத்தால், 10 ரூபாய் திரும்பக் கொடுக்கப்படுகிறது. இதனால், குடிமகன்களுக்கு சற்று ஆறுதல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 385 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கடைகளில் தண்ணீர் பாக்கெட்டுகள் உள்பட பல பொருள்கள்  பிளாஸ்டிக் பைகளில் விற்பனைசெய்யப்பட்டுவந்தது. தமிழக அரசு, கடந்த ஒன்றாம் தேதி பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டுவந்த அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தண்ணீர் பாக்கெட்டுகள் தடைசெய்யப்பட்டன.

குடிமகன்கள் பயன்படுத்தும் தின்பண்டம் வைத்துள்ள பிளாஸ்டிக் பைகளும் தடைசெய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, குடிமகன்கள் மதுவை வாங்கி ஊற்றிக் குடிப்பதற்கு பிளாஸ்டிக் டம்ளர் இல்லாததால், டாஸ்மாக் கடைக்கு அருகே பெட்டிக்கடை நடத்திவரும் தனி நபர்கள் கண்ணாடி டம்பளர் மற்றும் சில்வர் டம்ளர்களை விற்பனைசெய்துவருகின்றனர்.

கண்ணாடி டம்ளர் மற்றும் சில்வர் டம்ளர்களை 20 ரூபாய்க்கு விற்பனைசெய்துவருகின்றனர். தண்ணீர் பாட்டில், சின்ன வாட்டர் பாட்டில், டம்ளர் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கடையில் 30 ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டிலையும் கிளாஸையும் வாங்கிச் சென்று, ஒருவர் மது குடித்துவிட்டு மீண்டும் இந்த கடைக்கு வந்து அந்த கிளாஸை கடையில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அப்போது, கடைக்காரர்  10 ரூபாயை குடிமகனிடம் திரும்பத் தருவார்கள். கிளாஸை திருப்பித்தராதவர்களுக்கு 10 ரூபாய் தரமாட்டார்கள்.

இதுபோல திருவள்ளூர், ஆவடி,  திருத்தணி என மாவட்டத்தின் அனைத்துப்  பகுதிகளிலும் இந்த நடைமுறை செயல்பட்டுவருகின்றன. ஆவடி பகுதிகளில் 20 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டிலும் சில்வர் கிளாஸும்  விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் கடை ஊழியர்களே கண்ணாடி டம்ளரை வாங்கி வைத்து, 10 ரூபாய்க்கு விற்பனைசெய்துவருகின்றனர். மது குடித்துவிட்டு கண்ணாடி டம்ளரை மீண்டும் கடை ஊழியரிடம் திருப்பித் தரவேண்டும்.

ஆனால், ஹோட்டல் மற்றும் துரித உணவகங்களில் ஃபாஸ்ட்ஃபுட் கடைகளில்   பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய வணிக நிறுவனங்கள், துணிக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. தள்ளுவண்டிக் கடைகளில் இலை பயன்படுத்தாமல், மீண்டும் பிளாஸ்டிக் பேப்பரை வைத்து உணவுகளை வழங்குகின்றனர்.

"மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, துரித உணவகங்கள், நடமாடும் தள்ளுவண்டிக் கடைகள், வணிக நிறுவனங்கள் என எங்கெல்லாம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இயற்கை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் செயல்பட்டுவரும் பெரிய ஜவுளிக் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.