Published:Updated:

நிறைவேறுமா பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா? #VikatanInfographics

உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ள பெண்கள் இட ஒதுக்கீடு, சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டுக்கொண்டே வருகிறது.

நிறைவேறுமா பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா? #VikatanInfographics
நிறைவேறுமா பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா? #VikatanInfographics

ந்திய அரசியலில், காலத்தின் தேவைக்கேற்ப எழுப்பப்படுகிற விவாதங்களில் அயோத்தி, பாபர் மசூதி இடிப்பு முதலான பிரச்னைகளுக்குப் பிறகு அதிகமாகப் பேசப்படுவது நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் 33 சதவிகித இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிகரமாகப் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, அமல்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும், சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மகளிருக்குச் 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்ட மசோதா, மாநிலங்களவையில் 2010-ம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்ட போதிலும், மக்களவையில் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டுக்கொண்டே வருகிறது.

கடந்த 1990-ம் ஆண்டில் தொடங்கி பல்வேறு நிலைகளைக் கடந்து, தற்போதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தேசிய அளவில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை மக்களவையில் தற்போது  பெரும்பான்மை பலத்துடன் உள்ள பி.ஜே.பி அரசு, நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த மகளிர் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சி செய்கிற மாநிலங்களின் சட்டப்பேரவைகளில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் இயற்ற வேண்டும் எனக் கூறியிருந்தார். ஒடிசா சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டப்பேரவையிலும் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மகளிருக்கான இட ஒதுக்கீட்டைச் 33 சதவிகிதம் என்று வலியுறுத்தப்படுவதை, 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு தேவை உள்ளிட்ட கோரிக்கைகளும் பல்வேறு கட்சிகளின் சார்பில் பிரதானமாக முன் வைக்கப்பட்டு வருகின்றன. மாநில சட்டப்பேரவைகளில் 14 சதவிகிதம்தான் பெண்களின் அதிகபட்ச பிரதிநிதித்துவ விகிதாச்சாரமாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் எனப் பலரும் போராடி வருகின்றனர். 

இந்நிலையில் 1952-ம் ஆண்டு தொடங்கி தற்போதுவரை இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு எவ்வாறு இருந்துள்ளது என்பதைத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு பார்ப்போம்.

சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைவிட இந்தியா, பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தில்  பின்தங்கியே உள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பல்வேறு நெருக்கடிகள் இருந்துவரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டத்துக்காகக் காத்திருக்காமல் தாங்களாகவே முன்வந்து, தங்கள் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்வில் அதிக அளவிலான இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கி, ஒரு முன்னுதாரணத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் சிலரிடம் கேட்டோம்.

வானதி ஸ்ரீனிவாசன் (பாரதிய ஜனதா கட்சி)

“அரசியல் கட்சிகளிலேயே கட்சிப் பொறுப்புகளில் முதலில் 33% இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கியது பாரதிய ஜனதா கட்சிதான். நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களில் ஒதுக்கீடு என்பது மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெற்று நிறைவேற்றப்பட வேண்டிய சட்டம். கொள்கை அளவில் பெரும்பாலான கட்சிகள் இதற்கு உடன்பட்டு இருந்தாலும் சில கட்சிகள் உள் ஒதுக்கீடு என்கிற விவாதத்தைக் கிளப்பி, இந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பொதுவான இட ஒதுக்கீடு இல்லை.

எனவே, இது ஒட்டுமொத்தமான பிரச்னை. முதலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடாக இந்தச் சட்டத்தை நிறைவேற்றுங்கள்; உள் ஒதுக்கீடு, 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பதைப் பின்னர் விவாதித்துக் கொள்ளலாம். உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகிதமாக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் 50 சதவிகிதமாக மாற்றப்பட்டதைப் போல மேற்கொள்ளலாம்”.

ஜோதிமணி (காங்கிரஸ்) 

”பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, அது அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமை. மக்கள்தொகையில் சரிசமமாக இருக்கக்கூடிய பெண்களுக்கு நியாயமாக 50 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட விருப்பம். 33 சதவிகித இட ஒதுக்கீடு என்பதைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளலாம். அதிலுமே பிற்படுத்தப்பட்ட, தலித் பிரிவினருக்கு தனி உள் ஒதுக்கீடு தேவை. சட்டம் இயற்றப்பட்ட பிறகு அதில் மாற்றங்கள் கொண்டு வரலாம். மாற்றங்களைக் காரணம் காட்டி, சட்டம் இயற்றுவதற்கே முட்டுக்கட்டை போடக் கூடாது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் அடிப்படையே பெண்களுக்கு எதிரானது என்பதால் தற்போதைய பி.ஜே.பி. அரசுக்குப் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதில் துளியும் விருப்பமில்லை. அரசியலைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் இதை நிறைவேற்ற வேண்டும்.”

பாலபாரதி (மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்)

“கடந்த 2015-ம் ஆண்டு பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, நாங்கள் மாநாடு ஒன்றை நடத்தினோம். மாநில சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது ஒன்பது சதவிகிதம் குறைவாக உள்ளது. இந்த அமைப்பே ஆணாதிக்க அமைப்பாக இருக்கிறது. பெண்கள் உரிமைக்கான மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்பதற்காக அம்பேத்கர் பதவியை ராஜினாமா செய்தார். இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் எந்தவொரு அரசியல்வாதியுமே தீவிரமாக இருப்பதாகத் தெரியவில்லை. சிறிது சிறிதாக குரல்கள் எழுகின்றதே அன்றி பிரதானமான கட்சிகள், முக்கிய உறுப்பினர்கள் பலருமே இன்றுவரை வாய்மூடி மௌனியாகவே இருந்து வருகின்றனர். உள் ஒதுக்கீடு கட்டாயம் அவசியம்தான் என்றாலும், அது தொடர்பான விவாதம் மசோதா நிறைவேறுவதைத் தள்ளிப்போடவே பயன்படுகிறது. உள்ளாட்சித் தொகுதிகளுக்கு செய்ததைப் போலவே மசோதாவை முதலில் நிறைவேற்றிவிட்டு திருத்தங்களைப் பிறகு மேற்கொள்ளலாம்.” 

சிராஜுதீன் (வழக்கறிஞர்)

``பெண்களுக்கான இட ஒதுக்கீடு வந்துவிட்டால் 33 சதவிகித இடங்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு விடும். இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும், அரசியலிலும் ஆண்களின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்தால் முக்கிய முடிவுகளில் அவர்களின் குரலும் ஒலிக்க ஆரம்பித்துவிடும். இதை எந்த அரசியல் கட்சிகளும் விரும்ப மாட்டார்கள். ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி இதைத் தள்ளிப்போட்டுக் கொண்டுதான் போவார்களே அன்றி நிறைவேற்ற மாட்டார்கள். உள் ஒதுக்கீடு என்பது அவசியம்தான், ஆனால், அந்த விவாதத்தை ஏன் இந்தச் சட்டத்தில் மட்டுமே எழுப்புகிறார்கள். காரணம், இந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போட வேண்டும் என்பதற்கான உள்நோக்கம்தான். முதலில் 33 சதவிகிதத்தை நிறைவேற்றுங்கள். உள் ஒதுக்கீட்டை பாலின பேதமின்றி அனைத்து இடங்களுக்கும் கொண்டு வாருங்கள்; அப்போது ஏற்றுக்கொள்ளலாம். பெண்கள் இட ஒதுக்கீட்டில் மட்டும் பேசுவது நிச்சயம் உள்நோக்கம் கொண்டதுதான்”.

நாடாளுமன்றத்திலும், மாநிலச் சட்டமன்றங்களிலும் மகளிருக்கான இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே, நாட்டில் முக்கிய முடிவுகள், அதிகாரங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்பது உறுதி.