Published:Updated:

`ரூ. 25 லட்சத்துக்கு 68 லட்சம் ரூபாய் கட்டியும் மிரட்டுறாங்க!’ - ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை

`ரூ. 25 லட்சத்துக்கு 68 லட்சம் ரூபாய் கட்டியும் மிரட்டுறாங்க!’ - ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை
`ரூ. 25 லட்சத்துக்கு 68 லட்சம் ரூபாய் கட்டியும் மிரட்டுறாங்க!’ - ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளிக்க முயன்றவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. கணேசன் அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு அருகே பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 2012 -ம் ஆண்டு அந்தியூரைச் சேர்ந்த முட்டை வியாபாரியான தர்மலிங்கம் என்பவரிடம், ரூ.25 லட்சம் கடனாகப் பெற்றிருக்கிறார். அந்தக் கடனுக்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து கிட்டத்தட்ட ரூ.68 லட்சம் ரூபாய் வரை கணேசன் கொடுத்திருக்கிறார். ஆனாலும், `இன்னும் வட்டி பாக்கி இருக்கிறது’ எனச் சில பல லட்சங்கள் கேட்டு தர்மலிங்கம் குடைச்சல் கொடுத்ததாகக் கூறுகிறார் கணேசன்.

`வாங்கிய கடனுக்கு மேல ரெண்டு மடங்கு வட்டி கட்டிட்டேன். உடம்புல உசுரைத் தவிர வேறெதும் என்கிட்ட இல்லைன்னு’ கணேசன் கதறியும், தர்மலிங்கம் தொடர்ந்து வட்டி கேட்டு மிரட்டி வந்திருக்கிறார். அதனையடுத்து, அந்தியூர் காவல் நிலையம் மற்றும் ஈரோடு எஸ்.பி அலுவலகத்திலும் தர்மலிங்கத்தின் கந்துவட்டிக் கொடுமை குறித்து கணேசன் புகார் கொடுத்திருக்கிறார். இருந்தும், போலீஸார் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கின்றனர்.

அதனையடுத்து, நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த கணேசன், தண்ணீர் பாட்டிலில் மண்ணெண்ணெய்யை நிரப்பி யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக எடுத்து வந்து, கலெக்டர் அலுவலகத்திலேயே உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த போலீஸார், பதறிப்போய் மண்ணெண்ணெய் பாட்டிலைப் பிடுங்கி வீசியெறிந்து, உடலில் தண்ணீரை ஊற்றித் தடுத்தனர். `என்னை விட்டுடுங்கய்யா... இனிமேல் என்னால வாழ முடியாது. பல தடவை போலீஸ்கிட்ட புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லையே’ எனக் கதறித் தீர்த்தார். அதனையடுத்து, கணேசனைக் குண்டுக்கட்டையாகத் தூக்கி ஜீப்பில் ஏற்றிய போலீஸார், சூரம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

ஏற்கெனவே, இதுபோன்று பல சம்பவங்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றும், கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார், முறையாக அனைவரையும் பரிசோதிக்காமலும், அலட்சியத்துடன் பணியாற்றுவது ஏனோ என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.