Published:Updated:

``அத்து மீறி நடக்கிறது காவல்துறை” - சாலையோர வியாபாரிகள்

``அத்து மீறி நடக்கிறது காவல்துறை” - சாலையோர வியாபாரிகள்
``அத்து மீறி நடக்கிறது காவல்துறை” - சாலையோர வியாபாரிகள்

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரங்களைக் கருத்தில்கொண்டு, கடந்த 2004-ம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளின் நலன் காக்கும் வகையில் தேசியக் கொள்கையைக் கொண்டுவந்தது மத்திய அரசு. அதிலிருந்து, ஆண்டுதோறும் ஜனவரி 20-ம் தேதி சாலையோர வியாபாரிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த பொதுவான கொள்கையை மாநில அரசுகள் சரியாகக் கடைப்பிடிக்காததால், 2014-ம் ஆண்டில் மத்திய அரசு சாலையோர வியாபாரிகளுக்காக, தனிச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

என்றாலும் நகராட்சி நிர்வாகிகளும், காவல்துறையைச் சேர்ந்தவர்களும் மத்திய அரசின் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள். இந்தத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை மற்றும் சமூகப் பாதுகாப்புக்காகச் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவான அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் அணி, தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ஜனவரி 21-ல் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தினர்.

சாலையோர வியாபாரிகள் மீது நடத்தப்படும் விதிமுறை மீறல்கள் குறித்து தமிழக அமைப்புசார தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் மாநிலத் தலைவர் வி.மகேஷ்வரன், ``சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க, 2014-ம் ஆண்டிலேயே தனிச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதிலும், இன்னமும் அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை. எனவே, அந்தச் சட்டத்தின் அடிப்படையில் சாலையோர வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வியாபாரம் செய்ய அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

இதுபோன்ற வியாபாரிகளின் உரிமைகளைப் பேண, நாடு முழுவதும் வியாபாரிகள் குழு ஏற்படுத்தப்பட வேண்டும் எனச் சட்டம் வகுக்கப்பட்டது. 15 பேர் கொண்ட அந்தக் குழுவில் 40 சதவிகிதம் சாலையோர வியாபாரிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்து, தமிழகம் முழுவதும் உள்ள 125 நகராட்சிகளிலும் திருச்சியைத் தவிர்த்த மற்ற அனைத்து மாநகராட்சிகளிலும் வியாபாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் நேரடியாகச் சாலையோரக் கடைகளை அகற்றும் அதிகாரம் காவல்துறைக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் வழங்குவது தடுக்கப்பட்டு வியாபாரிகள் குழுவின் மூலமாகவே அகற்ற முடியும். ஆனால், சென்னை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் வியாபாரிகள் குழுவின் அனுமதியில்லாமலேயே காவல்துறையினர் சட்ட விரோதமாகக் கடைகளை அகற்றுகின்றனர். சென்னை பாரிமுனையில் உள்ள சாலையோரக் கடைகள் அகற்றப்பட்டதில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் வாழ்வாதாரத்தை இழந்த இரு வியாபாரிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள சாலையோர வியாபாரிகளையும் சி.எம்.டி.ஏ நிர்வாகம் சட்ட விரோதமாக அகற்றும் செயலில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் சட்டத்தின்படி, வியாபாரிகளை அப்புறப்படுத்தும் உரிமை நிர்வாகிகளுக்கு இல்லை. எனவே, தமிழகத்தில் மத்திய அரசின் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மேலும், ``இதுவரை அடையாள அட்டை முறைப்படி வழங்காதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வியாபாரிகள் குழுவின் அனுமதியில்லாமல் கடைகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. அடையாள அட்டைகளில் பெயர், முகவரி போன்றவற்றைத் திருத்தம் செய்து கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். அகற்றப்பட்ட சாலையோரக் கடைகளுக்குப் பதிலாகப் புதிதாக இடங்கள் அளிக்க அரசு உடனடியாக வழிவகை செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் தமிழக அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

அன்றாடம் உழைத்துக் கிடைக்கும் வருமானத்தில் பிழைக்கும் சாதாரண மக்களின் வாழ்வைக் காக்கும் சட்டத்தை அரசும், அதிகாரிகளும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்...