Published:Updated:

`சாட்சி கூறுபவர்கள்மீது பொய் வழக்கு போடுறாங்க!’ - தூத்துக்குடி எஸ்.பி நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவு

`சாட்சி கூறுபவர்கள்மீது பொய் வழக்கு போடுறாங்க!’ - தூத்துக்குடி எஸ்.பி நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவு
`சாட்சி கூறுபவர்கள்மீது பொய் வழக்கு போடுறாங்க!’ - தூத்துக்குடி எஸ்.பி நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவு

தூத்துக்குடியில் போராட்டங்கள் தொடர்பாக அம்மாவட்டக் காவல்துறை எஸ்.பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மோகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ``தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களாகப் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், விழிப்பு உணர்வு, பேரணி உள்ளிட்ட எவற்றுக்குமே காவல்குறை அனுமதி வழங்கவில்லை. போராட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கோருபவர்களைத் தேவையின்றி அலைகழிக்கப்படுவதுடன் காவல்துறை தொந்தரவு செய்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சி.பி.ஐ, அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறுபவர்கள்மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சி.பி.ஐ, அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறிய சந்தோஷ் ராஜ் என்பவர் மீது போலீஸார் பல பொய் வழக்குகளைப் பதிந்துள்ளனர்.

தூத்துக்குடி போலீஸார் சட்டப்படி முறையாக நடக்கவில்லை. தூத்துக்குடியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் வழக்கறிஞர் குழு பணியில் இருக்க சட்ட உதவி மையத்தின் உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட வேண்டும். கடந்தாண்டு ஆகஸ்ட் 15 முதல் 15.01.2019 வரை தூத்துக்குடியில் கைது செய்யபட்டவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் அடங்கிய குழுவை தாலுகா அளவில் அமைக்க மாவட்ட சட்ட உதவி மையம் வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிந்து, சட்டவிரோதமாக கைது செய்வதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த மூன்று மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கோரியவர்கள் எத்தனை பேர், எத்தனை போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்டக் காவல்துறை எஸ்.பி நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தினர்.