Published:Updated:

'உயிர் குடித்த 'கொக்குக் கறி' ஆசை!

தொடர்கிறது பழி வாங்கும் படலம்...

##~##
'உயிர் குடித்த 'கொக்குக் கறி' ஆசை!

டந்த 6-ம் தேதி, தி.மு.க-வைச் சேர்ந்த செங்கல்பட்டு நகர்மன்ற துணைத் தலைவர் ரவிப்பிரகாஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட... ஏரியா பதட்டத்தில் உறைந்து கிடக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 யார் இந்த ரவிப்பிரகாஷ்? ஒரு சிறிய ஃபிளாஷ்பேக்.

திருக்கச்சூரைச் சேர்ந்த பூபதி என்ற ரயில்வே ஊழியரின் மகன் ரவிப்பிரகாஷ், செங்கல்பட்டு பள்ளியில் படித்து வந்தார். அப்போதைய செங்கல்பட்டு தாதாவான 'குரங்கு’ குமாரின் சித்தப்பா மகன் பார்த்தி பனுக்கும் ரவிப்பிரகாஷ§க்கும் ஏழாம் பொருத்தம். பள்ளிப் படிப்பு முடிந்ததும், பார்த்திபனைக் கொலை செய்து கோபத்தை தீர்த்திருக்கிறார், ரவிப்பிரகாஷ். செங்கல்பட்டு வந்தால் குமாரின் ஆட்கள் தன்னைக் கொலை செய்யக்கூடும் என்ற அச்சத்தால்... அதற்குப்பின் செங்கல்பட்டு வருவதை தவிர்த்துவிட்டார். கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் என்று ரவிப்பிரகாஷ் வாழ்க்கை திசை திரும்பியது.

'உயிர் குடித்த 'கொக்குக் கறி' ஆசை!

2007-ம் ஆண்டு செங்கல்பட்டு அ.தி.மு.க. நகரமன்றத் துணைத்தலைவராக இருந்த 'குரங்கு’ குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவிப்பிரகாஷ்

'உயிர் குடித்த 'கொக்குக் கறி' ஆசை!

கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வந்த ரவிப்பிரகாஷ் மீண்டும் 'மாமூல்’ வாழ்க்கையைத் தொடர்ந்தார். செங்கல்பட்டு பகுதியில் அ.தி.மு.க. பிரமுகரான குமாரின் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டதில்  ஏரியா தி.மு.க-வினருக்கு பெரும் மகிழ்ச்சி. அதனால் அப்போதைய அமைச்சரும் மாவட்டச் செயலாளரு மான அன்பரசனுடன் நெருக்கமாகிப் போனார் ரவிப்பிரகாஷ்.

தி.மு.க-வில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு கொடிஏற்றுவது, அன்னதானம் வழங்குவது போன்ற கட்சி நிகழ்ச்சிகளை நடத்திய ரவிப்பிரகாஷ் மனதில் பதவி ஆசை வந்தது. வீழ்த்தப்பட்ட குமாரின் நகரமன்றத் துணைத் தலைவர் நாற்காலியைக் கைப்பற்ற ஆசைப்பட்டு காய் நகர்த்தினார். ஆசைப்பட்டபடியே கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். துணைத் தலைவர் பதவிக் கனவோடு இருந்த சீனியர் தி.மு.க. புள்ளிகளை ஓரம் கட்டிவிட்டு, அன்பரசனின் ஆதரவோடு பதவியையும் கைப்பற்றினார். ஒரே வருடத்தில் ரவிப்பிரகாஷின் அசுர வளர்ச்சி, தி.மு.க-வினரை நிலைகுலைய வைத்தது.

இந்த நிலையில், பேரறிஞர் அண்ணாவின் 103-வது பிறந்த நாளை செங்கல்பட்டு நகரத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்தது. மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால், மாவட்டச் செய லாளர் அன்பரசன் மேடைக்கு அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கி தீவிரமாக கண்காணித்து வந்தார். 6-ம் தேதி காலை 11 மணியில் இருந்து 2 மணி வரை விழா நடக்கும் இடத்தைப் பார்வையிட்ட ரவிப்பிரகாஷை, உணவு சாப்பிட அன்பரசன் அழைத் திருக்கிறார். ஆனால் ரவிப்பிரகாஷோ, 'நண்பன் வரதன் கொக்குக்கறி செய்திருக்கிறான். அவனோடு சாப்பிட்டு விட்டு வருகிறேன்’ என கூறிவிட்டு நண்பருடன் பைக்கில் கிளம்பினார்.

'உயிர் குடித்த 'கொக்குக் கறி' ஆசை!

நத்தம் ஏரியாவில் கட்டிவரும் தனது புதிய வீட்டைப் பார்த்துவிட்டு, மதியம் 2.50 மணிக்கு அதே ஏரியாவில் இருக்கும் வரதனின் வீட்டுக்கு வந்த நேரத்தில் ஒரு பொலீரோ கார் வந்திருக்கிறது. அதில் இருந்து கத்தியுடன் இறங்கியவர்கள், ரவிப் பிரகாஷை நோக்கி ஆவேசமாக ஓடிவந்தனர். உடனே, ரவிப்பிரகாஷ் அந்த வீட்டு மாடிக்கு தப்பி ஓடினார். வீட்டின் மாடியில் அவர் நண்பர்கள் பாலாவும், வரதனும் இருந்தார்கள். பாலா அங்கிருந்து குதித்து தப்பி ஓடிவிட... வரதனை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டு ரவிப்பிரகாஷை மடக்கியது கும்பல். பின்பக்க மண்டையில் கொடூரமாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பித்தார்கள்.

சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி. தணிகைவேல், வரதனை விசாரித்தபோது, ''12 பேர் வந்தாங்க. அதில் 'பட்டரை வாக்கம்’ சிவாவை மட்டும்தான் எனக்குத் தெரியும்'' என்று அடையாளம் சொல்லி இருக்கிறார். கடந்த 7-ம் தேதி நடந்த விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின், திருக்கச்சூரில் உள்ள ரவிப்பிரகாஷ் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.

அன்றைய தினம் திருவண்ணாமலை முதலாம் குற்றவியல் நீதிமன்றத்தில் 'பட்டரைவாக்கம்’ சிவா உட்பட 12 பேர் சரண்டர் ஆக, அவர்கள் அனைவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தக் கொலை விவகாரம் குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி. மனோகரனிடம் பேசினோம். ''செங்கல்பட்டுக்கு வர முடியவில்லை என்பதால்தான் ரவிப்பிரகாஷ், 'குரங்கு’ குமாரை கொலை செய்தான். இப்போது ரவிப்பிரகாஷ் இருக்கும் வரையில் தான் செங்கல்பட்டு உள்ளே வரமுடியாது என்பதால், 'பட்டரைவாக்கம்’ சிவா அவனை கொலை செய்திருக்கிறான். ரவிப்பிரகாஷ் மீது நான்கு கொலை வழக்கு, ஐந்து கொலை முயற்சி, துப்பாக்கி வைத்திருப்பதாக இரண்டு வழக்குகள் உட்பட மொத்தம் 12 வழக்குகள் உள்ளன. 'பட்டரைவாக்கம்’ சிவா மீது ஐந்து கொலை, ஏழு கொலை முயற்சி உட்பட மொத்தம் 24 வழக்குகள் உள்ளன. சிவாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளோம்'' என்றார்.

கொலைக்குப் பின்புலமாக சில அரசியல் புள்ளிகள் பெயரும் அடிபடுவதால், விரைவில் அவர்களும் சிக்கலாம் என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு.

- பா.ஜெயவேல்