Published:Updated:

அற்ப சந்தோஷம்... பறிபோகும் உயிர்கள்!

எச்சரிக்கை ரிப்போர்ட்

##~##
அற்ப சந்தோஷம்... பறிபோகும் உயிர்கள்!

னி, ஞாயிறு விடுமுறை என்றாலும் சரி... ஏதாவது பண்டிகை விடுமுறை என்றாலும் சரி, அடுத்த நாள் பேப்பரில், 'மெரீனாவில் குளித்த கல்லூரி மாணவரை அலை இழுத்துச் சென்றது’, 'ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் பலி’, 'குடி போதையில் வண்டி ஓட்டிய இளைஞர்கள் மரணம்’ என்ற செய்திகள் கண்டிப்பாக இருக்கும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அடிக்கடி மரணங்கள் நிகழும் நாகை மாவட்​டம் கொள்ளிடத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு சம்பவம். கொள்ளிடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு 20 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் ஓடி வந்தார்கள். ''நாங்க சிதம்பரத்தில் இருந்து அஞ்சு பேர் ஆத்துல குளிக்க வந்தோம். அதில் வினோத்குமாரையும், செல்வகணபதியையும் தண்ணி இழுத்துட்டுகிட்டுப் போயிடுச்சு'' என்று சந்தோஷ்குமார், அருண், விக்னேஷ்ராஜ் என்ற மூவரும் பதறினார்கள்.

அற்ப சந்தோஷம்... பறிபோகும் உயிர்கள்!

'இப்போ அடிச்சுக்கிட்டு போற அளவுக்கு ஆத்துல தண்ணி இல்லையே...’ என்ற குழப்பத்தோடு, ஸ்பாட்டுக்கு விரைந்து போய் தேடினார்கள். இருவரும் கிடைக்கவில்லை. சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்களை வரவழைத்து தேடியும் பலன் இல்லை. மறுநாள் காலையில்தான் வினோத்குமார், செல்வகணபதி இருவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டன.

கொள்ளிடம் போலீஸாரிடம் பேசியபோது, ''கொள்ளிடம் ஆத்துல ரயில்வே லைனுக்குக் கீழே போயிட்டா... ரொம்ப அமைதியான மறைவிடம் இருக்குது. அதனால், இளைஞர்கள் தங்கள் நண்பர்களோட மது அருந்த அந்த இடத்துக்கு வந்திடுறாங்க. நாங்க அப்பப்ப ரவுண்ட்ஸ் போய், யாராவது இருந்தா விரட்டி விடுவோம். ஆனாலும், இளைஞர்கள் நடமாட்டம் அங்கே குறையவே இல்லை. அன்னிக்கு இந்தப் பசங்க அஞ்சு பேரும் சரக்கு, பிரியாணி, புரோட்டான்னு சகலத்தையும் வாங்கிட்டு, மதியம் மூணு மணிக்கே வந்துட்​டாங்க போலிருக்கு. சரக்கை ஏத்துறது, குளிக்கறதுன்னு அஞ்சு மணி வரைக்கும் தொடர்ந்து ஆட்டம் போட்டு இருக்காங்க. ஒரு கட்டத்துல ஃபுல்லா ஏறி... எல்லோருக்குமே நிதானம் தப்பி இருக்கு. அப்பவும் விடாம குளிச்சு இருக்கானுங்க. ஒருத்தனை ஒருத்தன் பிடிச்சுத் தள்ளி விளையாடி இருக்காங்க. அப்பதான் ரயில்வே லைன் கட்டு​மானத்​துக்காக ஆத்துக்குள்ள தோண்டி இருந்த ஒரு பள்ளத்துல மூழ்கி இருக்கானுங்க. குடிவெறியில நிதானம் தவறி இருந்ததால, அந்த ரெண்டு பேராலயும் நீந்தி வர​முடியலை. உள்ளே இருந்த மணல்ல சொருகிட்டாங்க'' என்றார்கள் வருத்தம் மேலிட.

அற்ப சந்தோஷம்... பறிபோகும் உயிர்கள்!

குளிக்க வந்த ஐவரும் சிதம்பரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் செல்வகணபதியைத் தவிர்த்து மற்ற நால்வரும் கல்லூரியில் படிப்பவர்கள். செல்வகணபதியும் அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்வதற்காக, பணம் சேர்க்க வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். விடுமுறையைக் கொண்டாடுவதற்காக ஐவரும் கொள்ளிடம் ஆற்றைத் தேர்ந்தெடுத்து இருக்​கிறார்கள். அதுதான் விபரீதமாக முடிந்து இருக்கிறது.

உயிர் பறிபோகும் அளவுக்குக் கொண்டாடும் இளைஞர்களின் மனநிலை குறித்து தஞ்சையைச் சேர்ந்த

அற்ப சந்தோஷம்... பறிபோகும் உயிர்கள்!

மனநல மருத்துவர் தியாகராஜனிடம் பேசினோம். ''இன்றைய இளைஞர்கள் எளிதாக பணம் சம்பாதிக்கிறார்கள். அதனால் அவர்களிடம் 'ஜாலியா இருக்கணும்’ என்ற மனநிலை மட்டுமே அதிகமாக இருக்கிறது. அதுவும் ஐந்தாறு பேர் கூடினால், சொல்ல வேண்டியதே இல்லை. ஏதாவது சாகசத்தைச் செய்து மற்றவர்களின் கவனத்தைக் கவர முயல்வார்கள். அதுவும் குழுவாக சேரும்போது இந்த எண்ணம் தலைவிரித்து ஆடும். இப்போது 10 பேரில் ஏழு பேர் இதுபோன்ற மனநிலை கொண்டவர்களாக மாறிவிட்டார்கள். அதனால் குழுவாகச் சேர்ந்தால் மது அருந்துதல், போதையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது, ஆழம் தெரியாமல் ஆறு, கடலில் குளிப்பது என்று தைரியமாக இறங்குகிறார்கள். பின்விளைவுகள் தெரியாமல் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். போலீஸ் பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

அதனால் பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளை வழி நடத்த வேண்டும். இளைஞர்களைச் சொல்லித் திருத்த முடி யாது. தங்கள் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ... அப்படி முதலில் பெற்றோர்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். விடுமுறை தினங்களில் பிள்ளைகளின் கொண்டாட்டங்களைக் கண்காணிப்பது, அவ்வப்போது தொடர்பு கொள்வது, வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிய வைப்பது, நிறைய பொறுப்புகளைக் கொடுப்பது என்று அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் அற்ப சந்தோஷத்துக்காக உயிர் விடும் சூழல் ஏற்படாது'' என்றார்.

பொங்கல் பண்டிகையும், அதனைத் தொடர்ந்து நிறைய விடுமுறை நாட்களும் வருகிறது. இளைஞர்களை இனியாவது ஆக்கபூர்வமான பாதையில் திருப்​புங்கள். குடும்பத்தோடு சேர்ந்து... பிள்ளைகளின் நண்பர்களுடன் இணைந்து ஆபத்து இன்றி விடுமுறையைக் கொண்டாடச் சொல்லிக் கொடுங்கள்.

- கரு.முத்து