Published:Updated:

''மக்களுக்கு இல்லையா, மக்கள் மன்றம்?''

திருச்சி கூக்குரல்

##~##
''மக்களுக்கு இல்லையா, மக்கள் மன்றம்?''

'திருச்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட மக்கள் மன்றம், வணிக ரீதியாக செயல்படுவதை தடுத்து நிறுத்த​வேண்டும்’  என்றது ஜூ.வி. ஆக்ஷன் செல் (044-42890005).   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருச்சியின் முக்கியப் பகுதியான தில்லைநகரில் அமைந்துள்ளது மக்கள் மன்றம். இது, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை பொதுமக்கள் குறைந்த செலவில் நடத்துவதற்கு வசதியாக 1967-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தால் கட்டப்பட்டது. திருமணம் நடத்துவதற்கு வேண்டிய மணமேடை, டைனிங் ஹால், மணமகன், மணமகளுக்கு தனித்தனியான விசாலமான அறைகள் என தனியார் திருமண மண்டபங்களுக்கு நிகரான வசதிகளைக் கொண்டது. மிகக் குறைந்த வாடகையில் ஏழை, நடுத்தர மக்களுக்கான திருமண மண்டபமாக விளங்கியது. இதனை கடந்த ஐந்து வருடங்களாக மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல், வணிக நோக்கில் கண்காட்சிகள், சிறப்பு விற்பனை போன்றவற்றுக்கு மட்டுமே அனுமதி அளிப்பதாகப் புகார். 

''மக்களுக்கு இல்லையா, மக்கள் மன்றம்?''

  திருச்சி காங்கிரஸ் பிரமுகரான முரளி, 'திருச்சி நகரத்தில் பெருவணிகர்களாக விளங்கிய

''மக்களுக்கு இல்லையா, மக்கள் மன்றம்?''

தில்லைநாயகம் முதலியார், சுப்பையா பிள்ளை, முத்துச்சாமி பிள்ளை, ஹாலாஷ்யம் ஐயர், டாக்டர் கார்மேகம் ஆகிய ஐவரும் தங்களது சொத்துக்களை மக்களுக்கு தானமாகக் கொடுத்து உருவாக்கிய பகுதிதான் தில்லை நகர். அவர்கள்தான் ஏழை மக்களின் சொந்த வீடு கனவு நனவாக, திருச்சி நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தையும் உருவாக்கினர். அதன் மூலம் 1960-களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் மக்கள் மன்றம். ஏழை மக்களின் நலனுக்காகச் செயல்பட்டு வந்த சங்கம், நாளடைவில் முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் மாறிப் போனது. இன்னமும் இங்கு திருமணம் நடத்த ஒரு நாள் வாடகை 3,500 ரூபாய்தான். ஆனால், திருமணம் போன்ற மக்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்து, வணிகத்துக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட மக்கள் மன்றத்தை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கே கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மக்கள் மன்றத் தின் செயலாளர் சுப்ரமணியத்திடம் கேட்டோம். ''தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வீட்டு வசதி சங்கங்கள் நலிவடைந்து விட்டன. இந்தச் சங்கமும் 2001 முதல் 2008 வரை கடும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. 2007-ம் ஆண்டு மன்றத்தின் சமையலறைக் கூரை இடிந்து விழுந்தது. இரண்டு முறை சரிசெய்தும் பயன் இல்லை. இது மிகப் பழைமையான கட்டடம். கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை ஆராய்ந்து, அறிக்கை தருமாறு பொதுப்பணித் துறையிடம் கேட்டு இருக்கிறோம். சங்கத்தின் வருமானத்துக்காகதான் அரசு, தனியார் விற்பனை கண்காட்சிகளுக்கு வாடகைக்கு விடுகிறோம். மக்கள் பயன்பாட்டுக்கு விட்டால் வருடத்துக்கு 30 நாட்கள்தான் வருமானம் வரும். மற்ற நாட்களில் வருமானம் இருக்காது'' என்றார்.

இந்தப் பிரச்னையை திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்ப​தாகக் கூறியுள்ளார். மக்கள் மன்றம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வரட்டும்.

- க.ராஜீவ்காந்தி, படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்