Published:Updated:

''கருணாநிதி மவுன்ட் பேட்டன்... ராமதாஸ் மகாத்மா காந்தி!''

அடடே அன்புமணி

##~##
''கருணாநிதி மவுன்ட் பேட்டன்... ராமதாஸ் மகாத்மா காந்தி!''

'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை... புதியது என்ன?’ என்ற தலைப்பில் கடந்த 8-ம் தேதி தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்கூட்டம். எதிர்பார்த்ததை விட கூட்டம் திரளவே, அன்புமணிக்கு முகம் கொள்ளாத பூரிப்பு. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முன்னதாக, பாட்டாளி இளைஞர் சங்க மாநிலச் செயலாளரான அருள் பேசும்போது, ''நமது இனத்தின் திறமையை மெய்ப்பிக்க வந்த சினிமாதான் 'ஏழாம் அறிவு’. பல்லவ மன்னர்கள் அனைவருமே வன்னிய இனத்தில் பிறந்தவர்கள். பல்லவ இனத்தைச் சேர்ந்தவரான போதி தர்மரும் ஒரு வன்னியர்தான். ஆக, எய்ட்ஸ் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு மருந்து கண்டு பிடிப்பது உள்ளிட்ட உலகளாவிய திறமை கொண்ட டி.என்.ஏ-வும், ஜீனும் ஒவ்வொரு வன்னியனுக்குள்ளும் மறைந்து கிடக்கிறது. நம் மருத்துவர் அய்யாவும், சின்ன அய்யாவும் முறைப்படி பயின்ற மருத்துவர்கள் என்றாலும், அதைவிட அவர்களின் ரத்தத்திலேயே போதி தர்மரின் மருத்துவக் குணம் புதைந்து கிடந்ததால் தான் இந்த அளவுக்கு அவர்களால் பிரகாசிக்க முடிந்தது...'' என்று கூட்டத்தை விசிலடிக்க வைத்தார்.

''கருணாநிதி மவுன்ட் பேட்டன்... ராமதாஸ் மகாத்மா காந்தி!''

மற்ற அனைத்து நிர்வாகிகளும் அவசரம் அவசரமாக ஆளுக்கொரு நிமிடத்தில் பேச்சை முடித்துக்கொள்ள... மைக் பிடித்தார் அன்புமணி.

''இந்த தர்மபுரி மண் உங்கள் பாசத்துக்குரிய அய்யா ராமதாஸுக்கு மட்டுமல்ல... எனக்கும் பிடித்தமான ஊர். நான் பிறந்த விழுப்புரம் மண்ணிலும், உங்கள் தர்மபுரி மண்ணிலும் இறக்கும் யாரையும் புதைப்பதில்லை; மாறாக விதைக்கிறோம். அந்த விதை விருட்சமாக வளர்ந்து நிச்சயம் ஒருநாள் விழுது பரப்பும் என்பது இந்த கூட்டத்தைப் பார்த்து எனக்கு  நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

பாட்டாளிகள் ஆள வேண்டும் என்றுதான் மாவீரன் வீரப்பன் பிறந்த மண்ணில் கூடி இருக்கிறோம். உலக வனங்களைப் பற்றி ஐ.நா. சபை நடத்திய ஆய்வில், 'வீரப்பன் நடமாடிய காடுகள் மட்டுமே அடர்ந்து வளர்ந்து இருந்தது’ என்று தெரிந்ததாம். வனத்தை வளர்த்த அந்த புரட்சியாளன் வீரப்பன் பிறந்த மண்ணில், முக்கிய சில முடிவுகளை எடுக்க திரண்டு இருக்கிறோம். தி.மு.க-வுக்கு திருமங்கலம் திருட்டு ஃபார்முலாவைக் கற்றுக்கொடுத்தது. பா.ம.க-வுக்கு பென்னாகரம் பண்பான ஃபார்முலாவைக் கற்றுக் கொடுத்தது. இடைத் தேர்தலுக்காக மூன்று மாதம் பென்னாகரத்தில் என் சொந்தங்களோடு தங்கியிருந்த போதுதான் எம்மக்களின் வறிய நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். திராவிடம் என்ற பெயரை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கட்சிகள் உங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய செல்வங்களை கொள்ளை அடித்தனர்; அடித்துக் கொண்டும் இருக்கின்றனர். அதனால்தான் கடலூர் புயல் பாதிப்புக்கு லட்சங்களை அள்ளி வழங்கி பெருமை தேடிக்கொள்கின்றனர். கடலூரை பார்வையிடச் சென்ற என்னிடமும் மக்கள் பொருள் உதவி கேட்டனர். அப்போது நான் சொன்னது, 'நாங்கள் நடத்துவது பாட்டாளிகளின் கட்சி. எங்களிடம் அள்ளிக் கொடுக்க பணமில்லை. ஆனால் ஆயிரம் ஆயிரம் சிங்க இளைஞர்கள் உள்ளனர். நீங்கள் விரும்பினால் அனுப்புகிறேன்’ என்று உங்களை எல்லாம் மனதில் நினைத்து பேசிவிட்டு வந்தேன்.

அதே கடலூருக்குச் சென்ற நடிகர் தலைவர் ஒருவர், சினிமாவில் போர்த்திக்கொண்டு அலை வாரே... அதே போன்று 10 போர்வைகளை எடுத்துச் சென்றார். அதை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, வேதனையில் இருந்த 10 பேரின் கன்னத்தில் அறை கொடுத்துவிட்டுக் கிளம்பி விட்டார். முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படும் அவருக்கு இருக்கும் ஒரே தகுதி தள்ளாடுவது மட்டும்தான். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது நம் தமிழ் மக்களுக்காக நிறைய வசதிகளைக் கொண்டுவந்தேன். அந்தத் திட்டங்களில் கருணாநிதி கையெழுத்து வேண்டுமானால் போட்டிருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் மருத்துவர் அய்யாவும், நானும் எடுத்த முயற்சிகள். இந்திய சுதந்திர சாசனத்தில் வெள்ளை ஆட்சியின் இறுதி கவர்னர் ஜெனரல் மவுன்ட் பேட்டன் பிரபுவும், மகாத்மா காந்தியும் கையெழுத்து போட்டனர். இந்த இரண்டு கையெழுத்தில் கேவலமான ஜீவன் போட்டது எது, உயர்ந்த ஆத்மா போட்டது எது என்று நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அதுபோலத்தான் சில மக்கள் திட்டங்களுக்கு மவுன்ட் பேட்டனாக இருந்து கருணாநிதி கையெழுத்து போட்டிருந்தாலும் அதை போட வைத்தது காந்திஜிக்கு நிகரான நமது மருத்துவர் அய்யா. அவர் ஒரு சமூகப் போராளி. அப்படிப்பட்ட உண்மைத் தமிழன் தமிழகத்தை ஆண்டால்... மக்கள் வாழ்க்கை செழிப்படையும். இதுவரை நடந்து வரும் அற்பத்தனமான அரசியலைத் தூக்கி எறியுங்கள்.

இன்றைய கூட்டம் முடித்து வீட்டுக்குச் சென்றதும் ஊரில் 10 பேரிடம் பேசுங்கள். நாளை காலை டீக்கடையில் பேசுங்கள். மாற்றுக் கட்சி யில் இருக்கும் நம் சொந்தங்களை கொத்துக் கொத்தாக நம் கட்சிக்கு இழுத்து வாருங்கள். பாட்டாளிகளின் வாழ்க்கைத் தரத்தை அதற்குப் பிறகு பாருங்கள்'' என்று பேசி முடித்தார்.

'என்னப்பா திடீர்னு வீரப்பன் மேல இவ்வளவு பாசமா பேசுறார் சின்ன அய்யா?’ என்று காரணம் புரியாமலே கலைந்து போனார்கள் பாட்டாளிகள்.

- எஸ்.ராஜாசெல்லம்

படம்: எம்.தமிழ்ச்செல்வன்