Published:Updated:

`தண்ணீரே வரல ...தடுப்பணை எதற்கு?’ - மதுரை ஸ்மார்ட் சிட்டி அவலம்

`தண்ணீரே வரல ...தடுப்பணை எதற்கு?’ - மதுரை ஸ்மார்ட் சிட்டி அவலம்
`தண்ணீரே வரல ...தடுப்பணை எதற்கு?’ - மதுரை ஸ்மார்ட் சிட்டி அவலம்

று மாவட்டங்களுக்கான பாசனம், மதுரை உட்பட நான்கு மாவட்டங்களின் வழியே பயணம் என 258 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பரந்து விரிந்திருக்கின்றது சங்கப் புகழ் வைகை நதி. ஆனால், ஆற்றுக்குள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதாலும், மணல்கொள்ளை உள்ளிட்ட சமூகச் சீர்கேட்டாலும் தன் முகத்தை முற்றிலுமாக இழந்துவிட்ட வைகை, தற்போது வறண்டுபோய் நீர்த்தடம் அழிகின்ற அபாயத்தில் உள்ளது.

இந்த நிலையில், மதுரை நகருக்குள் வைகை ஓடும் பாதைகளில் முக்கியப் போக்குவரத்துத் தடங்களான கல்பாலம் மற்றும் ஓபுளாபடித்துறை ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 20 கோடி ரூபாய் செலவில் அவசர, அவசரமாகப் பொதுப்பணித்துறையினர் தடுப்பணைகளைக் கட்டி வருவதை பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். 

பெரிய பாலம் என்று அழைக்கப்படும் ஏ.வி.பாலத்தின் ஏழாவது, எட்டாவது வளைவுத் தூண்கள் ஏற்கெனவே பெயர்ந்து சிதைவடையத் தொடங்கியுள்ளன. இவை எந்தத் துறையின் கவனத்திற்கும் போய்ச் சேரவே இல்லை. இந்தச் சூழலில் முற்றிலும் உறுதித்தன்மையை இழந்துள்ள பெரிய பாலத்தின் முன்பாகவே நீரைத் தேக்கும் வகையில் கல்பாலத்தின் அருகே தடுப்பணை கட்டப்படுவதால் வெள்ளம் ஏற்படும் காலங்களில் இந்த இரண்டு பாலங்களும் மிகுந்த ஆபத்தைச் சந்திக்கும் அபாயம் உள்ளது. மேலும், கல்பாலத்தின் கீழே போக்குவரத்து இருக்கும் தரைப்பாலமும் முற்றிலும் மூழ்கும் பேராபத்தும் இருக்கின்றது.

இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் நம்மிடம் பேசுகையில், ``சோழவந்தான், திருவேடகம் பகுதியிலும் இதேபோலத் தடுப்பணை கட்டி, இப்போது பராமரிப்பின்றி வீணாகக் கிடக்கின்றது. தற்போது நகர்ப்பகுதியில் கரைகள் குறுகலாய் இருக்கும் இந்த இரு இடங்களிலும் தடுப்பணையைக் கட்டுவது, மாநகராட்சியின் தவறான முன்னுதாரணம். வற்றாத ஜீவநதியில்தானே தடுப்பணை தேவை. வைகை ஆற்றில் வெள்ளத்தின்போதுதான் தண்ணீரே வரும். அப்படி இருக்கும்போது, இங்கே தடுப்பணையே தேவையில்லைங்க" என்றார். மேலும், இந்தப் பணிகளைத் தடுத்து நிறுத்தக்கோரி வழக்குத் தொடுக்க உள்ளதாகவும் அவர் நம்மிடம் தெரிவித்தார். சித்திரைத் திருவிழாவுக்குள் முடிவடைய வேண்டும் என அவசரகோலத்தில் பணிகள் நடப்பதாகவும், இதனால் கட்டுமானங்கள் உறுதித்தன்மை பெறுமா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர், இந்த இயக்கத்தினர்.

``காமராஜர் காலத்தில் வைகை அணை கட்டியபோது, 30 அடிக்கு நீர் இருந்தாலே குறுகிய அளவிற்கு நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கும்படி `மெல்லிய நீரோட்டத்து'க்கு உத்தரவிட வேண்டும் என்பது ஜி.ஒ.வாகவே உள்ளது. இதனால் தொடர்ந்து நீர்த்தடம் இருந்து, நிலத்தடி நீருக்கு வழிவகுக்கும் என்ற தொலைநோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முறையை இப்போதைய பொதுப்பணித்துறையினரும் ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், வேண்டாத இந்தத் தடுப்பணைகளை வேகவேகமாகக் கட்டுகின்றனர். `ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறீர்கள்?' எனத்தான் கேட்கத் தோன்றுகிறது" என்கிறார், வழக்கமாக அந்த ஆற்றுப்பகுதி வழியே வாக்கிங் செல்லும் ஒரு பெரியவர்.

பொதுவாக, ஊருக்கு வெளிப்புறத்தில்தான் தடுப்பணைகள் அமையும். இவ்வாறு நகரின் மையப் பகுதியில் இதை அமைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் எனப் பொரிந்து தள்ளுகின்றனர், அப்பகுதிவாழ் மக்கள். 'தடுப்பணைக்கான காரணமே ஸ்டிராங்காக இல்லையே, தடுப்பணை எப்படி ஸ்டிராங்காக இருக்கும்?' என ரைமிங்காய்ச் சொல்லி புலம்பித் தவித்தபடியே செல்கின்றனர், அப்பகுதி வாகன ஓட்டிகள்.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வத்திடம் பேசினோம். ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்தப் பணி நடைபெறுகிறது. கட்டுமானங்களில் எந்தக் குறையும் இருக்காது. திருவிழா ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடக்கும். இந்தப் பணி மற்றொருபுறம் நடந்து கொண்டிருக்கும். அவசரகதியான வேலையெல்லாம் இல்லை. ஓராண்டுக்குள் பணியை முடிப்பதுதான் திட்டம். தரைப்பாலம், மேம்பாலங்களுக்கு ஒண்ணும் ஆகாது. கரைகள் மேம்படுத்தப்பட்டதும், அதில் பூங்கா வரப்போகுது" என்றார்.

அணைகளைத் தூர்வாரும் பெரும் பணிகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதிகாரிகளின் நீர்மேலாண்மை ஆசையை அங்கே வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும். அவசியமான பணிகளும், அதுதான்!