Published:Updated:

இளநீர் சுவையும் கெட்டுப் போச்சுங்க...!

சீரழிந்து கிடக்கும் பாலாறு

இளநீர் சுவையும் கெட்டுப் போச்சுங்க...!

சீரழிந்து கிடக்கும் பாலாறு

Published:Updated:
##~##

'பாலாறும் தேனாறும் ஓடவைப்போம்...’ என்று ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் வாக்குறுதிகள் தூள் பறக்கும். ஆனால் ஓடிக் கொண்டிருந்த பாலாறு... பாழாறாகிப் போச்சே என்று அங்கலாய்க்கிறார்கள் வேலூர் மக்கள். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் தொழிற் சங்க வேலூர் மாவட்டச் செயலாளர் கே.டி.ரவி வாணன், ''கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தின் நந்தி மலையில் ஊற்றெடுத்துச் சிற்றாறாக வரும் பாலாறு, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழக எல்லைக்குள் நுழைகிறது. வழியில் பல துணை ஆறுகளுடன் ஒன்றிணைந்து 368 கிலோ மீட்டர் பயணப்பட்டு செங்கல்பட்டின் உய்யாழிக்குப்பம் அருகே வங்காளவிரிகுடாவில் கலக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இளநீர் சுவையும் கெட்டுப் போச்சுங்க...!

கி.பி. 1857-ல் ஆற்காடு நகருக்குக் கிழக்கில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் வாலாஜாப்பேட்டைக்கு அருகில் பாலாற்றின் குறுக்கே அணை ஒன்று கட்டப்பட்டது. இங்கிருந்து காவேரிப்பாக்கம், பூண்டி, மாமண்டூர் ஏரிகளுக்கு நீர் பிரித்து அனுப்பப்படுகிறது. அந்த ஏரிகளின் பாசனம் பெறும் விவசாய நிலங்களும் அணைக் கட்டுக்கு அருகில் உள்ள சாத்தம்பாக்கம், குடிமல்லூர், திருமலைச்சேரி போன்ற சுற்று வட்டாரக் கிராமத்து விவசாய நிலங்களும் விளைச்சலால் செழிப்போடு விளங்கின.

இளநீர் சுவையும் கெட்டுப் போச்சுங்க...!

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கர் நாடக மாநிலத்தில் பாலாற்றின் தண்ணீர் வரத்துத்

இளநீர் சுவையும் கெட்டுப் போச்சுங்க...!

தடுக்கப்பட்டுவிட்டது. 1992-க்குப் பிறகு பாலாற்றில் நீர்வரத்து குறைந்து போய், இப்போது முற்றிலும் மோசம்.

இந்த ஆற்றின் கரையோர நகரங்களில் தோல் பதனிடும் தொழில் பல ஆண்டுகளாகவே நடை பெற்று வருகிறது. பழங்காலத்தில் தோல் பதனிட மரப்பட்டைகள், கடுக்காய் கொட்டைகள் போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டுதான் தோல் பதனிட்டார்கள். அதனால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இப்போது 200-க்கும் மேற்பட்ட ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ரசாயனக் கழிவுகள் எல்லாமே பாலாற்றில்தான் திருப்பி விடப்படுகிறது. இதுதவிர ஒவ்வொரு நாளும் ஏராளமான திடக் கழிவுப் பொருட்களும் பாலாற்றில் குப்பைகளாகக் கொட்டப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் நச்சுத்தன்மை அடைந்து பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்கள் களர்நிலங்களாக மாறிவிட்டன.

விளைநிலங்களின் பாதிப்பைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் குடிநீரும் சுவை மாறி மாசுபட்டுவிட்டது. நகரங் களைப் போல சுற்று வட்டார கிராம மக்களும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கிக் குடிக்கவேண்டிய அவல நிலைக்கு ஆளாகிவிட்டனர். ஒரு பக்கம் ரசாயனக் கழிவுகளால் பாலாறு பாழாகிப் போகிறது என்றால் இன்னொரு பக்கம் மணல் கொள்ளை ஜோராக நடக்கிறது.

கரையோரம் நின்று பார்த்தால் கண் ணுக்கு எட்டிய தூரம்வரை மணல் அள்ளிச் செல்லும் லாரிகள்தான் ஆயிரக்கணக்கில் அணிவகுத்து நிற்கின்றன. நீர்வரத்து தடைபட்டு வறண்டு கிடந்தாலும் மழைக் காலங்களில் ஆற்று மணல் மழை நீரை உள்வாங்கி நிலத்தடியில் சேமித்துக் கொள் ளும்.

இளநீர் சுவையும் கெட்டுப் போச்சுங்க...!

ஆனால் இங்கே பொக்லைன், ஜே.சி.பி. போன்ற கனரக இயந்திரங்கள் கொண்டு அளவுக்குமீறி மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்ப் பிடிப்பு முற்றிலும் அழிந்துபோகும் அபாயத்தில் இருக்கிறது.

இந்தியாவின் மூத்த ஆறுகளில் ஒன்று என்று பாலாற்றைச் சொல்லுவதற்குக் காரணம் உண்டு. அதாவது சுமார் 100 அடி ஆழம் வரை பாலாற்றில் மணல் சுரங்கம் போன்று இருக்கும். இந்த மணல் சுரங்கத்தைத்தான் அடி வரை தோண்டுகிறார்கள். ஒரு அடி மணல் உருவாவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகின்றன என்கிறது ஆய்வுகள். ஆனால், மணல் கொள்ளையர்களோ ஆற்று மணலை கணக்கில்லாமல் அள்ளிக்குவித்து பணமாக்கி விடுகிறார்கள். தோழர் நல்லக்கண்ணு, தாமிரபரணி ஆற்றில் பொக்லைன் போன்ற கனரக இயந்திரங்கள் கொண்டு மணல் அள்ளுவதைத் தடுக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடை வாங்கியதைப்போல பாலாற்று மணல் கொள்ளையைத் தடுக்க நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றையும் தொடுக்க இருக்கிறோம்!'' என்று கொந்தளித்தார் ரவிவாணன்.

பாலாற்றின் கரையோர கிராமமான சாத்தம்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி சிவா மற்றும் மனித உரிமைக் கழகத்தைச் சேர்ந்த சிவகிருஷ்ணா ஆகியோர், ''பாலாற்றில் மணல் குவாரி தொடங்கப்படுவதற்கு முன்பு, நீர்வரத்து இல்லாத போதும் ஆற்றில் மேய்ச்சலுக்கு ஏற்றபடி தாவரங்கள் பசுமையாக வளர்ந்து நிற்கும். சாத்தம்பாக்கம், சக்கரமல்லூர், எசையனூர், பெருங்கால் மேடு, திருப்பாற்கடல், அத்திப்பட்டு, கடப்பேரி, சுமைதாங்கி போன்ற சுற்று வட்டாரத்து விவசாயிகள் தங்களின் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு பயனடைவார்கள். இன்று மணல் கொள்ளையால் பாலாற்றின் பசுமையே அழிந்துவிட்டது. கால்நடைகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டன.  

அரசாங்கத்தின் மூலம் ஒரு யூனிட் மணல் 313 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், அனுமதி இன்றி ஆற்றில் இருந்து தனியாரால் அள்ளி வரப்படும் மணல் ஆற்றோரம் சேமித்து வைக்கப்பட்டு அங்கிருந்து ஒரு யூனிட் 1500ரூபாய்க்கு விற்கப் படுகிறது. அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் அனுமதியின்றி அதிகளவு மணல் அள்ளப்படுகிறது. ஒருகாலத்தில் சாத்தம்பாக்கம் கிராமத்து இளநீர் என்றால், சுற்று வட்டாரங்களில் விரும்பி வாங்கிக் குடிப்பார்கள். இப்போது இளநீரின் சுவையும் மாறிப்போய், சாத்தம்பாக்கம் இளநீரா? வேண்டவே வேண்டாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது!'' என்று ஆதங்கத்தோடு சொன்னார்கள்.

பாலாறு விவகாரத்தை கலெக்டர் அஜய் யாதவிடம் கொண்டு சென்றோம். ''நான் இப்போதுதான் பொறுப்புக்கு வந்திருக்கிறேன். அதனால் இப்போது நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று உறுதி அளித்தார்.

சொன்னதை செய்யட்டும்... பாலாறு பிழைக்கட்டும்!

- ரியாஸ்