Published:Updated:

`போட்டோ எடுக்காதீங்க அதிகாரிகள் திட்டுவாங்க' - பிரசாரங்களுக்கு மத்தியில் ஒலித்த வேதனைக் குரல்!

`போட்டோ எடுக்காதீங்க அதிகாரிகள் திட்டுவாங்க' - பிரசாரங்களுக்கு மத்தியில் ஒலித்த வேதனைக் குரல்!
`போட்டோ எடுக்காதீங்க அதிகாரிகள் திட்டுவாங்க' - பிரசாரங்களுக்கு மத்தியில் ஒலித்த வேதனைக் குரல்!

ஏபரல் 18ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத்திற்கும்,18 தொகுதிகளின் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பரபரப்பாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.அந்தச் சமயத்தில் ஒருவருக்கொருவர் குறை கூறி விமர்சனம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எங்கள் கட்சிக்கு வாக்களித்தால் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்படும் எனச் சிலவற்றை உதாரணமாகக் கூறி கலர் கலர் வாக்குறுதிகளை மக்களிடத்தில் கூறி வருகின்றனர். 

இந்த கோடை காலம் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் அனலை வெளிப்படுத்தி வருகிறது. காலையிலேயே வெயில் தன் உக்கிரத்தைக் காட்ட தொடங்கி விடுவதால் வெயிலைத் தாங்க முடியாமல் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் மாலை நேரத்திலேயே பிரசாரத்தை செய்து வருகின்றனர். ஆனால் உழைக்கும் மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள் நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது இன்னும் அவல நிலையைத் தொடர்வது என்பது எந்த வகையில் நியாயம் எனக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அவர்களிடத்தில் பேசினோம், ``தஞ்சாவூரின் மையப் பகுதி என்பது ஆற்றுப் பாலம். இந்த பகுதியை ஒட்டி சின்ன சந்தில் உள்ளது செட்டியார் காலணி. இந்த காலணிக்குள் ஓடும் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுக் கழிவு நீர் வெளியே ஓடுகிறது. உடனே மக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்குத் தகவல் கொடுக்கிறார்கள். அதைச் சரி செய்ய மூன்று ஆண்கள் வருகின்றனர். கடும் வெயில் கழிவு நீர் துர்நாற்றம் குமட்டும் அளவிற்கு இருந்ததால் பத்து அடி தொலைவில் சாலையில் சென்றவர்களே மூக்கை மூடிக் கொண்டு சென்றனர். வெளியே ஸ்பீக்கர் கட்டிய ஆட்டோக்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என ஒலி பெருக்கியில் பல தலைவர்களின் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

இந்த நிலையில் மூன்று பேரில் ஒரு நபர் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் பாதாள சாக்கடைக்குள் தன் வயிற்றையும் குடும்பத்தையும் காப்பதற்காக இறங்குகிறார். கழுத்தளவு சாக்கடை கழிவில் அடைப்பைக் கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே அந்த கழிவிற்குள் உள்ளே தலை மூழ்கித் தேடுகிறார். பின்னர் மண் வெட்டிக் கொண்டு கழிவுகளை அள்ளித் தருகிறார். கிட்டத்தட்ட அரை நாள் இந்தப் பணியை செய்கிறார் அவர். அவரை பற்றி கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்க முடியவில்லை. டிஜிட்டல் இந்தியா என்று சொன்னார்கள் ஆனால் இவர்களின் நிலையைப் பாருங்கள்.

பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி எத்தனையோ உயிர்கள் பலியாகியுள்ளன. ஆனாலும் பாதுகாப்பு கவசம் எதுவும் இல்லாமல் சுத்தம் செய்ய வைத்து இவர்கள் மீது அலட்சியம் காட்டுகிறது அரசு. இதைப் போட்டோ எடுக்க முற்பட்ட போது கூடச் சார் போட்டோ எடுக்காதீங்க அதிகாரிகள் எங்களைத் திட்டுவார்கள் எனக் கெஞ்சுகிறார்கள். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களையும் இது போன்ற தொழிலாளர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இவர்களின் நிலை மாறும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். அவைதான் உண்மையான மாற்றம் இவர்களை நினைத்துப் பாருங்கள் அரசியல் தலைவர்களே" என உருக்கமாகத் தெரிவித்தனர்.