Published:Updated:

சப் ஜெயிலுக்குள் நுழைந்த பாம்பு; பதறியடித்து ஓடிய போலீஸார்! - ஈரோடு சிறையில் நிகழ்ந்த சம்பவம்

சப் ஜெயிலுக்குள் நுழைந்த பாம்பு; பதறியடித்து ஓடிய போலீஸார்! - ஈரோடு சிறையில் நிகழ்ந்த சம்பவம்
சப் ஜெயிலுக்குள் நுழைந்த பாம்பு; பதறியடித்து ஓடிய போலீஸார்! - ஈரோடு சிறையில் நிகழ்ந்த சம்பவம்

`பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்’ என்று சொல்வார்கள். ஆனால், போலீஸாரும் நடுங்கிப் போவார்கள் என்ற வகையில் ஈரோட்டில் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தினுள் அமைந்திருக்கிறது ஈரோடு கிளைச் சிறை. இங்கு சுமார் 40 கைதிகளை அடைத்து வைக்கும் வகையில் வசதிகள் இருக்கிறது. ஈரோடு தாலுகா அலுவலகம் மற்றும் அதனையொட்டியே அமைந்துள்ள ஈரோடு எஸ்.பி அலுவலகம் ஆகிய பகுதிகளில் மரங்கள், செடிகள் எனப் புதர்போல மண்டிக் கிடக்கின்றன. இந்தப் பகுதிகளில் அவ்வப்போது `பாம்புகள்’ எட்டிப் பார்ப்பது வழக்கம். அப்படியிருக்க நேற்று இரவு ஈரோட்டில் சுழன்றடித்த காற்றுடன் சில மணி நேரங்கள் பெய்த மழை, உஷ்ணத்தைக் கிளப்பி அடித்ததோடு, ஈரோடு கிளைச்சிறை அருகே புதர்போல மண்டியிருந்த செடி, கொடிகளுக்கு மத்தியிலிருந்து பாம்பு ஒன்றையும் கிளப்பி சிறைக்குள் அனுப்பியிருக்கிறது.

காலையில்தான் சிறைக் கண்காணிப்பாளரான அபுதாஹிர் கண்களில் அந்தப் பாம்பு சிக்கியிருக்கிறது. சுமார் 4 அடி நீளத்திற்கு முரட்டாக இருந்த பாம்பினைப் பார்த்து பதறிப் போன சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் உடனிருந்த போலீஸார், ‘சார், ஜெயிலுக்குள்ள மலைப்பாம்பு புகுந்துடுச்சிங்க’ என ஈரோடு தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்குத் தீயாக போன் மூலம் தகவல் சொல்லியிருக்கின்றனர். இதற்குள் நாலாபக்கமும் தகவல் பரவ, ஒரு பெரும் கூட்டமே கூடிவிட்டது. 

பதறியடுத்து ஓடிவந்த தீயணைப்புத் துறையினர், பாம்பைக் கண்டதும், கடும் கோபமாகிப் போயினர். ஏனென்றால் சிக்கியது மலைப்பாம்பு அல்ல, மண்ணுளிப் பாம்பு... இந்தக் கூத்தைக் கண்டு கோபம் கொள்வதா! சிரிப்பதா! என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகள், பத்திரமாக பாம்பைப் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆனால், ஈரோடு தாலுகா அலுவலகம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தைச் சுற்றி மண்டியிருக்கும் செடி, கொடிகளில் விஷத்தன்மையுள்ள ஏகப்பட்ட பாம்புகள் இருக்கின்றன. இந்த விவகாரத்திற்குப் பிறகாவது, வளாகத்தைச் சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்போம்...