Published:Updated:

மீண்டும் புனிதவதி!

அழைத்து வந்த 87 வயது முதியவர்

பிரீமியம் ஸ்டோரி
##~##
மீண்டும் புனிதவதி!

ரு படத்தை முதல் முறை வெளியிடுவதற்கே தயாரிப்பாளர்கள் படாதபாடு படவேண்டி இருக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக ரிலீஸ் ஆகிறது, 'உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம்! 

ஈழத்தில் சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட 13 வயது புனிதவதி என்னும் தமிழ் சிறுமியை மைய மாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், 'மசாலா’ வாசனையில் மயங்கிக் கிடந்த இந்த நாட்டு ரசிகனுக்கு  படம் வந்ததும் தெரியவில்லை; போனதும் தெரியவில்லை. ஈழத்தில் தமிழச்சிக்கு நடந்த கொடுமையை தோலு ரித்துக் காட்டிய இந்தப் படம், தமிழகத்தில் வெற்றி பெறாததை தமிழ் உணர்வாளர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் தமிழ் உணர்வாளர்களின் முயற்சியால்,   மீண்டும் திரைக்கு வந்து இருக்கிறது 'உச்சிதனை முகர்ந்தால்’.

கடந்த வாரம் சென்னையில், 'இருப்பாய் தமிழா நெருப்பாய்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. திரைப்படத்தின் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இசை அமைப்பாளர் டி.இமான் ஆகியோர் இந்தப் படத்தை திரும்பவும் வெளியிடுவது குறித்துப் பேசினார்கள்.

மீண்டும் புனிதவதி!

நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன், ''கற்பு பற்றிப் பேசும் தமிழ்ச் சமூகம், சிங்களவனின் செயலால் இழிந்துப் போய் நிற்கிறது. கற்பின் அரசியாகப் போற்றப்படும் கண்ணகி கோயிலில் வைத்தே ஒரு தமிழச்சி கற்பழிக்கப்படுகிறாள். அன்றே கற்புக்கான புனிதத்தை சிங்களவன் சிதைத்து விட்டான்.

இதற்கு முன்பு இயக்குநர் புகழேந்தி ஈழம் பிரச்னை தொடர்பான 'காற்றுக்கென்ன வேலி’ என்ற படத்தை எடுத்தபோதும் அவ்வளவு சுலபத் தில் வெளியிட முடியவில்லை. நீதிமன்றம் வரை சென்று போராடிய பின்பே வெளியிட முடிந்தது. என்னளவில் புகழேந்தியை ஒரு போராளி என்று தான் சொல்வேன். இந்தியாவின் தேசப்பிதா மகாத்மாவைக்கூட ஒரு ஆங்கிலேயன்தான் படம் எடுக்க வேண்டி இருக்கிறது. ஒரு தமிழ்ச் சிறுமிக்கு ஈழத்தில் நடந்த அவலத்தைப் பதிவு செய்த இந்தப் படத்தை பார்ப்பது தமிழனின் கடமை. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்...'' என்றார் உணர்ச்சிப் பிழம்பாக!

மீண்டும் புனிதவதி!

பேசத் தொடங்கையிலேயே இயக்குநர் புகழேந்தி தங்கராஜுக்கு கண்ணீர் முட்டியது. ''இதற்கு முன்பு 'காற்றுக்கென்ன வேலி’ படத்தை உண்ணாவிரதம் இருந்து... நீதிமன்றத்துக்கு சென்றுதான் வெளியிட முடிந்தது. 'உச்சிதனை முகர்ந்தால்’ படத்தின் விளம்பரத்தைக்கூட சில பத்திரிகைகள் வாங்கவில்லை. இந்தப் படம் வந்துவிடக்கூடாது என்பதில் சில சக்திகள் தீவிரமாக இருக்கின்றன. இரண்டாவது முறையாக இந்தப் படத்தை வெளியிடக் காரணமே 87 வயது முதியவர் ஒருவர்தான். சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்த அவர், புனிதவதியாக நடித்த நீனிகாவின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார். அவர் கண்களில் கண்ணீர் முட்டி நிற்கிறது. அவர் எதுவும் பேசவில்லை. பேசினால் அழுது வெடிப்பார் என்பது எனக்கும் தெரிகிறது. அவருக்கும் தெரிகிறது. சிறிது நேரம் கழித்து அவர், 'ஏன் இந்தப் படம் தமிழகத்தில் ஓடவில்லை? படத்தை மீண்டும் வெளியிடுங்கள். என் மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது’ என்றார். அவர் சொன்ன வார்த்தைகளே மீண்டும் இந்தப்படம் வெளிவரக் காரணம். அந்த முதியவர் வேறு யாரும் இல்லை. மூத்த தோழர் நல்லகண்ணுதான் அவர்!

சில நாட்களுக்கு முன், லண்டனில் இருந்து இளைஞர் ஒருவர் தொலைபேசியில் என்னிடம் பேசினார். ' படத்தைப் பார்த்தேன். இந்தப் படம் தமிழகத்தில் ஓடவில்லையாமே...’ என்று தாங்கமாட்டாமல் கதறி அழுதான். என் படம் தோல்வி அடைந்தபோதுகூட நான் அழவில்லை. அவன் பேசியபோதுதான் முதல் முறையாக அழுதேன். இந்த முறை தமிழ் மக்களாகிய உங்களை நம்பி படத்தை வெளியிடுகிறேன். தமிழர்கள் வெற்றி பெற வைப் பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது...'' என்றார் தழுதழுத்தபடி!

இசை அமைப்பாளர் இமான், ''ஈழத்தில் மக்கள் துன்பப்படும்போது என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்று நினைக்கும்போது எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஆனால், இந்தப் படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் என் மக்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் சிறு தொண்டு செய்துள்ளேன் என்ற திருப்தி கிடைத்துள்ளது. என் இசை உலக வாழ்க்கைக்கு இதுபோதும்...'' என்றார் நெகிழ்வுடன்!

ஈழத்தின் சோகத்தைப் பார்க்க வருவானா தமிழன்?

   - பொ.ச.கீதன்

             படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு