Published:Updated:

முகத்தில் கரி பூசிட்டாங்க...

நாகூர் துறைமுகப் போராட்டம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
முகத்தில் கரி பூசிட்டாங்க...

'எங்கள் பகுதி மக்களின் வாழ்க்கையைக் குலைத்து விட்டது தனியார் துறைமுகம். இதனை எதிர்த்து நடக்கும் எங்கள் போராட்​டத்தை வெளி உலகுக்குக் கொண்டு வாருங்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) நாகூரில் இருந்து ஓர் அழைப்பு. 

நாம் சென்ற நேரத்தில் இந்த விவகாரத்துக்காக கடை​களை அடைத்துவிட்டு, நாகை ஆட்சியர் அலுவலகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் முனுசாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த நாகூர் மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் அஜ்மத் தாஜூதீனிடம் பேசினோம்.

''ஆந்திராவைச் சேர்ந்த ஜி.ஆர்.கே.ரெட்டி என்பவர் எங்கள் பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு துறைமுகத்தைத் தொடங்கினார். இந்தப் பகுதியில் தொழில்வளம் பெருகும். பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லித்தான் துறைமுகத்தைத் தொடங்கினார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறும்போது, வெறும் ஐந்து சதவிகித அளவுக்கு நிலக்கரி இறக்குமதியும் மீதம் 95 சதவிகிதம் மற்ற தொழில்களும் நடக்கும் என்று சொல்லி அனுமதி பெற்றார்கள். ஆனால், இப்போது நிலக்கரியைத் தவிர வேறு எதுவும் இறக்குமதி செய்யவில்லை'' என்று நிறுத்தினார்.

முகத்தில் கரி பூசிட்டாங்க...

அவரைத் தொடர்ந்து பேசினார் சங்கத்தின் செயலாளர் ஜபருல்லா. ''கப்பலில் வரும் நிலக்கரியை அப்படியே திறந்த வெளியில் கொட்டி வைக்கிறார்கள். அது காற்றில் பரவி இந்தப் பகுதி மக்களுக்கு சுவாசப் பிரச்னைகளை உருவாக்குகிறது. ஏராளமான குழந்தைகள் சுவாசம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். தரையிலும் கரித்தூள் பரவி இருப்பதால், நடந்தாலே கால்களில் ஒட்டிக்கொள்கிறது. கடலிலும் கரித்தூள் படர்ந்திருக்கிறது. அதனால் மீன்கள் செத்துப் போகின்றன. வலைகள் வீணாகின்றன. இப்படியே போனால் இந்தப் பகுதி மக்களுக்கு 10 வருடங்கள் ஆயுள் குறைவுதான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அரசிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. வேலை தர்றோம்னு சொல்லி எங்க முகத்தில் கரியைப் பூசிட்டாங்க'' என்றார் ஆவேசமாக.
 

முகத்தில் கரி பூசிட்டாங்க...

நிலக்கரி இறக்குமதியை எதிர்த்து, கடந்த ஆண்டே சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம்

முகத்தில் கரி பூசிட்டாங்க...

நடத்தினார்கள். அப்போது, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையில், 'இன்னும் எட்டு மாதத்துக்குள் கரித்தூள் வெளியே பறக்காத வகையில் தொழில்நுட்பம் கொண்டு வந்துவிடுகிறோம். நிலக்கரி இறக்குமதியையும் காலப்போக்கில் குறைத்து விடுகிறோம்’ என்று துறைமுக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். அதனால் இத்தனை நாட்களும் போராட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், கொடுத்த வாக்குறுதியை துறைமுக நிர்வாகம் காப்பாற்றாத காரணத்தால், மீண்டும் போராட்டக் களத்துக்கு வந்திருக்கிறார்கள்.

''இந்தத் துறைமுகம் புதுச்சேரி அரசிடம் அனுமதி பெற்றது. காரைக்கால் பகுதிக்கு உள்ளேயே அமைய வேண்டியது. ஆனால் சாமர்த்தியமாக புதுவையும் தமிழகமும் சந்திக்கும் எல்லைப் பகுதியான வாஞ்சூரில் அமைத்திருக்கிறார்கள். அதனால், 'துறைமுகம் காரைக்காலில் அமைந்திருக்கிறது. எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை’ என்று கையை விரித்து விடுகிறது நாகை மாவட்ட நிர்வாகம். ஆனால், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சில துறைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அனுமதி நாகை மாவட்டத்தின் கீழ்தான் வருகிறது. நாகூரில் உள்ளவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறர்கள். அதனால் நாகை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, நிலக்கரி இறக்குமதியைத் தடைசெய்ய வேண்டும். முன்பு இங்கிருந்து அந்தமான் தீவுகளுக்கு மணல் ஏற்றுமதி செய்தபோது, அப்போதைய மாவட்ட ஆட்சியர் முனியநாதன் துறைமுகத்துக்குள் நுழைந்து மணல் ஏற்றிய கப்பலையே சீல் வைத்தார். காரைக்கால் பகுதிக்கு தமிழ்நாட்டில் இருந்து மணல் ஏற்றக்கூடாது என்று உத்தரவும் போட்டார். அதேபோல் இப்போதும் கலெக்டர் உள்ளே போய் நிலக்கரியால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆய்வு செய்து நிலக்கரி இறக்குமதி செய்ய துறைமுகத்துக்கு தடைவிதிக்க வேண்டும்'' என்கிறார் மக்கள் நலச்​சங்கத்தின் துணைச் செய​லாளர் காஜா ஷமிருதீன்.

இந்தத் துறைமுகம் குறித்து ஆய்வு செய்திருக்கும் அ.மார்க்ஸின் உண்மை அறியும் குழு, ''மக்கள் வசிக்கும் இடங்களில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு இப்படிப்பட்ட துறைமுகங்கள் இருக்கக்கூடாது என்பதைத் திட்டமிட்டு மறைத்து, மக்களை ஏமாற்றி இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது'' என்று குற்றம் சாட்டியுள்ளது.

துறைமுகத்தின் செய்தித் தொடர்பாளரிடம் இந்தக் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டோம். ''இன்னும் 10 நிமிடங்களில் பேசுகிறேன்'' என்றவர் அடுத்து எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. விளக்கம் கொடுத்தால் பிரசுரம் செய்யத் தயாராகவே இருக்கிறோம்.

நாகை மாவட்ட ஆட்சியர் முனுசாமியிடம் பேசினோம். ''மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி மீறப்படுகிறது என்று மக்கள் புகார் சொல்லி இருக்கிறார்கள். அது பற்றி விரிவாக ஆய்வு செய்து அரசிடம் தெரிவிப்போம். மக்களின் பாதிப்புகள் குறித்தும் அரசுக்குத் தெரிவிப்போம். அரசின் முடிவை செயல்படுத்துவோம்'' என்று உறுதி கொடுத்தார்.

துறைமுகமே வேண்டாம் என்று மக்கள் சொல்லவில்லை. மக்களைப் பாதிக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள். இதனை நிறைவேற்ற வேண்டியது நிர்வாகத்தின் கடமை!  

- கரு.முத்து  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு