Published:Updated:

''சாகும்வரை வைகோவுடன்..''

சொன்னதைச் செய்த நடராஜன்

பிரீமியம் ஸ்டோரி
##~##
''சாகும்வரை வைகோவுடன்..''

வைகோவை சமீபத்தில் பெரும் துயரில் ஆழ்த்தியது, திருச்சி புறநகர் மாவட்​டச் செயலாளர் கிளியநல்லூர் நடராஜன் மரணம்தான். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடராஜன் கடந்த 16-ம் தேதி இறந்தது விடவே, அஞ்சலி செலுத்த ஓடோடி வந்த வைகோ, சடங்குகள் முடியும் வரை அங்கேயே இருந்தார். 

மறைந்த நடராஜனைப் பற்றி சிலாகித்துப் பேசும் திருச்சி மாவட்ட ம.தி.மு.க-வினர், ''அண்ணன் தி.மு.க-வில் மாவட்ட துணைச் செயலாளராக இருந்த​போதுதான் வைகோ தி.மு.க-வை விட்டு வெளியேறி புதுக்கட்சியைத் தொடங்கினார். அப்போது, வைகோவுடன் தி.மு.க-வில் இருந்து வெளியேறிய நடராஜன், 'உங்கள் கரம் பற்றினேன். சாகும்வரை உங்களுடன்தான் இருப்​பேன்’ என்றார். அவர் சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றி விட்டார்.  

''சாகும்வரை வைகோவுடன்..''

சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் இரண்டு முறையும், ம.தி.மு.க. சார்பில் மூன்று முறை போட்டி​இட்டும் ஒருமுறை கூட நடராஜன் வெற்றி பெறவில்லை என்பதுதான் பெரும் சோகம். அதிலும், கடைசியாக தொட்டியம் தொகுதியில் 52 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. வைகோவின் எண்ண ஓட்டங்களை துல்லியமாக அறிந்தவர் நடராஜன். அதே நேரத்தில் தனது கருத்துகளையும் அச்சம் இல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்வார். இன்னும் சொல்லப்போனால், அன்பில் தர்மலிங்கத்துடன் சமகால அளவில் அரசியல் செய்தவர் நடராஜன். திருச்சியில் இவரது முயற்சியால்தான் ம.தி.மு.க-வுக்கு கட்சி அலுவலகம் கட்டப்பட்டது. அதன்பின்புதான் மற்ற கட்சிகள் இங்கு அலு​வலகக் கட்டடம் கட்டின. ஒருமுறை இவர் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவ​மனையில் சேர்க்கப்பட்டார். அப்போது வைகோ, இவரது சிகிச்சைக்கான செலவுத் தொகை​யைக் கட்சியில் இருந்து செலுத்தினார். சிகிச்சை முடிந்து வந்த நடராஜன், 'கட்சியில் எவ்வளவோ பேர் கஷ்டப்படுபவர்கள் இருக்க... எனக்காக எதற்குப் பணம் கட்டினீர்கள்’ என்று வைகோவுடன் வாக்கு​வாதம் செய்து, அந்தப் பணத்தை கட்சி நிதிக்காக திருப்பிக் கொடுத்து விட்டார்'' என்று நெகிழ்கிறார்கள்.

இப்போது திருச்சி ம.தி.மு.க-வில், அடுத்த புறநகர் மாவட்டச் செயலாளருக்கான போட்டி தொடங்கி ​விட்டது. ஒன்றியச் செயலாளர்கள் மைக்கேல்​ராஜ், துரைராஜ், சேரன் மற்றும் மாநில தீர்மானக் குழுச் செயலாளர் கொப்பம்பட்டி தமிழ்மாறன் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இந்த வாரம் விடை தெரிந்து விடலாம்!

- 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு