Published:Updated:

பழங்குடியினரை பழி வாங்கும் ஆட்சிகள்!

சேலம் கடுகடுப்பு

பிரீமியம் ஸ்டோரி
##~##
பழங்குடியினரை பழி வாங்கும் ஆட்சிகள்!

டமாநிலங்களில் பழங்குடியினர்தான் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அத்தகைய கொந்தளிப்புக்கு சேலமும் அடித்தளம் அமைக்கப் போகிறது! 

தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 29-ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்தது. அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தபஸ்சிங்கா மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் சௌந்தர்ராஜன் பேசியபோது, ''மலைவாழ் மக்கள் புதிதாக எந்த சலுகைகளையும் கேட்கவில்லை. இந்திய அரசியல் அமைப்பின்படி உரிமையைத்தான் கேட்கிறார்கள். அரசின் திட்டங்கள் எதுவும் மலைவாழ் மக்களுக்குச் சென்று சேருவது இல்லை. உலகமயமாக்கல் கொள்கையால் கடுமையாக பாதிப்பு அடைந்திருக்கிறது இந்தியா. அதிலும் அதிகப் பாதிப்பு பழங்குடி மக்களுக்குத்தான். குடியரசு தினத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் ஒருவரை தேசியக்கொடி ஏற்ற அனுமதிக்கவில்லை என்பதுதான் இந்தியா. எந்த அவதார புருஷனும் நம்மை வந்து காப்பாற்றப் போவதில்லை. நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்'' என்றார்.

பழங்குடியினரை பழி வாங்கும் ஆட்சிகள்!

அவரைத் தொடர்ந்து பேசிய அரூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் துணைத் தலைவருமான டில்லிபாபு, ''தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் பழங்குடி இன மக்களை பழி வாங்கும் கட்சிகள்தான். வாச்சாத்தி வழக்கில் அனைவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறது. ஆனால், இன்று வரை அதைப் பற்றி ஜெயலலிதா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கலைஞர் திடீரென்று வாச்சாத்தி மக்களுக்கு நிதி அளிக்க முன்வந்தார். ஆனால், நாங்கள் அதை வாங்காமல் திருப்பி அனுப்பினோம். பழங்குடி மக்களுக்கு வீடு, நிலம் பட்டா தரக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்ததே தி.மு.க-தான்'' என்று அனல் கக்கினார்.

மாநாட்டின் முடிவில் உரையாற்றிய தபஸ்சிங்கா, ''மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கு அரசு, இலவச நிலம் வழங்கி உள்ளது. திரிபுராவில் மலைவாழ் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி இரண்டு பேரும்தான் மாறி மாறி ஆட்சி புரிகிறார்கள். ஆனால், பழங்குடியினருக்கு இருவருமே எதுவும் செய்யவில்லை. சொந்தப்பழியை தீர்த்துக் கொள்ளவே இருவருக்கும் நேரம் சரியாக இருக்கிறது. கண்டிப்பாக சோஷலிஸத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அப்போது எல்லாம் மாறிப்போகும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

                      - ம.சபரி

  படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு