Published:Updated:

சிக்கலில் கிரானைட் கிங்

மதுரை விறுவிறு

பிரீமியம் ஸ்டோரி
##~##
சிக்கலில் கிரானைட் கிங்

துரை மாவட்டத்தில் பல மலைகளையும், ஏகப்பட்ட நிலத்தையும் வளைத்துப் போட் டிருக்கும் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம், இரண்டு ஏக்கர் நிலத்தில் கைவைத்து சிக்கலில் மாட்டி இருக்கிறது. மதுரை திருமோகூர் அருகே உள்ள பூலாம்பட்டியில் உள்ள நிலத்தை பி.ஆர். பழனிச் சாமியின் மகன் சுரேஷ்குமார் அபகரித்து விட்டதாகப் புகார் கொடுத்து இருக்கிறார், இலங்கிப்பட்டியைச் சேர்ந்தராஜன்.  

அவரைச் சந்தித்தோம். 'மேலூர் தாலுக்காவில் பெரும்பாலான இடங்களை வாங்கி விட்ட பி.ஆர்.பி. நிறுவனம், அவர்களது பூலாம்பட்டி குவாரி பக்கத்தில் இருக்கும் 2.20 ஏக்கர் பரப்புள்ள எங்கள் நிலத்தையும் கேட்டார்கள். அது எங்கள் பாட்டி வீரம்மாள் பெயரில் உள்ள பூர்வீகச் சொத்து என்பதால்  மறு த்து விட்டோம். தர மறுப்பவர்களின் இடங்களை அபகரித்துக் கொடுப்பதற்கென்றே அவர்களிடம்  புரோக்கர்கள் இருக்கிறார்கள். அந்த நபர்கள், 1969-ம்

சிக்கலில் கிரானைட் கிங்

ஆண்டு இறந்து போன எங்கள் பாட்டி வீரம்மாளே நிலத்தை விற்றது போல, போலி ஆவணங்களைத் தயாரித்து 2004-ல் 'பி.ஆர்.பி.’ பழனிச்சாமியின் மகன் சுரேஷ்குமார் பெயரில் நிலத்தைப் பதிவு செய்து விட்டார்கள். வங்கிக் கடன் வாங்குவதற்காக நிலத்தின் வில்லங்கச் சான்று பெற்றபோதுதான் இந்த விஷயமே எங்களுக்குத் தெரியும். வி.ஏ.ஓ., தாசில்தார் கையெழுத்துக்களைப் போலியாகப் போட்டு, போலி பட்டா தயாரித்து, என் சகோதரிகளில் ஒருவரான ஜானகியின் போட்டோவை ஒட்டி நிலத்தை மோசடி செய்திருக்கிறார்கள். 2005-ல் ஆர்.டி.ஓ-வாக இருந்த தங்கராஜிடம் புகார் செய்தோம். அவர், பட்டாவை போலி என்று சொல்லாமல், போலியான போட்டோ ஒட்டி இருப்பதால் இந்த பட்டா ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார். போலீஸில் புகார் செய் தோம். ஒத்தக்கடை போலீஸார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் கடத்தினார்கள். கோர்ட் உத்தரவு வாங்கி வழக்குப் பதிவு செய்ய வைத்தோம். பி.ஆர்.பி-யிடம் பணம் வாங்கிக்கொண்டு, 'மிஸ்டேக் ஆப் ஃபால்ட்’ என்று கேஸை முடித்துவிட்டார் அப்போது இருந்த இன்ஸ்பெக்டர் லட்சுமணன். அதனால் நகலைக் கேட்டு விண்ணப்பித்தபோது, கேஸ் கட்டைக் காணவில்லை என்று சொல்லிவிட்டார்கள்' என்றார் ராஜன்.

சிக்கலில் கிரானைட் கிங்

அடுத்துப் பேசிய அவரது தம்பியான பாண்டியராஜன், 'அந்த கேஸ் கட்டை கண்டுபிடித்துத் தரும்படி, சென்னையில் உள்ள நீதித்துறை விஜிலென்ஸ் பிரிவுக்கு மனு போட்டோம். அவர்கள் உத்தரவு போட்டும், கேஸ் கட்டைக் கண்டுபிடிக்காமல் காலம் தாழ்த்தினர். மறுபடியும் மனு போட்டதால், 15 நாட்களுக்குள் கண்டுபிடிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தார்கள். அதன்பிறகே, ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

இதற்கிடையே, போலீஸாரால் குளோஸ் செய்யப்பட்ட வழக்கை ரீ ஓப்பன் பண்ணக் கோரி மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால் வழக்கு தாமதமானது. காரணத்தைச் சொன்னால் நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்பதால் அதைச் சொல்ல விரும்பவில்லை. மதுரை மாவட்டத்தில் எல்லாத் துறைகளிலும் அநீதி இழைக்கப்பட்டதால், கடைசி ஆயுதமாக என்னிடமிருந்த ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து டி.ஜி.பி-க்கு மனு அனுப்பினேன். சில நாட்களில் மதுரை போலீஸ் எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. 'மனுவை முழுமையாகப் படித்தேன். 100 சதவிகிதம் மோசடி என்பது உறுதியாகத் தெரிகிறது. இந்த வழக்கை ரீ ஓப்பன் பண்ணி நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றார். தனிப்படை அமைத்து, எங்கள் நிலத்தை மோசடி செய்த பவர் ஏஜென்ட் முத்துக்குமார் புரோக்கர்கள் பாண்டி, பிரபு இதற்கு உடந்தையாக இருந்த என் சகோதரியின் மகன் ஆண்டி ஆகியோரை கைது செய்திருக்கிறார்கள்' என்று நெகிழ்ந்தார்.

சிக்கலில் கிரானைட் கிங்

மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். 'சுரேஷ்குமாரை விசாரணைக்கு வரும்படி எஸ்.பி. உத்தரவிட்டதும், ஒரு படையோடு அவரது தந்தை பழனிச்சாமி, எஸ்.பி. ஆபீசுக்கு வந்தார். 'உங்களை வரச் சொல்லவில்லையே. சுரேஷ்குமாரை ஆஜர்படுத்துங்கள்’ என்று எஸ்.பி. சொல்லி விட்டார். உடனே பழனிச்சாமி, 'கண்டிப்பாக நாளைக்கு காலை 11 மணிக்கு வரச்சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால், சுரேஷ்குமார் தலைமறைவாகி விட்டார்.' என்றார்கள்.

சுரேஷ்குமார் தரப்பில் பேசிய பி.ஆர்.பி. நிறுவனத்தின் வழக்கறிஞர் பாலாஜி, 'அந்த நிலத்தை மோசடி செய்யவில்லை. ராஜன், பாண்டியராஜன், மகாராஜன், ராஜேஸ்வரி, ஜானகி என்று உடன்பிறந்த ஐந்து பேருக்குச் சொந்தமான சொத்தை, தனது சொத்து என்று ஏமாற்றி ஜானகி தரப்பினர் எங்களிடம் விற்று விட்டனர். அவர்களுக்குள் ஏற்பட்ட பண விவகாரம்தான் பிரச்னைக்குக் காரணம். நிலத்தை வாங்கிய அப்பாவி யான எனது கட்சிக்காரர் மீது எப்படி குற்றம் சுமத்த முடியும்?' என்றார்.

எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கிடம் இதுபற்றிக் கேட்டபோது, 'புகாரில் உண்மை இருந்ததால், வழக்கை ரீ ஓப்பன் செய்து நான்கு பேரைக் கைது செய்திருக்கிறோம். விரைவில் சுரேஷ்குமாரும் கைது செய்யப்படுவார். பி.ஆர்.பி-க்கு ஆதரவாக செயல்பட்ட போலீஸார் இப்போது மதுரை மாவட்டத்தில் இல்லை. அவர்கள் எங்கிருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது' என்றார்.

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு