Published:Updated:

மீண்டும் தெர்மாகோல் திட்டம்...? அமைச்சர் தங்கமணி தொகுதியில் நகராட்சியின் அட்டகாசம்...!

மீண்டும் தெர்மாகோல் திட்டம்...? அமைச்சர் தங்கமணி தொகுதியில் நகராட்சியின் அட்டகாசம்...!
மீண்டும் தெர்மாகோல் திட்டம்...? அமைச்சர் தங்கமணி தொகுதியில் நகராட்சியின் அட்டகாசம்...!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் நகராட்சியின் சார்பில் கட்டப்பட்டுள்ள துணி துவைக்கும் கற்கள் மற்றும் நடைபாதைக் கட்டுமானம் தரமற்று கட்டப்பட்டுள்ளதாகவும், வேகமாகக் கையால் தள்ளினாலே விழுந்துவிடும் நிலையில் உள்ளதாகவும் புகார் தெரிவிக்கிறார்கள், அந்தப் பகுதி மக்கள். இதுகுறித்த விஷயம் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவான அமைச்சர் தங்கமணிக்கு உடனடியாகக் கொண்டுசெல்லப்பட்டு, தரமில்லாமல் கட்டப்பட்ட கட்டுமானத்தை அகற்றுமாறு உத்தரவிட்டார். ஆனால், இதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் இருக்கின்றனர் அதிகாரிகள். இதையடுத்து, தி.மு.க.வினர் பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் கொடுக்க, பிரச்னை தற்போது பூதாகரமாகக் கிளம்பியுள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை மீறி குமாரபாளையம் காவிரி ஆற்றங்கரையில் 36 லட்சம் ரூபாய் மதிப்பில் படித்துறை கட்டப்பட்டுள்ளது. இதில் துணி துவைக்கும் கற்கள் கட்டி, குடிநீர் இணைப்பையும் வழங்கினர் நகராட்சி அதிகாரிகள். இந்தப் படித்துறை கட்டியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக, அனைத்துக் கட்சியினரும் குற்றம்சாட்டினர். இந்தத் தகவல் அமைச்சர் தங்கமணிக்குத் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் தெர்மாகோல் திட்டம்...? அமைச்சர் தங்கமணி தொகுதியில் நகராட்சியின் அட்டகாசம்...!

"காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தற்போது உள்ள படித்துறை மற்றும் துணி துவைக்கும் கற்கள் அடித்துச்செல்லப்படும். எனவே, இந்தக் கட்டுமானத்தை அகற்றிவிடலாம்" என்று பொறியாளர்கள், அமைச்சர் தங்கமணியிடம் தெரிவிக்கவே, உடனே அதை  அகற்றுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மீண்டும் அந்தக் கட்டுமானத்தைக் கட்ட வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் இந்தக் கட்டுமானத்தை அகற்றினர். இந்த நிலையில் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி, காவிரி ஆற்றுக்குள் சுமார் 200 அடி தூரம் பொதுப்பணித்துறையினர் அனுமதி பெறாமல் படித்துறை கட்டிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

மீண்டும் தெர்மாகோல் திட்டம்...? அமைச்சர் தங்கமணி தொகுதியில் நகராட்சியின் அட்டகாசம்...!

தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சிலர், 'நீர்வழித்தடத்தை மறித்துக் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டுமானத்தை அகற்ற வேண்டும்' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்குப் புகார்களை அனுப்பியுள்ளனர். பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் பொதுப்பணித்துறையினர் நேரில் பார்வையிட்டு, விசாரணை செய்தால் இப்பிரச்னை இன்னும் தீவிரமடையும். இந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் இதைப்பற்றித் துளியும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

இந்தப் பிரச்னையைத் தொடக்கத்திலிருந்தே கிளப்பிவரும் தி.மு.க.வினரிடம் பேசியபோது, ``குமாரபாளையம் காவேரி நகர், மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் படித்துறையில் பெண்கள் உபயோகப்படுத்துவதற்காகவும், துணி துவைக்கவும் குமாரபாளையம் நகராட்சி சார்பாகப் படித்துறை கட்டப்பட்டது. இந்தப் படித்துறையின் கான்கிரீட்டுகள், சாதாரணமாக கைகளால் தட்டினாலே ஆடுகிறது. மிகவும் தரமற்று கட்டிமுடிக்கப்பட்டுள்ளதால் இதை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியாற்றில் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து, எந்தவொரு கட்டுமானத்தையும் கட்டக் கூடாது என்பது விதி. ஆற்றின் நீர்வழிப் பாதையை அடைத்து, கான்கிரீட் திட்டு கட்டுவதற்கு ஆறுகளைக் கண்காணிக்கும் பொதுப்பணித்துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. இந்தக் கட்டுமானத்தில் துணி துவைக்கத் தேவைப்படும் நீருக்கு, நகராட்சி போர்வெல்லிலிருந்து நீர் கொண்டுவரப்படுகிறது. இயற்கையாக நீர் இருக்கும் காவிரி ஆற்றில் கிட்டத்தட்ட தெர்மாகோல் திட்டம்போல செயற்கையாக துணி துவைப்பதற்கு நிரந்தமற்ற ஒரு செட்டப் தேவையா?

மீண்டும் தெர்மாகோல் திட்டம்...? அமைச்சர் தங்கமணி தொகுதியில் நகராட்சியின் அட்டகாசம்...!

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாமலும், மாநிலச் சுற்றுச்சூழல் துறை மற்றும் பொதுப்பணித்துறையின் அனுமதி பெறாமலும், நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமலும் இந்தக் கட்டுமானத்தை நகராட்சி அதிகாரிகள் கட்டியுள்ளனர். தற்போது ஆற்றுக்குள் கட்டடம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்தி, கட்டிய கான்கிரீட் தளங்களை அப்புறப்படுத்திவிட்டு ஆற்றுக்குமேல் கரையில் இதேபணியைச் செய்திட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை!" என்று கூறினர்.

இந்தக் கட்டுமானம் பற்றி நகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ``காவிரி ஆற்றில் நீர் வற்றினால் புல்லும் சகதியுமாக இருப்பதால் மக்கள் துயரம் அறிந்து, பொதுமக்கள் ஆற்றில் இறங்கி சிரமமின்றி துணிதுவைப்பதற்கும், குளிப்பதற்கும் வசதியாகக் குழாய் மூலம் நீர்வழித்தடம் அமைத்து, கரையோரமாகப் பொதுமக்களின் தேவைக்காக அமைச்சர் தங்கமணியின் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து கட்டப்பட்டது.

அந்தப் பணி முழுமையாக நிறைவுபெறாத சூழலில், துணி துவைக்கும் கற்கள் அமைக்கும் பணி மற்றும் இதர பணிகள் தரமற்ற வகையில் அவசரகதியில் கட்டப்பட்டுள்ளதாகச் சிலர் வேண்டுமென்றே பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். அதுபற்றி அமைச்சர் தங்கமணியிடம் எடுத்துக் கூறினோம். அவரின் உத்தரவின் பேரில், அந்தப் பணிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது போய்க் கொண்டிருக்கின்றன. மற்றபடி, படித்துறை கற்கள் அமைக்கப்பட்டதில் முறைகேடுகள் ஏதும் நிகழவில்லை!" என்றனர்.

Vikatan